(Reading time: 44 - 88 minutes)

ரவணன் இருக்க பயம் ஏன்?.  இப்போ தான் எங்க சங்கத்தில இருந்து சிக்கல் சிங்கர்வேலன் கோவிலுக்கு  போயிட்டு திரும்புறோம். நீ என் கண்ணுல பட்ட. அதுவும் நல்லதுக்கு தான். இந்தா பிடி  சிக்கல் சிங்கர்வேலன் பிரசாதம். பூமா கிட்ட முடிஞ்சா குடுத்துடு. அவளுக்கு எந்த சிக்கலும் இல்லாம சுகப்பிரசவமாகும்.” என்று கொடுக்க,

 

“சீனி அத்தை அவ அமெரிக்கால இருக்காளே..பரவாயில்லை நான் அவளுக்காக கும்மிட்டு வாங்கிக்கிறேன் ” என்று வாங்கி கொண்டவளிடம்,

 

“அவ சென்னையில தான கட்டி கொடுத்தீங்க” என அவர் கேட்க, “சென்னையில இருக்கிறது ஸ்ரீமா..நீங்க எப்பவும் இரண்டு பேரையும் குழப்புவீங்க” என்றாள்.

 

“இப்படி அச்ச்சடுச்ச மாதிரி ஒன்னா இருந்தா? நீங்க எப்படி தான் கண்டுபிடுப்பீங்களோ. ஆனா நல்ல வேளைக்கு வேற வேற ஊரில கட்டி கொடுத்திருக்கீங்க...இல்லாட்டி வீட்டுக்காரவங்களுக்கு கஷ்டமாகியிருக்கும்” என்று சொல்லி  சிரித்தார். சிறிது நேரம் அவரிடம் பேசி விட்டு கோவிலை விட்டு கிளம்பும் போது மழை ஓங்கி அடிக்க ஆரம்பித்தது.

 

ஆட்டோவிற்கு காத்திருந்த நேரத்தில் “சாமி படத்தில வர்ற மாதிரி ஒளவையார் ரேன்சுல நம்ம சீனி அத்தைய செட் பண்ணி முருகன் விளையாடுறானோ? அவங்க வாயில இருந்து சிக்கல் இல்லாமல குழந்தை பிறக்கும் வந்ததே...முருகா தேங்க்ஸ்..இதை கார்த்திக் கொரியர் சர்வீஸ் மூலமா பூமாக்கு அனுப்பிட வேண்டியது தான். அவங்க வீட்டில யாரும் இருக்க மாட்டாங்கன்னு மது சொன்னாளே? ஆள் இல்லாட்டி அட்லீஸ்ட் வாட்ச்மேன் கிட்டயாவது கொடுத்திடலாம்” என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே ஆட்டோ வர அதில் ஏறி கார்த்திக் வீட்டிற்கு சென்றாள்.

 

சதாசிவம் வீட்டினர் இரவு விருந்துக்கு சதாசிவத்தின் தம்பி பரமசிவம் வீட்டிற்கு  சென்று விட, கார்த்திக் மட்டும் அடுத்த நாள் அமேரிக்கா புறப்படுவதற்கு பெட்டிகளை அடுக்கி விட்டு வருவாதாக இருந்து விட்டான். அலுவலகத்திலிருந்து சற்று சீக்கிரமாக திரும்பி விட்டு  டி-ஷர்ட் ஷார்ட்ஸ்க்கு மாறியவன், சந்தியா வீட்டிலிருந்து வந்த பொட்டலங்களை ஆராய்ந்து,  முறுக்கு பொட்டலத்தை தேடினான்.. “ஒரு முறுக்கு கடைக்கு அனுப்பற லோடு எனக்கு அனுப்பி விட்டுருக்கா. எப்படியும் நொறுங்கப் போகுது. இதுல எதுக்கு டிசைன் டிசைனா முறுக்கு?. அந்த வசூல் ராஜாவுக்கா இத்தனையும்?? அவனும் மஞ்சிங் மான்ஸ்டரோ??” என்று யோசிக்கும் போது ஒரு பொட்டலம் மட்டும் மிக லாவகமாக நொறுங்காத வண்ணம் பேக் செய்யப் பட்டிருந்தது. “ம்...ஸ்மார்ட் சந்தியா...இந்த பேகிங் தான் உன்னோட கை வண்ணம். எவனுக்கோ நீ சுட்ட முறுக்கை என்னால சுமக்க முடியாது” என்று அதை தூக்கி போட்டான். அப்போது அழைப்பு மணி கேட்டது.

