“ஏன் என்ன விஷயம்” எனக் கேட்டாள் டெய்சி.
தோழியைப் பார்த்து ஈஸியாக புன்னகைத்த கற்பகம், “பெரிசா எதுவும் இல்லை டெய்சி. நம்ம முருகா அண்ட் கோ பழனியப்பாவோட மருமகனுக்கு முதல்ல பாரதியை தான் கல்யாணம் செய்றதா பேச்சு இருந்தது. ஆனால், பணம் விஷயத்துல பிரச்சனை வந்து கல்யாணம் நின்னுப் போச்சு. அவங்க இரண்டு பேருக்கும் கல்யாணப் பேச்சு நடந்தது நிறையப் பேருக்கு தெரியும். அதை தான் ரஞ்சனி அன்னைக்கு சொன்னா,” என்று டெய்சியிடம் விளக்கம் சொல்லி விட்டு, சசிரேகா பக்கம் பார்த்து,
“இதெல்லாம் பெரிய விஷயமா சசிரேகா? அப்படி பார்த்தா ஸ்ருதியை கூட தான் விவேக்குக்கு கல்யாணம் செய்து வைக்க நீ ஆசைப்பட்ட. நான் கூட அதைப் பத்தி யோசிச்சேன். அதுக்காக இப்போ என்ன குறைஞ்சுப் போச்சு?” என்றாள்!
“அது தானே? கல்யாண பேச்சு நடக்குறது, தட்டிப் போறவது எல்லாம் பிரச்சனைன்னு பார்த்தா என்ன செய்றது? இதெல்லாம் நம்ம ஊரில் ரொம்ப சகஜம் தானே?”
டெய்சி சொன்ன பதிலை விட கற்பகம் சொன்ன ஸ்ருதி பற்றிய விஷயத்தை ஆர்வத்துடன் கவனித்துக் கேட்டிருந்த ரஞ்சனி,
“ஸ்ருதி விவேக்கை விரும்பினாளா சசி?” எனக் கேட்டாள்.
ரஞ்சனியின் பேச்சு போகும் திசையை உணர்ந்து மூளை அபாய மணி எச்சரிக்கை விட, உடனடியாக அவளை அங்கே இருந்து கிளப்பி அழைத்து சென்றாள் சசிரேகா.
அவர்கள் செல்வதைப் பார்த்து கற்பகத்தின் முகத்தில் மெல்லிய புன்னகை தோன்றியது. அதை கவனித்து விட்டு,
“இனிமேல் உனக்கு இந்த இரண்டு கொசுக்களோட தொல்லையும் இல்லை,” என்றாள் டெய்சி.
“இதுக்காகவா அத்தை என்னை அழைச்சிட்டு வந்தீங்க? இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?”