”நான் அவங்களை சொல்லலை ஆண்டாள் அம்மாவை சொன்னேன் அவங்க பாவம்பா”
”என்னடா உளர்ற“
”அவங்க என்னோட உண்மையான அம்மாவே இல்லை ஆனா, என்மேல அவ்ளோ பாசம் பொழிஞ்சாங்க ஆனா, நான் சொத்துக்காக இரக்கமில்லாம என் அம்மாவை இதே கையால இதே கையால” என எதோ சொல்ல வந்து சொல்ல முடியாமல் விக்கி விக்கி அழ சங்கமேஸ்வரனுக்கு திக்திக்கென்றது
”டேய் எதையும் உளறி வைக்காதடா பாவி யார் காதுலயாவது விழுந்தா உன் கதி அதோ கதிதான் பேசாம இருடா” என அடக்கலானார்
மறுபக்கம் திருப்தியாக சாப்பிட்டு முடித்து அவரவர்கள் தங்கள் அறைக்குச் சென்றார்கள். அகத்தியன் நாச்சியாவின் பெற்றோருக்கு நல்ல அறையை தந்தான். அதில் அவர்கள் கவலை மறந்து உறங்குவதை பார்த்தபடி இருந்த நாச்சியாவிடம் வந்த அகத்தியனோ மெதுவாக பேசினான்
”என்ன பார்க்கற நாச்சியா“
”அவங்க எவ்ளோ நிம்மதியா தூங்கறாங்கன்னு பார்த்தீங்களா”
”பின்ன உனக்கு ஆபத்து வராம இவ்ளோ பெரிய வீட்ல கல்யாணம் ஆகி வந்திருக்கல்ல அந்த சந்தோஷத்தில நிம்மதியா தூங்கறாங்க போல”
”அதுவும்தான் ஆனா, இன்னொரு விசயமும் இருக்கு பல வருஷங்களா அவங்க எதிர்பார்த்த அன்பும் அரவணைப்பும் உங்க மூலமா கிடைச்சதால அவங்க நிம்மதியா தூங்கறாங்க“
”நீ என்ன சொல்ற எனக்குப் புரியலையே”
”ஒண்ணும் இல்லை வாங்க போய் தூங்கலாம்” என அழைக்க அவனும் சரியென சென்றான்.