”இல்லை மாதவி அன்பா நடந்துக்கற ஸ்டேஜை எல்லாரும் தாண்டிட்டாங்க இப்ப நான் அன்பா பேசினாலும் பிரயோசனமில்லை கொஞ்சமாவது கடுமையா நடந்துக்கிட்டாதான் மாணவர்கள் ஒழுக்கமா இருப்பாங்க”
”என்னவோ நீ சொல்றதும் சரின்னுதான்னு படுது ஆனா இங்க நீ நினைச்சது எதுவும் நடக்கலையே தோல்வியில முடிஞ்சது உன்னோட திட்டம்”
”நான் எத்தனையோ தோல்விகளை சந்திச்சிருக்கேன் மாதவி இதெல்லாம் என்னை அசைச்சிடாது, நான் தெளிவா இருக்கேன் யாருமில்லைன்னா என்ன என்னோட வேலைகளை நான் செய்றேன், சரி நீ கிளம்பு உனக்கு நேரமாகுது இன்னிக்கு தாளாளர் கூட இங்க வரப்போறதில்லை, அதனால நேரத்தோட கம்பெனிக்கு போ”
”சரி கண்ணகி நீ எதையும் நினைச்சி வருத்தப்படாத, மாணவர்கள்தானே விட்டுப்பிடிக்கலாம் சரியா நான் கிளம்பறேன்” என சொல்லிய நேரம் பேருந்து சத்தம் கேட்க என்னவென பார்த்தாள்.
கல்லூரி மாணவர்கள் வரிசையாக பேருந்தில் இருந்து இறங்கி கல்லூரிக்குள் வந்தவண்ணம் இருந்தார்கள் அதைக்கண்ட மாதவி வியப்பில் வாய் பிளந்தாள்
”மாதவி” என அவளை உலுக்கினாள் கண்ணகி
”கண்ணகி நீ கிரேட் உன்னை தோழியை அடைஞ்சதுக்கு நான் பெருமைப்படறேன் சூப்பர்டி” என பாராட்டினாள்.
மாணவர்களுக்கு பின்னால் ஆசிரியர்களும் வந்து சேர்ந்தார்கள். மாணவர்கள் கண்ணகியை கடக்கும் போது மரியாதையுடன் வணக்கம் வைத்தார்கள், அதில் கண்ணகியும் பதில் வணக்கம் சொன்னாள் மாதவிக்கு வியப்பாக இருந்தது
”எலியும் பூனையுமா இருந்த மாணவர்களும் நீயும் டக்குன்னு ஒண்ணாயிட்டீங்களே”