வீரசிங்கமோ மஹதியிடம்
”யார்மா நீ, இங்க என்ன நடக்குதுன்னு தெரியாம நீ பாட்டுக்கு உள்ள வர்ற, இதப்பாரும்மா என் பையன் கல்யாணமானவன், இதோ இருக்காளே இவள்தான் ஜானகி, அவனோட பொஞ்சாதி அது தெரியுமா உனக்கு, இல்லை எதுவும் சொல்லாம உன்னை கூட்டிட்டு வந்துட்டாங்களாமா” என கேட்க அவளோ
”எனக்கு எல்லாம் தெரியும் மாமா” என்றாள் மென்மையாக அப்படியொரு அடக்கத்துடன்.
”தெரிஞ்சி வந்திருக்கியா, புத்தியில்லை உனக்கு கிளம்பு இங்கிருந்து போ வெளிய” என சத்தம் போட அதற்குள் மங்களம் வந்துவிட்டார்.
சட்டென ஒரு ஓரமாக மறைவிடத்தில் வைத்திருந்த அருவாளை எடுத்துக் கொண்டு தன் கணவரின் முன்பு நின்றார் உக்கிரமாக
”என்ன” என கர்ஜிக்க அதில் அவர் அரண்டே போனார்
”வேங்கை” என கத்த உடனே வேங்கையன் வந்தான்
”அம்மா” என அச்சத்துடன் அழைக்க
”இந்தா அருவா யாராவது சின்ன மருமகளை விரட்ட நினைச்சா, கொஞ்சம் கூட யோசிக்காத, விரட்டினவங்க கையை வெட்டி எடுத்துடு, அது உன் அப்பனா இருந்தாலும் பரவாயில்லை” என சொல்லி அருவாளை தர அதை வாங்கிய வேங்கயைன் உடல் நடுங்கியது.
வீரசிங்கம் அதிர்ச்சியில் ஒரு அடி பின்னால் சென்றார்.
மங்களத்தின் உக்கிரம் குறையவில்லை, அதைக்கண்ட மஹதியோ சட்டென அவரின் காலில் விழுந்து
”என்னை ஆசிர்வாதம் செய்ங்க அத்தை” என்றாள் அதில் மங்களத்தின் கோபம் தணிந்தது.