Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 18 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தன்னுடைய லேப்டாப் திரையில் கவனத்தை வைப்பது ஆகாஷிற்கு மிகவும் கடினமாக இருந்தது!
அவனின் கண்கள் அவனையும் அறியாமல் எதிரே சற்று தொலைவில் இருந்த சினேகாவிடம் சென்று, சென்று வந்துக் கொண்டிருந்தது.
அங்கே மெல்லிய குரலில் சிரித்து பேசிக் கொண்டிருந்த சினேகா அவனின் கவனத்தை மொத்தமாக திசை திருப்பிக் கொண்டிருந்தாள்!
சினேகாவும், சியாமளாவும் அவனின் செக்ரட்டரி ஐஸ்வர்யாவின் உதவியுடன் அவனின் அறையில் இருந்த பிரின்ட்டரில் நிறைய பக்கங்களை பிரின்ட்-அவுட் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சியாமளாவின் டிபார்ட்மென்ட்டில் இருந்த பிரின்ட்டர் ரிப்பேர் ஆகி இருந்ததால் அவசர தேவைக்கு ஆகாஷின் அனுமதியுடன் அவனின் பிரின்ட்டரை பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒன்றிரண்டு நிமிடங்கள் செல்ல ஐஸ்வர்யா மற்ற இருவரையும் விட்டு விட்டு சென்றாள்...
அடுத்த ஐந்து நிமிடங்களில் சியாமளா சினேகாவிடம் எதுவோ சொல்லி விட்டு, பிரின்ட்டர் பயன்படுத்த அனுமதித்தற்கு ஆகாஷிடமும் நன்றி சொல்லிவிட்டு அறையில் இருந்து சென்றாள்...
மற்றவர்களுடன் சினேகா இருந்த போதே கட்டுப்பட மறுத்த ஆகாஷின் மனம் இப்போது மொத்தமாக அவனின் கட்டுக்குள் நிற்க மறுத்தது...
லேப்டாப்பை பார்ப்பதும் சினேகாவை ரகசியமாக பார்ப்பதுமாக இருந்தான்...
எப்போதும் போல அன்றும் சினேகா சேலை தான் அணிந்திருந்தாள்...