ஆனால் அவள் நினைத்ததுப் போல வேலை கிடைப்பது என்பது சுலபமாக இல்லை.
அந்த காலக்கட்டத்தில் விஸா பயன்படுத்தி வேலை பெறுபவர்களை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக விஸா பெறுவதற்கான தொகை பல மடங்கு அதிகப் படுத்த பட்டு இருந்தது. இதனால் பல வேலை வாய்ப்பு விளம்பரங்களிலேயே விசா வைத்திருப்பவர்களை தேர்வு செய்ய இயலாது என்று நேரடியாக குறிப்பிட்டு இருந்தார்கள்...
இதற்காக எல்லாம் மனம் தளர்ந்து போய் விடாமல் தொடர்ந்து வேலை தேடும் முயற்சியை தொடர்ந்தாள் மஞ்சு...
“மஞ்சு, உன் விஸா எக்ஸ்டென்ஷன் பத்தி பேசனும்...” என்று கௌரவ் அவளிடம் தொடங்கியப் போது தான் அவளின் மூன்று வருட விசா முடிய இன்னும் சில மாதங்கள் இருப்பது மஞ்சுவிற்கு நினைவே வந்தது...
கௌரவின் பார்வை பற்றி தெரிந்ததால் எழுந்து நின்றுக் கொண்டு,
“எஸ் கௌரவ், நானே உங்க கிட்ட பேசனும்னு இருந்தேன்...” என்றாள்.
“உன் ரோலை நீ சரியா தான் செய்ற. கிளைன்ட் கிட்ட இருந்து நல்ல ஃபீட்பேக் வந்திருக்கு. நம்ம ஆஃப்ஷோர்ல ரொட்டேஷன் பாலிஸி வச்சிருக்காங்க. எல்லோருக்கும் ஆப்பர்ச்யூனிட்டி கொடுக்கனும்னு நினைக்குறாங்க. அதையும் தப்புன்னு சொல்ல முடியாது. லெட்ஸ் சீ ஹொவ் இட் கோஸ்!” என்றான் கௌரவ் தொட்டும் தொடாமலும்..!
இருக்கும் தலைவலிகளுடன் விஸா எனும் புது தலைவலி வந்து சேர்ந்திருப்பது மஞ்சுவிற்கு புரிந்தது!
விசா வைத்திருப்பவர்களுக்கு வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கிறது! இதில் புதிதாக விசா ஸ்பான்சர் தேடுவது என்பது சுவரில் முட்டிக் கொள்ளும் வேலை தான்!