“எதுக்கு டைம்?”
“சொல்றேன்ம்மா... ஒரு வாரத்துல உங்க கேள்விக்கு பதில் தெரிஞ்சிடும்... ஒரே ஒரு வாரம் என்ன எதுன்னு கேட்காமல் இருங்களேன்... இப்போ நான் போய் ஃபிரெஷ் அப் ஆகிட்டு வரேன்... சாப்பிடலாம்... ரொம்ப பசிக்குது...”
சொல்லிவிட்டு, அங்கிருந்து எழுந்து சென்றவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ரேவதி!
அவளுள் பல கேள்விகள்...!
முதல் முறையாக கல்யாண பேச்சு எடுத்த உடன் கோபப் படாமல் பேசி இருக்கிறான்.... ஆனால் எதற்கு இந்த ஒரு வார டைம்?
நந்திதாவை பற்றி சொன்னவுடன் அவனிடம் தோன்றிய மாற்றத்திற்கு தனி காரணம் ஏதாவது இருக்கிறதா?
கேள்விகளை மகனிடம் நேராக கேட்க அவளால் முடியவில்லை... விபரம் தெரியாமல் கேள்வி கேட்டு மகனின் மனதை காயப்படுத்த அவளுக்கு விருப்பமில்லை...
ஆனால் நந்திதாவின் மனதை வருத்தப் படுத்தினால் பரவாயில்லையா??? ரேவதியின் மனசாட்சி கிடைத்த வாய்ப்பில் அவளை இடித்துரைத்தது...!
✽✽✽
ராஜசேகர் அமைதியாக இருந்த குடும்பத்தினரை ஆச்சர்யமாக பார்த்தார்.
“நந்திதா எங்கே துளசி? அவ இல்லாததால தானா இவ்வளவு அமைதியா இருக்கு... கலகலன்னு அவ பேச்சை கேட்டுட்டே சாப்பிட்டு பழக்கமாகி போச்சு...”