”என்ன அர்த்தம் நான் அங்க பிரின்சிபால் இல்லையா, கல்லூரி நடந்தாலும் நடக்கலைன்னாலும் அவசியம் நான் போகனும் மாதவி”
”அப்ப நானு”
”நீ ரெஸ்ட் எடு லீவு முடிஞ்ச பின்னாடி வந்தா போதும்” என சொல்ல அவளும் சரியென தலையாட்டிவிட்டு உடை மாற்றிக் கொள்ள தனது அலமாரியை திறந்து அலசினாள், அதில் வேறு ஒரு உடையை எடுக்கும் போது கோவலன் எடுத்து தந்த புடவை தவறி தரையில் விழ அதை எடுத்துப் பார்த்து வியந்தாள்
”அட இது அந்த கோவலன் எடுத்துக் கொடுத்ததாச்சே, ஆமாம்ல போன மாசத்திலதானே அவருக்கு பிறந்தநாள்னு சொன்னாரு, மாசமே முடிஞ்சிடுச்சி சே மறந்தே போயிட்டோம் இப்ப என்ன செய்றது, அவர்கூட மறுபடியும் பேசலாமா வேணாமா வேணாம் இப்பவே நல்லாதான் இருக்கு இப்படியே போகட்டும்” என நினைத்துவிட்டு அந்த புடவையை மறுபடியும் பீரோவில் வைத்துவிட்டு தன் வேலையை கவனிக்கச் சென்றாள்.
மறுநாளில் இருந்து கண்ணகி கல்லூரிக்குச் சென்றாள். பரிட்சை முடிந்ததால் ஈஸ்வரமூர்த்தி வீட்டில் ஓய்வெடுத்தார். கோவலனோ தாத்தாவிடம்
”தாத்தா பரிட்சையெல்லாம் எப்படி நடந்தது”
”நல்லபடியா நடந்தது கண்டிப்பா எல்லா மாணவர்களும் பாஸாயிடுவாங்க”
”எனக்கு நம்பிக்கையில்லை”
”என்னாச்சி உனக்கு ஏன் இப்படி பேசற“
”பின்ன ஒரு மாசத்துல என்னத்த பாடம் எடுத்திருப்பாங்க நான் சொல்றேன் கண்டிப்பா மாணவர்கள்ல நிறைய பேர் பெயில் ஆவாங்க”