”இதப்பாரு நீ மட்டும் செக் பண்ணு கூட தாளாளரையும் சேர்த்துக்காத”
”ஏன்”
”இந்த ஒரு மாசமா நான் நிம்மதியா இருக்கேன் அந்தாளும் யார்மேலயும் கோபப்படாம இருக்காரு, கம்பெனியே நிம்மதியா வேலை செய்யுது, நீ பாட்டுக்கு புது பிரச்சனையை கிளப்பி விட்டேன்னு வையேன் அப்புறம் அவருக்கு கோபம் வந்துடும், கோபத்தோட என்கிட்ட வந்து நிப்பாரு, என் வேலை கெடும் அதான் சொல்றேன்”
”சரிடி சரி சரி கிளம்பலாமா”
”ம் வா போலாம்” என அவளை அழைத்துக் கொண்டு நேராக கல்லூரிக்கு தன் ஸ்கூட்டியில் பயணித்தாள் மாதவி.
செல்லும் வழியெங்கும் மாதவி கண்ணகியிடம் காலேஜ் பற்றி தனக்கு எழுந்த சந்தேகங்களை சொல்லியபடியே சென்றாள், அவள் சொல்வதை மனதில் பதிய வைத்துக் கொண்டாள் கண்ணகி.
காலேஜ் வந்தது. கண்ணகி இறங்கிக் கொண்டதும் மாதவி தன் கம்பெனி நோக்கி விரைந்தாள்.
கண்ணகியோ பலத்த சிந்தனையுடன் கல்லூரிக்குள் சென்றாள், அவள் பார்வைக்கு அனைத்தும் சரியாக இருப்பது போன்றே தோன்றியது, ஆனாலும் மாதவி சொன்னது மனதில் நெருடலாக இருக்கவே எதற்கும் செக் பண்ணிவிடலாம் என முடிவெடுத்தாள்.
அதற்காகவே தனது வேலைகளை தள்ளிவைத்துவிட்டு ஒவ்வொரு வகுப்பாகச் செல்ல கிளம்பினாள். அந்நேரம் தாளாளர் கோவலன் வந்து இறங்கினான், கண்ணகியின் முகம் கலவரமாக இருப்பதைக்கண்டு திடுக்கிட்டான், அவசரமாக அவளிடம் வந்தவன்
”என்னாச்சி ஏதாவது பிரச்சனை பண்ணிட்டியா” என கேட்க அவளோ அவனைப் பார்த்து முறைத்து