“ச்சே... என்ன இப்படி ஸ்லோவா இருக்கீங்க.... இதுல பெரிய ஹீரோ போல பேச்சு வேற...”
“ஹலோ...” என உதய் ஏதோ சொல்ல தொடங்கிய நேரம் ரேவதி அங்கே வந்தாள்... சட்டென்று அவர்களின் பேச்சு நின்றுப் போனது!
உதயையும், ப்ரியாவையும் மாறி மாறி சில வினாடிகள் பார்த்த ரேவதி, “ப்ரியா!!!!! என்ன செய்துட்டு இருக்க???” என்றாள்!
அந்த குரலில் கடுமை மிகுந்திருந்தது...
ஆனால், ரேவதியின் கடுமையான தோரணை ப்ரியாவை பாதித்ததாக தெரியவில்லை. புன்னகை மாறாமலே,
“சும்மா பேசிட்டு இருந்தேன் ஆன்ட்டி,” என்றாள் அமைதியான குரலில்.
“சும்மா பேச உனக்கு நான் வேலை கொடுக்கலை. போ, போய் வேற ஏதாவது வேலை இருந்தால் செய்.”
ப்ரியா பதில் சொல்லாமல் ரேவதியை பார்த்தாள்.
ரேவதிக்கு என்ன தோன்றியதோ,
“வேணும்னா டிவி பாரு... இல்ல பேப்பர், புக் ஏதாவது படி. நான் உதய் கிட்ட பேசிட்டு வரேன்,” என்றாள்.
ப்ரியா சரி என தலை அசைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.
உதய் நடப்பது எதையும் கண்டு கொள்ளாதவனை போல காஃபியை அருந்திக் கொண்டிருந்தான். அவனருகில் அமர்ந்த ரேவதி, பரிவுடன் அவனின் கேசத்தை கலைந்தாள்.