 

கார்த்திக் வீட்டில் காவலாளி வீட்டில் ஆள் இருப்பதாக சொல்லவே உள்ளே சென்ற சந்தியா, ஆட்டோவை காத்திருக்க சொல்லி விட்டு, மெதுவா படியேறி   வீட்டு வாயிலை அடைவதற்குள் சொத சொதவென்று முழுவதுமாக நனைந்து விட்டாள். அழைப்பு மணியை அடித்தவுடனே கதவு திறக்கப் படவில்லை. “பல்லு போன கிழவிக்கு மேக் அப் போட்டு ஒப்பேத்திட்டு, இந்த வீட்டை பிரிட்டிஷ் டிசைன், காண்டம்ரரி லுக் ன்னு கதை விடு.....இத்தனை படி வச்சா வீடு கட்டுவாங்க..வயசானவங்க எப்படி ஏறுவாங்க ” மனதிற்குள் கார்த்திக்கை வசை பாடிக் கொண்டிருந்தாள்.

 

கார்த்திக் கதவை திறந்தான் கையில் துண்டோடு. “செல்லம்,  மழையில நனைஞ்சிட்டு வந்திருக்க. முகத்தை பாத்தா அழுத மாறி தெரியுது. எதுவும் ப்ரிச்சனையா?” என அக்கறையோடு  கேட்டுக் கொண்டே துண்டை அவள் கையில் கொடுக்க,

 

சந்தியாவோ “ம்...அது எனக்கும் அவனுக்கும் ஒரு மனஸ்தாபம். அதான். அழுகை வந்துடுச்சு” என்றாள் தலையைத் துவட்டிக் கொண்டே.

 

“இவன் ஒருத்தன் பாத்ரூம் போனும் நினச்சா கூட முகத்தை பாத்தே கண்டுபிடிச்சிடுவான்” மனதிற்குள் அங்கலாய்த்தாள்.

 

“பாத்ரூம் அந்த பக்கம்” என்று  கார்த்திக் காட்டிக் கொண்டே அழைத்துச் செல்ல, “என் மைன்ட் வாயிஸ் கேட்டுடுச்சா?” என்று அவள் என்னும் போதே, “அவன்னா…..வசூல் ராஜா கூடவா ப்ரச்சனை ?” என அவள் கூடவே நடந்த படி  விடாமல் அதையே கேட்டான்.

 

“ம்...இல்ல வேட்டைய ராஜா” என்று அவள் சொல்லும் போது  குளியலறையை அடைந்தனர். கதவின் கைப்பிடியை பிடித்தவாறு, அருகில் நின்றவனை ஏறிட்டு, “அதெப்படி பாஸ் கதவை திறக்கிறப்போவே கைல  துண்டோட வந்து நின்னீங்க”, என கேட்டாள்.

