தொடர்கதை - லாக் டவுன் – 05 - ஜெய்
வாசல் வரை நடந்ததே சாந்திக்கு பெரிய சாதனையாக இருந்தது... அதற்கே அவள் இருக்கும் சக்தி அனைத்தையும் பயன்படுத்த வேண்டியதாக இருந்தது.... அதற்குள் அவளுக்கு தலை சுற்ற ஆரம்பிக்க... இனிமேல் நடப்பது ஆபத்தென்பதை உணர்ந்தவள் அந்த இடத்திலேயே அமர்ந்துவிட்டாள்...
“என்னங்க என்னால சுத்தமா முடியலை... வலினால காலெடுத்து வச்சு நடந்தாலே தலை சுத்துது... தயவுசெய்து எப்படியாச்சும் வாங்களேன்....”, தன் கணவருக்கு மீண்டும் அழைத்து அழ, இம்முறை ஸ்பீக்கரில் போட்டிருந்ததால் அங்கிருந்த காவலதிகாரியும் அதைக் கேட்டார்....
“சார் நீங்களே கேட்டீங்க இல்லை... நான் பொய் சொல்லலை சார்... தயவுசெய்து என்னை வெளிய விடுங்க சார்...”
“தம்பி நானும் நீ பொய் சொல்லுறன்னு சொல்லலைப்பா... நீ இப்போ அங்க போறது நல்லதில்லை... உனக்கு இன்னும் தொத்து இருக்கா இல்லையான்னு டெஸ்ட் செய்யலை.... சப்போஸ் உனக்கு இருந்துச்சுன்னா அது உன் மனைவிக்கும் பரவ நிறைய வாய்ப்பிருக்கு... அதனாலதான் வேண்டாம்ன்னு சொல்லுறேன்....”
“சார் அதெல்லாம் எனக்கு இருக்காது சார்.... அந்த நோய்க்கு சொல்லுற ஒரு அறிகுறிக்கூட எனக்கு இல்லை... அப்புறம் எனக்கு எப்படி தொத்து இருக்கும்ன்னு சொல்றீங்க...”
“தம்பி இங்க நிறைய பேருக்கு எந்த வித அறிகுறியும் இருக்கறதில்லை... ஆனா தொத்து இருக்குது... அவங்களுக்கு ஒண்ணும் பண்ணலைனாலும் அவங்க மூலமா மத்தவங்களுக்கு பரவும்போது மத்தவங்களுக்கு அது அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கு... அதுவும் உன் மனைவி ரெண்டு உசிரா இருக்காங்க... இந்நேரம் அவங்களுக்கு வந்திச்சுன்னா அது குழந்தையும் சேர்த்து பாதிக்கும்....”
“சார் நீங்க வரப்போற பாதிப்பை பத்தி பேசறீங்க... நான் அவ இப்போ உயிரோட இருப்பாளான்னு தவிச்சுட்டு இருக்கேன்... தயவு செய்து என்னை அனுப்புங்க சார்....”
“தம்பி உன் தவிப்பு புரியுது... ஆனா உன்னை வெளிய விட முடியாது... அங்க அக்கம்பக்கம் யாரும் இல்லையா....”
“அந்தத் தெரு முனைல ஏதோ போராட்டம் நடக்குதாம் சார்... அத்தனை ஜனமும் அங்க இருக்குது... கூச்சல் அதிகம் இருக்கறதால நான் போன் போட்டாலும் யாருக்கும் கேக்க மாட்டேங்குது...”
“எந்த ஏரியா சொல்லு.... அங்க இருக்கற போலீஸ் ஸ்டேஷன்ல கேட்டு பார்க்கிறேன்...”
அவன் ஏரியா சொல்ல காவலர் அதன் அருகிலிருக்கும் காவல் நிலையத்திற்கு அழைக்க ஆரம்பித்தார்...