“இந்தாடா உனக்கு டீ... இது எனக்கு... வா, நாம உன் ரூமுல போய் குடிக்கலாம்... அங்கே தோட்டத்துல இருந்து வீசுற காத்து நல்லா வரும்,” என சொல்லிக் கொண்டே தனக்கு ஒரு கோப்பையை எடுத்துக் கொண்டு ,ஒரு கோப்பையை ரோஹினியிடம் நீட்டினாள் சாரதா!
கப் & சாசரில் தான் வேண்டும் என அடம் பிடிக்காமல், சாரதா கொடுத்த கோப்பையை வாங்க தயக்கத்துடன் கையை நீட்டினாள் ரோஹினி!
அதற்குள் சாரதாவிற்கே அவளின் கையில் இருந்த காயம் நினைவுக்கு வந்தது!
“அந்த விரலை வச்சு நீ எப்படி டம்ப்ளர்ல குடிப்ப... இரு இரு நான் உனக்கு கப்ல கொடுக்குறேன்,” என அலமாரியின் மேலே இருந்த கப் செட்டில் ஒன்றை எடுத்து அதில் ரோஹினிக்கு டீயை ஊற்றினாள் சாரதா!
“அந்த பாத்திரம் சுடுறது தெரிஞ்சதுமே நான் கீழே போட்டுட்டேன்... ரொம்ப எல்லாம் என் கைல படலை... உங்களுக்கு தான் எக்ஸ்ட்ரா வேலை...”
ரோஹினி அதை சொன்ன விதத்தில் சாரதாவின் மனம் மொத்தமாக உருகிப் போனது!
ரோஹினியின் நாட்டையோ, அரண்மனையையோ நேரில் பார்த்தது இல்லை என்றாலும், கலாவின் வழியாக அங்கே இருக்கும் செல்வ வளங்களை பற்றி கேள்விப் பட்டிருந்தாள் சாரதா!
அப்படிப் பட்ட செல்வ வாழ்வில் இருந்து விலகி வந்த சில மணி நேரங்களில் ரோஹினி ‘அட்ஜஸ்ட்’ செய்ய எடுத்துக் கொண்டிருக்கும் முயற்சி அவளுக்கு பெரும் வியப்பை கொடுத்தது!
“கிளீன் செய்றது எல்லாம் ஒரு வேலையா??? நான் எப்போவும் செய்றது தான்... சரி வா, டீ சூடா குடிச்சா தான் நல்லா இருக்கும்,” என சொல்லி ரோஹினியின் கப்பையும் சாரதாவே கையில் எடுத்துக் கொண்டு நடக்கவும், ரோஹினியும் அவளுடன் இணைந்து நடந்தாள்!