வீட்டு மாடியில் நின்று காஃபி அருந்தியப் படி சூரிய உதயத்தை ரசித்து கொண்டிருந்தாள் கங்கா. நிலவளமும் நீர்வளமும் நிறைந்த அந்த மணிமங்கல கிராமத்தின் பார்க்கும் திசை எல்லாம் பச்சை பசேலென கண்ணை கவர்ந்தது. அந்த பச்சை நிறத்துடன், இளஞ்சூரியனின் மஞ்சளும் ஆரஞ்சும் கலந்த நிறம் மனதை கொள்ளை கொள்வதாக இருந்தது. காலையில் அம்மா தரும் காஃபியுடன் சூரியோதயத்தை ரசிப்பது கங்காவிடம் பல வருடங்களாகவே இருந்து வரும் பழக்கம். சூரியனின் ஒளியில் மெல்ல இருள் விலகுவதை காண்பது அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
தென் தமிழ்நாட்டில், நாகர்கோவிலை அடுத்து இருந்த அந்த மணிமங்கலம் கிராமத்தில் செல்வமும் செல்வாக்கும் பெற்று விளங்கியது கங்காவின் குடும்பம். கங்கா நாகர்கோவிலில் இருந்த கல்லூரியில் பி.எஸ்ஸி கணிதம் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தாள். கையிலிருந்த காஃபி காலியாகவும் துள்ளல் நடையுடன் கீழே இறங்கி வந்தாள்.
அவளுடைய முதல் அண்ணன் சக்தியின் மனைவி செல்வி, சமையலறையில் பரபரப்பாக காலை உணவு தயாரித்துக் கொண்டிருந்தாள். சமையலறைக்கு சென்று டம்ப்ளரை வைத்து விட்டு கல்லூரிக்கு செல்ல தயாராக தொடங்கினாள் கங்கா.
அவள் கிளம்பி வந்த போது, செல்வி ஸ்பெஷலாக செய்திருந்த தோசையை சக்தி ஒரு வெட்டு வெட்டிக் கொண்டிருந்தான்! அம்மா சுலோச்சனா அவனருகில் அமர்ந்து பரிமாறியப் படி அவனுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“அம்மா, எனக்கும் தோசை ரெடியா?” என்று கேட்டுக் கொண்டே சென்றாள் கங்கா.
“எல்லாம் ரெடியா தான் இருக்கு வா வா...”
காலையில் எழுந்து எல்லா வேலையும் செய்வது செல்வி ஆனால் இந்த பரிமாறும் வேலையை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தாள் சுலோச்சனா. அம்மா ‘ஸ்மார்ட்’ தான் என ,மனதுள் மெச்சியபடி டைனிங் டேபிளில் சக்தி அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து தோசையை எடுத்து சாப்பிட தொடங்கினாள் கங்கா...
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.