 

“ஒருத்தவங்க கதவை தட்டினா யாரு என்னன்னு பாக்க வேண்டாமா? பாத்தப்போ நனைஞ்சிட்டு நின்ன. அதான் டவல் எடுத்திட்டு வந்தேன். சரி, ஹீட்டர் போட்டுருக்கேன்.  ஹேர் ட்ரையர் ப்ளக் பண்ணி வச்சிருக்கேன். ஆனா சேன்ஜ் ட்ரெஸ்க்கு  கேர்ள்ஸ் க்லாசெட் எல்லாம் என்னால உருட்ட  முடியாது. எல்லாரும் சித்தப்பா வீட்டுக்கு போயிருக்காங்க. செர்வண்ட்ஸ்சம் பொதுவா வெள்ளிக்கிழமை சீக்கிரம் போயிடுவாங்க. வேணா  மாடில மது ரூமை காமிக்கிறேன். நீயா போயி எடுத்துக்கோ.” என்றான் கார்த்திக்

 

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் பாஸ். இப்போ தான் 7 மலை 7 கடல் தாண்டி உங்க வீட்டிக்குள்ள நுழைஞ்சிருக்கேன். மறுபடியும் படி ஏறினா பசில மயங்கி கீழ விழுந்திடுவேன்.” என்றாள் சந்தியா அலுத்துக் கொண்டு.

 

“இன்னும் சாப்பிடலையா? சீக்கிரம் ரெப்ரஷ் பண்ணிட்டு வா. ஏதாவது ரெடி பண்றேன்” என்றான்.

 

“பாஸ்...வீட்டுக்கு போகணும். அய்யோ நான் எதுக்கு இப்போ இவ்வளோ தூரம் வந்தேன் அதையே மறந்துட்டேன்…”என்ற படி கையில் இருந்த பையில் இருந்த பிரசாதத்தை அவன் கையில் கொடுத்து, “கார்த்திக் இதுல கெட்டுப் போறது எதுவும் இருந்தா எடுத்து போட்டுட்டு பூமாவோட திங்க்ஸோட கொடுத்துடுங்க. கோவில்ல ஒரு பெரியம்மா குடுத்தாங்க. அதுக்கு தான் நான் இங்க வந்ததே. நான் வீட்டுக்கு போயே ஒரேடியா தலைய துவட்டிக்கிறேன்” என்று அதை அவனிடம் கொடுத்து விட்டு, கிளம்பினாள். “உன் முகத்தில எப்பவும் இருக்கிற சார்ம் இல்ல. யு லுக் சோ டயர்ட். இப்படியா பட்டினி கிடப்ப. எது எதுல்ல அக்ரசிவா இருக்கணும் இல்ல..”  என்றான் அதட்டலான குரலில். பின் “ஏதாவது சாப்பிட்டு கிளம்பு. நானே டிராப் பண்றேன்” என்றான் நிதானமாக.

 

“கார்த்திக் அப்பா வெயிட் பண்ணு” அவள் முழுவதுமாக சொல்லி முடிக்க முன்,

 

கைகளை “நிறுத்து” என்பது போல செய்து காட்டி அவளை மேலே பேச விடாமல் தடுத்தவன், “சொல்றதை சொல்லிட்டேன். உன் இஷ்டம் ”  என்று விட்டு விறு விறுவென நடந்தான். அவன் குரலிலும், நடையிலும் அவன் கோபத்தை வெளிப்படுத்த, “ஆங்கிரி பர்ட், இமொஷினல் ப்ளாக் மெயிலுக்கெல்லாம் சந்தியா பயப்படுமாட்டா” என்றாள் அலட்சியமாக.

 

கோபமாக அவள் புறம் திரும்பி முறைத்தவன், சோர்ந்த அவள் முகத்தை பார்க்க கோபம் தணிந்து “கொலை பட்டினி கிடந்தாலும் கொழுப்பு மட்டும் குறையாது” என மனதிற்குள் திட்டிக் கொண்டே எதுவும் பேசாமல் மீண்டும் வாசல் புறம் நோக்கி நடக்க ஆரம்பித்தான்.  வெளியில் சென்றவன் ஆட்டோவை அனுப்பி வைத்தான்.

 

சந்தியாவிற்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. குளியறைக்குள் நுழைந்தவள் வீட்டிற்க்கு அழைத்து விவரத்தை தெரிவித்து லக்ஷ்மியிடம் ஒப்புதலும் வாங்கி விட்டாள்.

