”ஓஹோ குபேரன் மாமா வரனுமா உனக்கு”
”ஆமாம்”
”உன் பேச்சைக் கேட்டு அவரு ஏமாந்தாரு, அவர் பேச்சைக் கேட்டு நானும் ஏமாந்தேன், இனி யாரும் ஏமாற நான் விடறதாயில்லை கிளம்பு” என சத்தம் போட வீட்டில் இருந்த அனைவருமே அங்கு ஒன்று கூடினார்கள்.
வேங்கையனின் கோபத்தைக்கண்ட மங்களத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.
”வேங்கையா எதுக்கு இப்படி சத்தம் போடற சின்ன மருமகள் என்னத்த உன்னை ஏமாத்திட்டாள்ன்னு அவளை விரட்டப்பார்க்கற“
”அம்மா உனக்கு விசயமே தெரியாது, இவள் யாரோ கிடையாது ஜானகியோட உயிர் தோழி” என சொல்ல மங்களம் வியந்தார்.
மஹதியோ வருத்தமுடன் கைகூப்பி நின்று
”என்னை மன்னிச்சிடுங்க, நான் ஒரு நல்ல விசயத்துக்காக இங்க வந்தேன், ஆனா வந்த இடத்தில என்னென்னமோ நடந்துப் போச்சி, தப்பு என் மேலதான், என்னால யாருக்கும் எந்த பிரச்சனையும் வரவேணாம் நான் கிளம்பறேன்” என சொல்ல மங்களம் விடவில்லை
”இரும்மா பொறு இங்க என்ன நடக்குது எனக்குப் புரியலையே, நீ பாட்டுக்கு போறேங்கற எதுக்கு போகனும், இப்ப என்ன நீ ஜானகியோட தோழியா சரி இருந்துட்டுப் போ, அதுக்காக ஏன் வீட்டை விட்டுப் போகனும்” என சொல்ல வேங்கையனோ
”அய்யோ அம்மா இன்னுமா உனக்குப் புரியலை, ஜானகியையும் என்னையும் சேர்த்து வைக்கறதுக்காக இவள் இங்க நாடகமாட வந்தா”
”நாடகமா”