தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 01 - சசிரேகா
மதுரை
2000 பேருக்கு மேலேயே மக்கள் கூடும் அளவு அந்த திருமண மண்டபம் இருந்தது, இன்று இளங்கோவனுக்கும் சம்யுக்தாவிற்கும் திருமணம் என மண்டபத்திற்கு வெளியே இருந்த பெரிய ப்ளக்ஸ் போர்டில் இருவரின் முகத்தையும் தனித்தனியாக வட்டத்திற்குள் வைத்து அலங்காரம் செய்திருந்தனர், இங்ஙனம் என்ற இடத்தில் இளங்கோவனின் தந்தை பெயர் இருந்தது.
மாப்பிள்ளை வீட்டாரே திருமணத்தை நடத்துகின்றனர். இளங்கோவனின் சொந்த ஊர் மதுரை என்பதால் பெண்ணின் ஊரான சென்னையில் ரிசப்ஷன் வைத்துக் கொண்டு இங்கே திருமணத்தை ஏற்பாடு செய்தார்கள் இரு வீட்டார்.
சம்யுக்தா சென்னையைச் சேர்ந்தவள் அங்கேயே பிறந்து வளர்ந்து அந்த ஊரின் கலாச்சாரத்தில் வாழ்ந்த நவீன யுவதி. திறமைசாலி, தைரியசாலி, பேரழகி, அவளது தந்தை சிவசங்கரனுக்கு சென்னையில் சொந்தமாக 5 அடுக்கில் சம்யுக்தா ஜவுளிக்கடல் என பெயர் பெற்ற ஜவுளிக்கடை உள்ளது, அதில் வரும் வருமானமே அவர்களுக்கு நிறைவாக உள்ளது. இதில் அவர் வெளிநாடுகளுக்கு கூட துணிகளை ஏற்றுமதி செய்தும் அங்கிருந்து துணிகளை இறக்குமதி செய்தும் நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருந்தார், தொழிலில் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் நியாயமாக வியாபரம் செய்துவந்தார்.
மகள் படித்து முடித்ததும் தனது வியாபாரத்தை சம்யுக்தாதானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து சிறு வயதில் இருந்து அவள் வளர வளர அடிக்கடி ஜவுளிக்கடைக்கு அழைத்துச் செல்வார்.
அவளும் தந்தையுடன் சேர்ந்து வேலையை கற்றுக் கொண்டாள். திறமைசாலியானவள் என்பதால் அவளுக்கு அனைத்தும் விரைவாக புரிந்தது. வளர வளர அவளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பு சிவசங்கரனுக்கு இல்லாமல் போனது அவளே தந்தையையும் தாயையும் பத்திரமாக பார்த்துக் கொண்டாள். அந்தளவு அவள் பக்குவப்பட்டுவிட்டாள்.