யோசித்ததே இல்லை!
ஆனால் பத்து நாட்களுக்கு முன் அவளின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்கிறேன் பேர்வழி என்று விஜய் அவள் வீட்டு சுவரேறி குதித்து வந்து நின்றப் போது உண்மையில் அவள் பயந்தே தான் போனாள்! கூடவே கோபமும் இருந்தது.
விஜய் அவளிடம் அவனின் காதலை சொல்ல வந்ததாக சொன்ன போது கூட அவனை நம்பாமல் சந்தேகத்துடன் தான் பார்த்தாள்.
அதனால் தான் “அப்பா அம்மா கிட்ட பேசுங்க,” என்றும் சொன்னாள்.
ஆனால் விஜய் அதற்காகவே காத்திருந்தது போல ‘தீயாய்’ வேலை செய்திருந்தான்.
தியாகுவை பிடித்து என்ன சொன்னானோ, காசு கொடுத்து கிடைக்கும் PRகளை விட சூப்பராக நண்பனுக்கு உதவி செய்தான் தியாகு!
விஜயை தியாகு புகழ்ந்து தள்ளிய விதத்தில் அவளின் பெற்றோர் அசந்து தான் போயிருந்தார்கள்.
நல்ல குடும்பம்! லாபகரமாக போகும் பிஸ்னஸ்! எம்.பி.ஏ படித்திருக்கிறான். பார்க்கவும் கம்பீரமாக ஸ்மார்ட்டாக இருக்கிறான்.
அப்படி பட்ட ஒருவன் விரும்பி அவர்களின் மகளை திருமணம் செய்துக் கொள்ள கேட்கிறான் என்பது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தந்திருந்தது.
விஜய்யின் சித்தப்பாவும் அவளின் அப்பாவும் ஏற்கனவே சந்தித்து பேசியாகி விட்டது. இந்த பெண் பார்க்கும் படலம் எல்லாம் வெறும் பேச்சுக்கு மட்டும் தான். இன்றே நிச்சயதார்த்தத்திற்கும், திருமணத்திற்கும் தேதி குறித்து விடுவதென முடிவு செய்திருந்தார்கள்.
அவளுக்காக, அவள் சொன்னதற்காக இவ்வளவையும் பத்தே நாட்களில் செய்திருக்கிறான் விஜய்!