கார் கண்ணில் இருந்து மறைந்தப் பிறகும் அது சென்ற திசையை பார்த்தப்படி நின்றிருந்தாள் கிருத்திகா. அவளின் அருகே வந்த தியாகு,
“அவங்களை திரும்ப கொட்ட முடியலைன்னு கோபமா? வேணும்னா என்னை கொட்டு...” என்றான் மற்றவர்களுக்கு கேட்காத மெல்லியக் குரலில்!
அவனை திரும்பி சூடாக ஒருப் பார்வை பார்த்த கிருத்திகா, பதில் எதுவும் சொல்லாமல் திரும்பி நடந்தாள்!
🌼🌸❀✿🌷
“குழந்தையை இங்கே டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போகனும்... அந்த டாக்டர் கொடுத்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் பத்திரமா உன் கிட்ட இருக்கு தானே விஜய்?” என மூத்த மகனிடம் கேட்டார் ரங்கராஜன்.
“இருக்கு சித்தப்பா... ஆனால் அதை எல்லாம் தியாகு பார்த்துப்பான்... நாம நம்ம வீட்டுக்கு போய் நம்ம வேலையை இனி மேலாவது பார்ப்போம்...” சொன்ன விஜய் தன் சித்தியின் அருகே இருந்த கீதாவை ஒரு காதல் பார்வை பார்த்துக் கொண்டே தான் சொன்னான்!
கீதா பதிலுக்கு அவனை பார்த்து பொய்யாக முறைத்தாள்!
இந்த காதல் காட்சிகள் அவர்களுக்கு வழக்கமானது என்பதால் மற்றவர்கள் அதை கண்டுக்கொள்ளவில்லை!
“அப்பா... நானும் உங்க கூட வரேன்... அங்கே வீட்டுல இருந்து டாக்டரை பார்க்க மெதுவா போகலாம்...”
தலையை குனிந்துக் கொண்டு, கையிலிருந்த வளையல்களை விரல்களால் கலைந்தப்படி சொன்னாள் கிருத்திகா.