“என்னங்க அத்தைக்கு சுத்தமா முடியலைங்க.... என்ன கட்டு போட்டும் ரத்தம் நிக்க மாட்டேங்குது....”, ராமு மருத்துவரை காண உள் செல்வதற்குள் மறுபடி அழைத்திருந்தாள் ருக்கு...
“என்னைய உள்ள போய் பெரிய டாக்டர் கிட்ட கேக்க விடு ருக்கு... நான்தான் துணி வச்சு நிறுத்த பாருன்னு சொன்னேன் இல்லை....”
“ஏங்க சாதாரணமா இருந்தா இப்படித்தான் கூப்பிட்டு தொந்தரவு பண்ணுவேனா...”
“ரத்தம் ரொம்ப ஊத்துதுங்க... அத்தை வேற மயங்கிட்டாங்க.. ஷுகர் வேற இருக்குது.... அதுதான் ரொம்ப பயமா இருக்குது...”
“நான் டாக்டர்க்கிட்ட சொல்லிட்டுதான் கிளம்ப முடியும் ருக்கு... நீ ஒண்ணு பண்ணு... அம்மா எப்படியும் மயங்கித்தானே இருக்காங்க... நீ அவங்களை விட்டுட்டு போய் பக்கத்துல ஏதாவது டாக்டர் இருக்காரான்னு பார்த்து வீட்டுக்கு கூட்டிட்டு வர முடியுமான்னு பாரு...”
“அப்படியெல்லாம் அவங்களைத் தனியா விட்டுட்டு போக முடியாதுங்க... நீங்க சீக்கிரம் வரப்பாருங்க... நான் அதுக்குள்ள எங்கண்ணனுக்கு போன் பண்ணு வருதான்னு கேக்கறேன்....”
“சரி ருக்கு, நீ வை நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல திரும்ப கூப்பிடறேன்...”, ராமு அலைபேசியை வைத்துவிட்டு பெரிய மருத்துவரை காண செல்ல அவனின் ஆம்புலன்ஸ் வண்டியிலிருந்த அவசர அலை பேசி அடிக்க ஆரம்பித்தது....
நீரஜா இரண்டு நோயாளிகள் மட்டுமே சீக்கிரம் பார்த்துவிட்டு கிளம்பலாம் என்று நினைக்க, அவர் தன் அத்தையுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே மடமடவென்று மேலும் ஐந்து பேர் வந்துவிட்டார்கள்...
அன்று பார்த்து வேறு மகப்பேறு மருத்துவரும் இல்லாததால் வேறு வழியே இல்லாமல் நீரஜாவே அனைவரையும் பார்க்க வேண்டியதாக போய்விட்டது...
அடுத்த மூன்று நோயாளிகள் பார்த்து முடிய மறுபடி அவளின் அத்தை அழைத்து விட்டார்...
“என்னாச்சு அத்தை... ராகுல் ஏதாவது தொல்லை பண்ணுறானா...”
“நீ எங்க இருக்க நீரஜா... கிளம்பிட்டியா....”
“இல்லைங்க அத்தை... உங்கக்கிட்ட பேசிட்டு இருக்கும்போதே இன்னும் கொஞ்சம் பேர் வந்துட்டாங்க... இன்னைக்குன்னு பார்த்து இன்னொரு டாக்டரும் லீவ் போட்டுட்டாங்க... வேற வழியே இல்லை அத்தை... இருக்கற அத்தனை பேரையும் பார்த்துட்டுத்தான் கிளம்ப முடியும்... ராகுலுக்கு இப்போ எப்படி இருக்குது அத்தை...”
“என்னம்மா இப்படி சொல்ற... பையனுக்கு முடியலை கிளம்பணும்ன்னு சொல்லிட்டு கிளம்ப வேண்டியதுதானே...”