 

சந்தியாவிடம் பேசி விட்டு போனை வைத்த லக்ஷ்மி, தன்ராஜிடம் விவரத்தை கூறினார். “சதாசிவம் சார் வீட்டில இருக்காளா?...அப்ப சரி. ஊருக்குள்ள குளம், குட்டை எல்லாம் பிளாட்டாகி, இப்போ மழை பெஞ்சா தண்ணி வடிய இடமில்லாமல் வீட்டுக்குள்ள வருது. நல்ல வேளைக்கு அவ மாட்டலை. அங்க காபி ஏதாவது குடிக்க சொன்னியா? விரதம்னா பச்ச தண்ணி கூட பல்லுல படாம இருப்பாளே! ” என்று கேட்டதற்கு, “அங்க சாப்பிட சொன்னதுனால, விரதம் முடிச்சிடுவேன்னா. காலையில இருந்து ஏதோ முக்கியமான மீட்டிங்ன்னு பாவம் பாப்பாக்கு ஒரே வேலை....பசி பொறுக்க மாட்டா ...அவளுக்கு பிடிக்கிற காயா பாத்து பாத்து வைச்சேன்... பிள்ள என்னத்தை சாப்பிடுதோ.. ” என்று புலம்பிவிட்டு தன்ராஜை உணவருந்த அழைத்தார் லக்ஷிமி. “மாமா உங்ககிட்ட சந்தியா கல்யாண விஷயமா பேசணும். நீங்க சாப்பிட்டு வந்ததும் பேசலாம்” என்றான் தன்ராஜின் அருகில் அமர்ந்திருந்த ஸ்ரீமாவின் கணவர்.

 

உணவு முடித்த பின், ஸ்ரீமாவின் கணவரிடம் பேசினார். “என் தங்கச்சி கிராமத்துக்காரி. படிக்கல. நாகரிகம் தெரியாதவ.  மனசுல பட்டதை பட்டுன்னு சொல்லிபுடுவா. அவ பேசுறதெல்லாம் பெரிசா எடுத்துக்க கூடாது மாப்பிள்ளை. எங்கம்மை லஷ்மியை படுத்தாத பாடா! பேசாத பேச்சா? இப்போ என் பொண்டாட்டி என்ன குறைஞ்சு போயிட்டா? நல்லா தான் இருக்கா? பாண்டியன் தங்கமான பையன்னு நீங்களே விசாரிச்சு சொல்லிடீங்க. நமக்கு அது தானே வேணும். என் தங்கச்சியால ஊரை விட்டு  மெட்ராஸ்ல வந்தெல்லாம் இருக்க முடியாது. அப்படியே வந்தாலும் ஆடிக்கு ஒருக்க அமாவாசைக்கு ஒருக்க வரப் போறா. நீங்க சொன்னா நம்ப மாட்டீங்க. பாண்டியனே என்கிட்ட வந்து, “ அம்மா வாயாடி தான் மாமா. அதுக்கு பயந்து பொண்ணு கொடுக்க யோசிக்காதீங்க. அவங்களால சந்தியாவுக்கு எந்த பிரிச்சனையும் வராம பாத்துக்கிறேன்” ன்னு  சொன்னான். இதை விட வேற என்ன வேணும் மாப்பிள்ளை?” என கேட்டார் தன்ராஜ். பின், சற்று சாவகாசமாக உட்கார்ந்து கொண்டு,

 

