அவர்களின் திகைப்பை பொருட்படுத்தாமல், மேலே பேச ரேவதி வாய் திறந்த நேரம், “ரேவதி!” என்றழைத்த காமாட்சியின் அழுத்தமான குரல் கேட்டது!
சொல்ல வந்ததை நிறுத்தி விட்டு காமாட்சி நின்றிருந்த பக்கம் பார்த்தாள் ரேவதி.
“ரேவதி, என்னோட வா... நான் உன் கிட்ட பேசனும்...”
காமாட்சியின் குரல் கட்டளையும் இடவில்லை, கெஞ்சவும் இல்லை. ஆனாலும் ரேவதி என்ன ஏது என்று ஒன்றும் கேட்காமல் காமாட்சி நின்றிருந்த பக்கம் சென்றாள்.
போகும் முன் மீண்டும் ஒரு முறை திரும்பி நந்திதாவை பார்த்து முறைத்து விட்டு தான் சென்றாள்.
“வா, நாம தோட்டத்துக்கு போய் பேசலாம்,” என்று ரேவதியிடம் சொன்ன காமாட்சி, அப்போதும் திகைப்பில் இருந்து வெளி வராமல் இருந்த நந்திதாவையும் துளசியையும் பார்த்து, அவர்களை தேற்றுவது போல சின்ன புன்னகையுடன்,
“இரண்டு பேரும் போய் ஈவ்னிங் ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க,” என்று சொல்லி விட்டு சென்றாள்.
✽✽✽
ரேவதியின் மனதில் பொங்கி கொண்டிருந்த கோபம் அவளின் முகத்திலேயே தெரிந்தது. இவ்வளவு சீக்கிரம் விஷயம் ரேவதியின் காதுக்கு போகும் என்று காமாட்சி எதிர்பார்த்திருக்கவில்லை.
எப்படி இவளுக்கு தெரிந்தது? உதய் சொல்லி இருப்பானோ?
“என்ன ரேவதி, அப்படி ஒரு கோபம்?” என்று மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள் காமாட்சி.