"ஆமாம் பெரிய உண்மையை சொல்ல வந்துட்டா..."
பேச்சு சத்தம் கேட்டு வந்த காமாட்சி, "துளசி, என்ன ஆச்சு? ஓ, நந்து வந்தாச்சா? என்ன இரண்டு பேரும் சண்டை போட்டுட்டு இருக்கீங்க?" என வினவினாள்.
"சண்டையா? இதுக்கு பேரு செல்லம் கொஞ்சுறது ஆன்ட்டி! என்ன இது உங்களுக்கு இது கூட தெரியலை???" என்றாள் நந்திதா.
"அது சரி! உங்க கிட்ட கேட்க வந்தேன் பாரு! அப்புறம் இன்னைக்கு எத்தனை புதையல் எடுத்த?"
"ஒன்னுமே இல்லை ஆன்ட்டி! ரொம்ப பெரிய ஏமாற்றம்! உங்க மருமகள் சதி செஞ்சு எனக்கு புதையலே கிடைக்காத மாதிரி செய்துட்டா!!!"
"அச்சச்சோ! அடுத்த தடவை அவளை சதி செய்ய விடாமல் தடுத்து நிறுத்திடுவோம்!"
"சூப்பர் ஆன்ட்டி, நாம இரண்டு பேரும் ஒரே செட்!"
காமாட்சியும், நந்திதாவும் கையை குலுக்கி கொள்ள, துளசி அவர்களை பார்த்து முறைத்தாள்.
"இவளுக்கு ரொம்ப செல்லம் கொடுத்துட்டீங்க ஆன்ட்டி, பெரியவங்கன்னு மரியாதை இல்லாம உங்களையும் பார்த்து முறைக்கிறதை பாருங்க!"
"என்ன செய்றது நந்து! ஒரே பையன், அவன் என்னடான்னா, இவ பின்னாடியே சுத்திட்டு இருக்கான்... இவ பேச்சை கேட்குறது தவிர வேற எனக்கு என்ன வழி," என காமாட்சி பொய்யான அலுப்புடன் சொல்ல,
"அப்படியா விஷயம், நீங்க கவலைப் படாதீங்க ஆன்ட்டி! இவளை நான் கவனிச்சுக்குறேன். நீங்க மாமியாரா கோலோச்சி வாழ வச்சிடுவோம்!"