”பரவாயில்லை வீடு புதுசு போலதான் இருக்கு” என சொல்லிக் கொண்டே சுற்றி முற்றிபார்த்து அலறினான்
”அய்யோ அங்க பாருங்க அங்க பாருங்க எல்லாரும் பாருங்க” என கத்த அனைவரும் என்னவோ ஏதோவென பார்க்க
”எவ்வளவு ஒட்டடை, கல்யாணம் ஆன வீடு போலவா இருக்கு எப்படி இவ்ளோ ஒட்டடை வந்திருக்கு, இதை முதல்ல சுத்தம் செய்யனும்” என ஆரம்பித்தான் கொம்பன் அதற்கு சண்முகமோ
”அதுக்கென்ன மாப்பிள்ளை வேலைக்கு ஆளுங்க இருக்காங்க அவங்ககிட்ட சொல்லிட்டாப் போச்சி அவங்க சுத்தம் செய்வாங்க”
”அப்படியா சரி அவங்களை கூப்பிடுங்க நானே சொல்றேன்” என சொல்ல சண்முகமும் வேலையாட்களை அழைத்தார்.
அவர்களிடம் கொம்பனே ஒட்டடை பற்றி கூறி சுத்தம் செய்ய கட்டளையிட அவர்களும் அவனது கட்டளைக்கு இணங்கி உடனே வேலையில் இறங்கினார்கள்.
கொம்பனோ அந்த வீட்டை ஒவ்வொரு அடியாக ஆராய ஆரம்பித்தான், இது ஏன் இங்கு இருக்கிறது அது ஏன் அங்கு இருக்கிறது, இது இங்கு வேண்டாம் இது தேவையில்லை, அது வேண்டாம் என அங்கிருந்த பழைய பொருட்களை வெளியேற்றினான், தேவையில்லை என அவனாக கருதிய பொருட்களை ஸ்டோர் ரூமில் போட வைத்தான்.
அவனது வீடு போல இந்த வீடும் இருக்க வேண்டும் என நினைத்து அதற்கேற்ப மாற்றங்களை புகுத்தினான், அவனது தாய் எப்படி வீட்டை வைத்திருப்பார் என அவனுக்கு நன்கு தெரியும், அதே போல இந்த வீட்டையும் மாற்றிவிட்டால் தனக்கு தனது வீட்டு ஞாபகம் வராமல் இருக்கும் நமது வீடு என்ற எண்ணம் வந்தால் நிம்மதியாக உறங்கலாம் என்ற மனக்கணக்கில் மடமடவென காரியத்தில் இறங்கினான் கொம்பன்.