“ஹேய் பிரின்சஸ், நீ மெதுவா பேசுறது ஒரு அதிசயம்னா, இப்படி அண்ணான்னு பாசமழை பொழியுறது இன்னொரு மிராக்கில்! என்ன செய்துட்டு இருக்க?”
“லைப்ரரியில இருக்கேன்... எதுக்கு ஃபோன் செய்தீங்க???”
“சும்மா பேச தான் கூப்பிட்டேன் பிரின்சஸ்... உன்னை தனியா தியாகுவோட விட்டுட்டு நாங்க மறந்துட்டோம்னு நீ நினைக்க கூடாதே...”
“ஹ்க்கும்... ரொம்ப அக்கறை தான் உங்களுக்கு!”
“சீரியஸ்லி பிரின்சஸ்... ஆமாம் எந்த லைப்ரரில இருக்க?”
“வீடு பக்கத்துல இருக்கே அதுல தான் இருக்கேன், ஏன் கேக்குறீங்க???”
“நான் பக்கத்துல தான் இருக்கேன்... காரை திருப்பிட்டு வரேன்... நீ வெளியே வா...”
அத்தோடு விஜய் ஃபோனை கட் செய்து விடவும், வேறு வழி இல்லாமல் லைப்ரரியின் வெளியே வந்தாள் கிருத்திகா.
விஜயிடம் எதை எல்லாம் சொல்வது என்று முதலில் யோசித்தவள் மனதை மாற்றிக் கொண்டாள்! அவனிடம் இருந்து எதை எல்லாம் கேட்டு தெரிந்துக் கொள்வது என்பது தான் முக்கியம்!
அவளுக்கு தெரிந்து அவளுக்கு விஷயங்களை சொல்லி உதவ கூடிய ‘வீக் லிங்க்’ என்று ஒன்று இருந்தால் அது விஜய் தான்!
கீதா துவங்கி, சிவா, விஷ்ணு, அம்மா, அப்பா, அத்தை, மாமா ஒருவரும் ஒரு வார்த்தை கூட தேவைக்கு அதிகமாக அவளிடம் சொல்லவில்லை. விஜய் மட்டும் தான் அந்த சர்க்கிளில் இல்லாமல் அவளிடம் அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சம் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தான்!