Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 01 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
காலிங் பெல் ஓசைக் கேட்டு செய்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே விட்டு விட்டு அவசரமாக சென்று கதவை திறந்தாள் சரண்யா.
அங்கே அவள் எதிர்பார்த்தது போலவே சின்ன புன்னகையுடன் கோபி நின்றிருந்தான். அவனை பார்த்த உடன் அவள் முகத்தில் மலர்ச்சியும் புன்னகையும் ஒன்றாக தோன்றியது.
“சரண், எத்தனை தடவை சொல்லி இருக்கேன், யாருன்னு பார்த்துட்டு கதவை திறன்னு... காலம் கெட்டுக் கிடக்குது. நாம தான் ஜாக்கிரதையா இருக்கனும்,” என்றான் கோபி.
“ப்ச்... நீங்க தான்னு எனக்கு தெரியும்...”
சரண்யா பேசிக் கொண்டிருக்கும் போதே அப்பாவின் குரல் கேட்டு விளையாடிக் கொண்டிருந்த பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடி வந்தாள் ஒன்றரை வயதான நிஷா.
“ப்பா ப்பா.....” என்று மழலையில் அவள் பேச, குனிந்து அவளை தூக்கிய கோபி, மனைவியின் முகத்தை பார்த்து விட்டு சிரித்தான்.
“என்ன சரண், குழந்தையை தூக்கினா கூட உன் முகம் இப்படி போகுது? நீயும் வா உன்னையும் தூக்குறேன்...”
“ஹையோ நினைப்பு தான்.... ஓமக்குச்சி மாதிரி இருந்துட்டு பேசுறதை பாரு....”
“யாரு ஓமக்குச்சி...” என்றபடி குழந்தையுடன் அவளின் அருகே வந்த கோபி, ஒரு கையாலே அவளை அலேக்காக தூக்கினான்...
“ஹையோ... விடுங்க....”
“நீ தானே தூக்க சொன்ன, அதெல்லாம் விட முடியாது....” என்று சொல்லி விட்டு, என் ராசாவின் மனசிலே ராஜ்கிரண் ரேஞ்சிற்கு மனைவியையும், குழந்தையையும் கையில் வைத்து சுற்றினான் கோபி...