போய் காய்ஞ்ச துணி எல்லாம் எடுத்துட்டு வந்திடுறேன்... பால் பொங்கி வந்தா ஸ்டவ்வை ஆஃப் செய்து இந்தப் பக்கம் எடுத்து வைக்குறீயாடா??” என்றாள்!
ரோஹினி தயக்கத்துடன் தலையை ஆட்டினாள்!
அதை சம்மதமாக புரிந்துக் கொண்டு, அங்கிருந்து சென்றாள் சாரதா!
காய்ந்திருந்த துணிகளை ஒவ்வொன்றாக கொடியில் இருந்து சாரதா எடுத்துக் கொண்டிருந்த போது, சமையலறையில் இருந்து டமால் – டுமீல் என பாத்திரம் சத்தமாக உருளும் சத்தம் கேட்டது! மற்ற துணிகளை அங்கேயே விட்டு விட்டு வேகமாக சமையலறைக்கு சென்றாள் சாரதா!
அங்கே உள்ளங்கை பயன்படுத்தி விழுந்திருந்த பால் பாத்திரத்தை எடுத்து வைக்க முயற்சி செய்துக் கொண்டிருந்தாள் ரோஹினி!
“ரோஹினிம்மா!!! என்னாச்சு! கைல என்ன???”
கேட்டபடி ரோஹினியின் கையை பிடித்துப் பார்த்த சாரதா பதறிப்போனாள்...
ரோஹினியின் பத்து விரல்களுமே சிவந்து போயிருந்தது...
“என்னடா ஆச்சு...”
“அது... அது... ஒன்னுமில்லை... அந்த பால் மேல வந்துச்சா.... பாத்திரம் ரொம்ப சூடா இருந்துச்சா... அதான்...”
“பால பொங்கி வரும் போது பாத்திரம் பின்ன எப்படி இருக்கும்!” கேட்டுக் கொண்டே கிச்சன் பக்கத்திலேயே வைத்திருந்த பர்னாலை கையில் எடுத்தாள் சாரதா!
“அது அது... நான்... இதுவரைக்கும் சமையலறை பக்கமே போனதில்லை... பார்த்திருக்கேன்... ஆனா...”