அதன் பின் வந்த நாட்களில் கீதா தியாகுவிடம் கிருத்திகா விஷயமாக எதையும் சொல்லவில்லை. ஆச்சர்யப்படும் விதமாக தியாகுவும் அவளிடம் எதுவும் கேட்கவில்லை!
நாட்கள் மெல்ல நகர்ந்து செல்ல, ஸ்ரேயாவின் முதல் பிறந்தநாள் வந்தது.
அன்று தியாகுவுடன் அவனுடைய பெற்றோரும் பிறந்த நாள் பார்ட்டிக்கு வந்திருந்தார்கள். கேக் வெட்டி வாழ்த்துக்கள் பரிசுகள் என முதல் கட்ட ‘ஃபார்மாலிட்டிஸ்’ முடியவும், ஆங்காங்கே உறவினர்கள், நண்பர்கள் என கும்பலாக கதை பேசிக் கொண்டிருந்தார்கள்.
கீதா, விஜய் மற்றும் குடும்பத்தினரோடு இருக்க, செவ்வந்தி தான் அந்த பேச்சை தொடங்கினாள்!
“உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன், இவன் என் ஒரே மகன் தியாகு. சொந்தமா கம்பெனி வச்சிருக்கான். எம்.பி.ஏ படிச்சிருக்கான். அவனுக்கு உங்க மகளை கல்யாணத்துக்கு கேட்கலாம்னு இருக்கோம். நீங்க என்ன நினைக்குறீங்க?”
செவ்வந்தியிடம் இருந்து அதை எதிர்பார்த்திராத கீதா திகைப்புடன் தியாகுவைப் பார்த்தாள்.
தியாகுவோ மும்முரமாக வேறு திசையில் பார்த்து கண் சிமிட்டிக் கொண்டிருந்தான்.
அவன் யாரை பார்க்கிறான் என்பதை அந்த பக்கம் பார்க்காமலே கீதாவால் புரிந்துக் கொள்ள முடிந்தது! ஆனாலும் கிருத்திகாவின் ரியாக்ஷன் என்ன என்று தெரிந்துக் கொள்ளும் ஆவல் தோன்றவும், அந்த பக்கம் பார்த்தாள்!
அங்கே பார்வையில் தீ பறக்க, முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க, தியாகுவை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் கிருத்திகா!
🌼🌸❀✿🌷
“கீதா! கீதா!”