எல்லாம் மறந்து இங்கே வந்து நிப்பார் பாரு! ஆம்பளைங்க எல்லாம் பேசுறது தான், மத்தப்படி மனைவியை பிரிஞ்சு அவங்களால நிறைய நாள் இருக்க முடியாது...”
பவித்ராவிற்கு என்ன சொல்வது என்று புரியவில்லை! விவேக் அப்படி வந்தால் நன்றாக தான் இருக்கும்... ஆனால் நடந்ததை வைத்து பார்க்கும் போது அதெல்லாம் நடக்கும் விஷயமாக தெரியவில்லை என நினைத்துக் கொண்டே,
“நான் பாரதியை கூப்பிட்டுப் பார்க்குறேன் அத்தை... அவளுக்கு பிடிச்சா கிளம்பி வரட்டும்...” என்றாள்!
டேபிளின் மீது வைத்திருந்த தன் செல்ஃபோனை கையில் எடுத்து அவள் பாரதியின் நம்பரை டையல் செய்ய தொடங்கியபோது, கமலா மீண்டும் அவளை அழைத்தாள்.
“பவித்ரா, பாரதியா அப்படி கிளம்பி வந்தா நல்லா இருக்காது... நீ சொன்னது போல இப்போ அவளுக்கு லீவ் தானே? உனக்கும் உதவி வேணும்னு சொல்ற, ரமேஷ் கிட்ட சொல்லி நாளைக்கு நாம நேராவே போய் கூப்பிட்டுப் பார்ப்போமே?”
“ரொம்ப நல்ல ஐடியா அத்தை! ஆனால் நாளைக்கு ஏன்? இன்னைக்கு சாயந்திரமே போகலாமே? அவர் கூட வரணும்னு இல்லையே...”
பவித்ராவை மீண்டும் ஒரு பார்வை பார்த்து விட்டு, எதையோ புரிந்துக் கொண்டது போல்,
“சரி, நாம இரண்டுப் பேரும் ஒரு அஞ்சு மணி போல போவோம்...” என்றாள் கமலா!
🌼🌸❀✿🌷
கமலாவும், பவித்ராவும், குழந்தை நித்திலாவுடன் விவேக்கின் வீட்டை அடைந்த போது, கற்பகமும், விவேக்கும் ஹாலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். இவர்கள் மூவரையும் ஆச்சர்யத்துடன் வரவேற்ற கற்பகம், அவர்களுடன் எப்போதும் போல் அன்புடன் பேசி நலம் விசாரித்தாள்.