பணத்தை தான் வாங்கிக் கொள்ளாமல் அதை அவரோட அப்பா கைல கொண்டு போய்ச் சேர்த்தாரே முரளி..அவர் அதை விட கிரேட்!...இப்படியெல்லாம் கூட நல்லவங்க இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதையே நான் ஆச்சரியமாய்ப் பார்க்கிறேன்” என்றாள் அந்த நித்யா.
“நீயும் நன்றியை மறக்காமல் இருக்கியே...நீயும் கூட கிரேட்தாம்மா” என்றார் தங்கவேலு.
அடுத்த சில நிமிடங்கள் அமைதியாயிருந்த நித்யா, “அண்ணா...நான் முரளியைப் பார்க்கணும்...முடியுமா?” சன்னக் குரலில் கேட்டாள்.
“அடடே...உனக்கு விஷயமே தெரியாதாம்மா...முரளி இப்ப கோயமுத்தூரிலேயே இல்லை!...அவனோட சொந்த ஊருக்குப் போயிட்டான்!”
அதைக் கேட்ட்தும் அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு சோக ரேகை ஓடியதைக் கவனமாய்ப் படித்தார் தங்கவேலு.
“அவரோட...அம்மா...தங்கச்சி...எல்லோரும் இங்கதானே இருந்தாங்க?” என்று அந்த நித்யா கேட்க,
“ஆமாம்...இப்பக் குடும்பத்தோட எல்லோருமே கிளம்பிப் போயிட்டாங்க!” என்ற தங்கவேலு, “ஆமாம்...நீ எதுக்கும்மா இப்ப முரளியைப் பார்க்கணும்!னு சொல்றே?” கேட்டார்.
எதையோ சொல்ல வந்தவள், அதைச் சொல்லாமல் விட்டு விட்டு, “இல்லை...சும்மாத்தான்...” என்றாள்.
லாரி டிரைவராக இருந்தாலும், மனிதர்களையும், மனித மனங்களையும் படிப்பதில் வல்லவரான தங்கவேலு, அந்த நித்யாவின் மனதையும் படித்தார். அங்கே, “காதல்” பாடங்கள் அதிகம் இருப்பதைக் கண்டறிந்தார்.
“இல்லையே?...உன் முகத்துல வேற என்னமோ தெரியுதே?” சும்மாவாகிலும் சொன்னார்.