Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 12 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஒரு சில வினாடிகளுக்கு பிறகே சுலோச்சனா வீட்டில் இருந்து மைத்ரேயியிடம் பேசிக் கொண்டிருப்பது சரண்யாவுக்கு உரைத்தது.
“வாங்க மேடம்... அங்கே வீட்டுக்கு போய் பேசலாம்... உங்களை நான் எதிர்பார்க்கவே இல்லை... ரொம்ப பெரிய சர்ப்ரைஸ்,” என்றவள், அங்கேயே சற்று தள்ளி நின்றிருந்த சுலோச்சனாவிடம்,
“ரொம்ப தேங்க்ஸ்க்கா...” என்றாள்.
“இப்படி எதுக்கெடுத்தாலும் தேங்க்ஸ் சொல்லாதேன்னு உன் கிட்ட எத்தனை தடவை சொல்லிட்டேன்! ஏன் என்னை தள்ளி வச்சே பார்க்குற சரண்யா?” என சுலோச்சனா வருத்தப்பட,
“இந்த காலத்துல யாரு உங்களை மாதிரி நல்லவங்களா இருக்கிறது? அதுக்கு தான் சரண்யா தேங்க்ஸ் சொல்றாங்க... நானும் கூட சொல்லனும்... உங்க டீ சிம்ப்ளி சூப்பர்ப்! அருமையா இருந்தது,” என்றாள் மைத்ரேயி!
“டீ எல்லாம் போட்டுக் கொடுத்தீங்களா? உங்க இந்த உதவிக்கு எல்லாம்...”
சரண்யாவை பேசி முடிக்க விடாமல் குறுக்கிட்டு பேசிய மைத்ரேயி,
“ப்ச் ப்ச் ப்ச்... டூ மச் ஆஃப் எனிதிங் இஸ் குட் ஃபார் நத்திங் சரண்யா! அதான் கொஞ்சம் முன்னாடி ஒரு தேங்க்ஸ் சொன்னீங்கள்ள அதிலேயே இந்த டீயும் கவர் ஆகிடுச்சு,” என்றாள்.
“இதுக்கே இப்படி சொல்லிட்டீங்க... இனி நிஷாவை பார்த்துக்கிட்டதுக்கு, அவளுக்கு ஸ்நாக்ஸ் கொடுத்ததுக்குன்னு நிறைய தேங்க்ஸ் பாக்கி இருக்கு! அதை எல்லாம் கேட்டா என்ன சொல்வீங்க??? எனக்கு இப்போலாம் தேங்க்ஸ்ன்னு வார்த்தையை கேட்டாலே அலர்ஜி ஆகிடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன்,” என் தன் பங்குக்கு சொன்னாள் சுலோச்சனா.
அவர்கள் இருவருமாக தன்னை கேலி செய்வது புரிய, அதிசயத்திலும் அதிசயமாக சரண்யாவின் முகத்தில் சின்ன சிரிப்பு தோன்றியது!