“உதய் கல்யாணம் பத்தி நான் பெரிய பெரிய ஆசை வச்சிருக்கேன்க்கா... யாரு இவ... ஏன்...”
ரேவதியின் பேச்சின் நடுவே குறுக்கிட்ட காமாட்சி, “உதய் பத்தி நீ யோசிக்குறது சரி. ஆனால் நந்து மேலே ஏன் உனக்கு இப்படி கோபம்?” என்று தெரியாதவளை போல கேட்டாள்.
“இந்த பொண்ணு அவனை மயக்க பார்க்குறா!”
“யாரு நந்துவா??? ச்சேச்சே அப்படி எல்லாம் இருக்காது... உன் கிட்ட யார் என்ன சொன்னாங்க...”
“யாரு சொன்னதுன்னு முக்கியம் இல்லை...”
“சரி முக்கியம் இல்லைனே வச்சுப்போம்... அது உண்மையான்னு விசாரிச்சியா?”
“நெருப்பில்லாமல் புகையுமா என்ன?”
“என்ன ரேவதி, நீ இப்படி பேசுற? சரி நெருப்பு இருந்து தான் புகையுதுனாலும் உன் பையன் கிட்ட தானே நீ கேட்கனும். அதை விட்டுட்டு பாவம் அந்த பொண்ணு, அவக் கிட்ட வந்து கத்தினா எப்படி?”
“என்ன அக்கா நீங்களும் அவளுக்கு சப்போர்ட் செய்து பேசுறீங்க?”
“ரேவதி, நான் எப்போதுமே உன் பக்கம் தான்... நந்துவை எனக்கு கொஞ்ச நாளா தான் தெரியும். ஆனாலும் அவ நல்ல பொண்ணுன்னு அடிச்சு சொல்ல முடியும். பாவம், நல்லா இருந்த குடும்பத்துல பிறந்து, வளர்ந்து இப்போ எல்லாத்தையும் மொத்தமா இழந்துட்டு நிக்குறா...”
“இதெல்லாம் உண்மையா என்னவோ... அவ சொன்ன கதையா கூட இருக்கலாம்...”
“அவ துளசியோட ஃப்ரென்ட் ரேவதி. எல்லாமே உண்மை தான்...”