”ஆமாம்” என சொல்லியவள்
”யார்டி நீ எனக்கு நீ போட்டியா போடி வெளிய வெட்கம் கெட்டவளே” என சத்தமாகச் சொல்ல மஹதியோ
”என்ன இப்படி திட்டற”
”நீதானே திட்டச் சொன்ன”
”அதுக்குன்னு இப்படியா கொஞ்சம் சாப்டா திட்டுடி”
”இப்படி திட்டினாதான் வெளிய இருக்கறவங்க நம்புவாங்க பேசாம இரு” என அதட்டிவிட்டு அவளை பிடித்து இழுத்துக் கொண்டு அறையை விட்டு வெளியேற வீரசிங்கம், மங்களம், வேங்கையன் மூவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்
”எவ்ளோ சொல்லியும் என் பேச்சை மதிக்காம இங்கதான் இருப்பேன்னு சொல்வ, அவ்ளோ திமிராடி உனக்கு” என திட்ட உடனே மஹதியோ
”அக்கா என்னை விரட்டாதீங்க அக்கா, எப்படியிருந்தாலும் நீங்க இங்கிருந்து போகதானே போறீங்க, அப்புறம் நான் இங்க இருந்தா உங்களுக்கென்ன கஷ்டம் வந்தது அக்கா” என சொல்ல வேங்கையனோ மஹதியின் நடிப்பைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான், மங்களமோ நடப்பது உண்மை என்றே நினைத்துவிட்டார், வீரசிங்கம்கூட அதிர்ந்துப் போனார்
”சின்ன மருமகளாம் சின்ன மருமகள், எங்கிருந்தோ வந்து உரிமை பாராட்டறியா, நான் இங்க இருக்கேன் இல்லை போறேன் அதுக்காக உன்னை இங்க நான் தங்க விடமாட்டேன்”
”அக்கா என்னை விரட்டாதீங்க அக்கா, என் மேல இரக்கம் காட்டுங்க அக்கா” என அவள் அலற அதற்குள் வாசலிடம் வந்துவிட்டார்கள் இருவரும் சட்டென வீரசிங்கம் தடுத்தார்