அசையாமல், கண்களை திறக்காமல் அவளின் விரல்களின் அந்த மெல்லிய தீண்டலை ரசித்தப்படி படுத்திருந்தான்... அப்படியே மெல்ல தூங்கியும் போனான்...
காலையில் அவன் கண் விழித்தப் போது மனதினுள் பயங்கரமாக உற்சாகம் இருந்தது...
நேராக கிருத்திகாவை தேடி சென்றான்... மொபைலில் எதையோ நொண்டிக் கொண்டிருந்தவளின் அருகே சென்றவன்,
“பாரசிடமோல் 500mg செய்யாததை உன்னோட விரல் செய்திடுச்சு... தேங்க்ஸ் கீர்த்தி...” என்றான்.
சட்டென அவளின் முகமூடியையும் மீறி அவள் முகத்தில் திகைப்பும் வெட்கமும் கலந்து ஒன்றாக தோன்றியது...
அதை இப்போது நினைத்தாலும் அவனுக்கு அவள் மேல் காதல் அலை அடித்தது!
ஆனால் கிருத்திகா தன் கெத்தை அப்போதும் விடுவதாக இல்லை!
“ஜூரத்துல நீ பினாத்தின சத்தத்துல என்னால தூங்கவே முடியலை அதான் மருந்து போட்டேன்,” என்றாள்!
அது பொய் என்பது இருவருக்குமே தெரியும்!
கிருத்திகா சொன்ன பொய்யை எதிர்த்து எப்போதும் போல தியாகு கேள்வி கேட்காது மௌனமாக ஏற்றுக் கொண்டான்.
தொடர்ந்து மாதங்கள் அதன் போக்கில் சென்றுக் கொண்டே இருந்தது... தியாகுவிற்கு மிச்சம் மீதி இருந்த பொறுமையும் மெல்ல கரைய தொடங்கி இருந்தது...