தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்... - 73 - பிந்து வினோத்
73. எந்தன் உயிரே... எந்தன் உயிரே...
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தன் அறைக் கதவு திறந்த சத்தம் கேட்டு கோபத்துடன் நிமிர்ந்த விவேக், லாவண்யாவை அங்கே பார்த்ததும் ஒரு வினாடி திகைத்துப் போனான்! ஆனாலும், அவசரமாக சுதாரித்துக் கொண்டு, அவளை வரவேற்றான்!
“லாவி! வா வா லாவி... சாரி, ஒரு முக்கியமான வேலையில் இருந்தேன்...”
“பேச்செல்லாம் நல்லா தான் இருக்கு விவேக்! ஆனால் ஃபோன் செஞ்சா தான் மேனேஜர் சார் எடுக்க கூட மாட்டீங்க...???” லாவண்யா நண்பனை ஆராய்வதுப் போல பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“இல்லைப்பா, கொஞ்சம் பிஸியா இருந்தேன்...”
“அப்படியா என்ன? இரண்டு மாசமாவே நீ இப்படி தான் இருக்கேன்னு கேள்விப் பட்டேன்... ஆமாம், இந்த போட்டோல இருக்குறது தான் பாரதியா?”
லாவண்யாவின் பேச்சைக் கேட்டு மேஜை மீதிருந்த பாரதியின் சிறிய புகைப்படத்தின் பக்கம் பார்வையை திருப்பிய விவேக்கின் முகம் தானாக கனிந்தது!
“ஆமாம் லாவி... இது தான் பாரதி...”
“ஆச்சர்யமா இருக்கே... பணத்துக்காக கல்யாணம் செய்துட்டு, பிடிக்கலைன்னு டையலாக் எல்லாம் வேற சொல்லிட்டு, போட்டோவை டேபிள்ல வச்சிருக்கீயே?”
‘நக்கலாக’ லாவண்யா கேட்ட கேள்வியில் திகைத்துப் போனான் விவேக்!
“லாவி?” என்றப் போது அந்த அதிர்ச்சி அவனின் குரலிலும் இருந்தது!
“நான் சிங்கப்பூர்ல இருந்து சென்னை வந்து சேர்ந்தேனோ இல்லையோ... முதல் நாள்ல இருந்தே உன்னைப் பத்தி கம்ப்ளேயின்ட்டா கேட்டு கேட்டு என் காதுல இருந்து ரத்தமா வருது! என்னடா விவேக் விஷயம்? உனக்கு என்ன பிரச்சனை?”