இப்படி ஒரு சிக்கல் வரும் என அவள் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என தெரியாமல் திகைத்த நேரம் சட்டென உள் நுழைந்தான் வேங்கையன்
”அப்பா போதும்பா நீங்க முடிவு பண்ணா போதுமா வாழப்போறது நாங்க, எனக்கு ஜானகிக்கும் மனசு ஒத்துப்போகலை, கல்யாணம் ஆயிட்டா அதுக்குன்னு பிடிக்காத வாழ்க்கையை எப்படி விரும்பி வாழறது, இதுக்கு ஜானகியும் ஒத்துக்க மாட்டா, அவளோட விருப்பம் இல்லாம என்னாலயும் அவளோட வாழ முடியாதுப்பா” என பொங்கினான்.
அதுவரை தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என இருந்தவன் இன்று எதிர்த்து பேசியது வீரசிங்கத்திற்கே ஆச்சர்யத்தை அளித்தது, மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.
”என் முன்னாடியே நின்னு எதிர்த்து பேசற அளவுக்கு துணிச்சல் வந்துடுச்சா உனக்கு” என கர்ஜிக்க அதற்கு சற்று பயந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் துணிந்து பேசினான் வேங்கையன்
”ஆமா எல்லாம் கையை விட்டு போனபின்னாடி என்னத்த செய்றது, நம்ம வீட்டு மானத்தை கோர்ட் வரைக்கும் இழுத்துவிட்டவ உங்களுக்கு பெரிசா போயிட்டாளா, உங்களோட வறட்டு கௌரவத்துக்காக என்னையும் ஜானகியையும் ஏன் பழிவாங்கறீங்க, அவளுக்குப் பிடிச்ச வாழ்க்கையை அவள் வாழட்டுமே விட்டுடுங்களேன்“
”அதெப்படி விடறது, நீ அவளை தொட்டு தாலிகட்டியிருக்க, அந்த உறவு என்னிக்குமே மாறாது”
”இரண்டு பேரோட மனசும் ஒத்துப்போகாதப்ப அந்த தாலிக்கு என்ன மதிப்பிருக்கு” என வேங்கையன் கேட்க வீரசிங்கத்திற்கு வந்ததே கோபம், சட்டென அவனது கன்னத்தில் பளார் என ஒரு அறைவிட அதில் வேங்கையன் திணறினான். அவ்விடத்தில் பலத்த அமைதி நிலவியது. இன்னும் மஹதி வாசலுக்கு அந்த பக்கமே நின்றிருந்தாள். என்ன செய்யலாம் ஏது செய்யலாம் என பலமாக யோசிக்க மங்களம் இம்முறை கோபத்தில் வெடித்தார்
”எதுக்கு என் புள்ளையை அடிச்சீங்க” என கத்த அதில் வீரசிங்கமே அதிர்ந்தார்
”என்னடி கத்தற”