என்று தயக்கத்துடன் பேச்சை நிறுத்தினாள் சரண்யா.
“தெரியும் அண்ணி... க்ளேயிம் செய்திருக்க பணம் வந்தா உங்களுக்கு உதவியா இருக்கும். நானும் அப்பா கிட்ட எவ்வளவோ சொல்லி பார்க்கிறேன்... அம்மா கூட சைன் போட ரெடியா தான் இருக்காங்க, அப்பா தான் விட மாட்டேங்குறார்.”
“ஜி.எஸ் அவர் ஆரம்பிச்ச கம்பெனின்றதால தான் கேட்கிறேன் சுரேஷ்... இல்லைனா எனக்கு அந்த பணம் எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்டு வேற வேலைக்கு போயிருப்பேன்... அவர் அவ்வளவு ஆசையா ஆரம்பிச்சு எடுத்து நடத்தினது, எப்படியாவது போகட்டும்ன்னு விட்டுட மனசு வர மாட்டேங்குது...”
கோபி விபத்தில் இறந்ததால் வழக்கமான செயல்முறை படி இழப்பீட்டு (இன்சுரன்ஸ்) தொகை பெற மனு செய்திருந்தார்கள். அது கைக்கு கிடைக்கும் நிலையில் ஒரு சின்ன குழப்பம் தோன்றி பணம் கையில் வராமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தது.
கோபியின் மனைவி என்ற முறையில் சரண்யா அந்த பணத்தை பெற்றுக் கொள்ள கோபியின் பெற்றோரான கதிர்வேலும், கற்பகமும் ஆட்சேபனை இல்லை என்று கையெழுத்து போட வேண்டி இருந்தது.
மருமகளின் மீது இப்போதும் கோபத்தில் இருக்கும் கதிர்வேல் கையெழுத்து போட மாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார்.
“ஏதாவது செய்வோம் அண்ணி. நீங்க கவலை படாதீங்க... நிஷா எப்படி படிக்குறா?”
“யூ.கே.ஜி தானே... படிக்குறா...”
“பார்த்துக்கோங்க அண்ணி. எப்போ எந்த உதவி வேணும்னாலும் கேளுங்க... நான் உங்களுக்கும் தம்பி போல தான்...”
சுரேஷின் பாசம் நிறைந்த பேச்சு சரண்யாவை நெகிழ்த்தியது. ஆனாலும் அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.