“மத்த பிள்ளைங்கன்னா கூட நீங்க சொன்ன மாதிரி யோசிச்சிருப்பேன். எனக்கு சந்தியா மேல அப்படி ஒரு நம்பிக்கை இருக்கு மாப்ள. அஞ்சாவது பொம்பளை பிள்ளை பிறந்தா யோகம்ன்னு சொல்லுவாங்க. அது உண்மையோ என்னமோ….இவ பிறந்தப்போ சாகடிக்கணும்ன்னு பேசுன உறவுக்காரவங்க வாயால, இவ கணக்குல ஸ்டேட் பர்ஸ்ட் வந்து சி.எம். கையால ப்ரைஸ் வாங்கினதை கேள்விப்பட்டு ஒரு பிள்ளை பெத்தாலும் தன்ராசு மகளை மாறி பெக்கணும்ன்னு சொல்ல வைச்சவ. கெட்டிக்காரி. படிப்பாகட்டும், பாசமாகட்டும், பேச்சாகட்டும் அவ எப்பேர்ப்பட்டவங்களையும் சமாளிச்சிடுவாங்கிற நம்பிக்கை இருக்கு. எல்லா பிள்ளைகளையும் அந்நியத்தில செய்துட்டேன். எனக்கு பையனும் கிடையாது. ஊர்ல ஒரு நல்லது பொல்லதுன்னா போய் பாக்க, செய்ய எனக்கு அடுத்து யாரும் இல்ல. இப்படியே போனா ஊரு உறவெல்லாம் அடுத்த தலைமுறைல விட்டு போயிடும். என் பிள்ளைங்களுக்கு தெரிஞ்சது கூட பேரன், பேத்திங்களுக்கு தெரியாம போயிடும். அதான் இவளையாவது சொந்தத்துக்குள்ள செய்து வைக்க முடிவு பண்ணேன் மாப்ள. நாளைக்கே பார்மலா பொண்ணு பாக்க வரச் சொல்லியிருக்கேன்.” என்று நிதானமாக ஒரு நெடிய விளக்கத்தை அளித்து விட்டு ஒரு பெரிய குண்டை தூக்கி போட்டார் தன்ராஜ்.

 

அவர் சொன்ன அனைத்தும் நியாயமாக படவே மேலே எதுவும் கேட்க முடியாமல் ஸ்ரீமாவின் கணவர் ஸ்ரீமாவை பார்க்க அவள் திரு திருவென முழித்த படி லக்ஷ்மியை பார்க்க, லக்ஷ்மி பயந்த படி “என்னங்க, பிள்ளை வாழ்க்கை  ஒரு தடவைக்கு பல தடவை யோசிச்சு முடிவெடுங்க.” என்று ஒரு வார்த்தை சொல்ல அவரை முறைத்தார் தன்ராஜ். “ஏன் இப்படி புலம்புற? நாளைக்கேவா நிச்சயம் பண்ணப் போறோம்?” என்று சினத்தில் கடுந்து விட்டு, நேத்து பூமா கூட சொன்னா. சந்தியாகிட்ட கேளுங்கன்னு. அதுனால அவகிட்டயும் இன்னைக்கு அவ வீட்டுக்கு வந்ததும் ஒரு வார்த்தை கேட்டுடுவோம். இன்னும் வேற யாரு? பெரிய மாப்பிளை அன்னைக்கே நீங்க எது செய்தாலும் சரி தான் மாமான்னுட்டாரு. இந்தா இப்போ சின்ன மாப்பிளையும் சம்மதம் சொல்லிட்டாரு.  குணா மாப்பிளை கல்யாணம் மட்டும் பூமாக்கு குழந்தை பிறந்த  பிறகு வைக்க சொல்லி கேட்டாரு. அது நாம ஏற்கனவே முடிவெடுத்தது தான். சின்ன வயசுல இருந்து நம பாத்து வளந்த பையன் பாண்டியன். அப்படி இருந்தாலும் வேலை பாக்கிற இடத்திலையும் விசாரிச்சாச்சு. ஜாதகமும் அருமையா பொருந்தி இருக்கு. இன்னும் யோசிக்க என்ன இருக்கு?” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது வீட்டு தொலைபேசி அழைத்தது. அருகில் நின்ற லக்ஷ்மி அழைப்பை எடுத்தவுடன், “யாரு பேசறது? மயினி சத்தமாட்டும் கேக்குது? “ என  வடிவுக்கரசி எதிர் முனையில் கேட்க,

 

“ஆமா, வடிவா பேசுறது??” என்று லக்ஷ்மி கேட்டார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.