பார்ப்போம்,” என்றாள் காமாட்சி.
“பாருங்க பெரியம்மா பாருங்க...”
மேலும் சிறிது நேரம் அப்படியே அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்... பின் ராஜசேகர் தூக்கம் வருவதாக சொல்லி எழுந்திருக்கவும், காமாட்சியும் பேச்சை நிறுத்தி விட்டு அவருடன் கிளம்பினாள்.
ராஜசேகரும், காமாட்சியும் செல்லும் வரை காத்திருந்த துளசி, பின் உதய் பக்கம் பார்த்து,
“அம்மா எப்படி இருக்காங்க உதய்?” என்றாள்.
“நல்லா தான் இருக்காங்க... ஏன் அண்ணி...” என்றான் உதய்.
உதயின் அம்மா ரேவதிக்கு உதய் மீதிருக்கும் எக்ஸ்ட்ரா பாசம் உலகத்திற்கே தெரியும்! அந்த எக்ஸ்ட்ரா அன்பினால் ரேவதி பல தடவை உதயை கட்டுப்படுத்த முயல்வதும், அவன் அந்த தடையை மீறி செல்வதும் எப்போதும் நடப்பது தான்!
ரேவதிக்கும் உதய்க்கும் நடுவே எந்த சச்சரவு வந்தாலும் ரேவதி அதை முதலில் காமாட்சியிடம் சொல்வது வழக்கம். இப்போதெல்லாம் துளசி மீதும் நல்ல அபிப்ராயம் இருந்ததால் துளசியிடமும் சொல்வாள் ரேவதி. ரேவதியின் பாசத்தை புரிந்துக் கொள்ள முடிந்த துளசியால், உதயின் கோபத்திற்கான காரணத்தையும் புரிந்துக் கொள்ள முடிந்தது! அதனால் எப்போதும் ரேவதிக்கு சமாதானம் மட்டும் சொல்வாள். ஆனால், சமீபத்தில் ரேவதி உதய் நடுவே நடந்த சின்ன உரையாடல் கோபமாக மாறி, முடிவில் உதய் தட்டை தூக்கி வீசி இருந்ததில் வந்து முடிந்திருந்தது! அதைப் பற்றி தெரிந்துக் கொண்டிருந்த நேரம் முதலே உதயிடம் பேச காத்துக் கொண்டிருந்தாள் துளசி. அதற்காகவே தான் அன்று அவனை வீட்டில் தங்க வைக்கவும் யோசித்திருந்தாள்! இப்போது அந்த பேச்சை எடுக்க வாய்ப்பு கிடைக்கவும்,
“நீ அம்மா கிட்ட பேச ஆரம்பிச்சாச்சா?” என உதயிடம் வினவினாள்.
“அது...” என்றான் உதய் தயக்கத்துடன்!