“ஒரு நாளுக்கு மொத்தம் எத்தனை வார்த்தை பேசுவ நீ? நாலு வார்த்தை பேசுவீயா?”
புவனேஸ்வரியின் புன்னகை பெரிதானது!
“கஷ்டம்ப்பா உன்னோட! என் ஹஸ்பன்ட் கொஞ்சம் கொஞ்சம் உன்னைப் போல தான். நான் நூறு வார்த்தை பேசினா அவர் ஒரு வார்த்தை பேசுவாரு. வீட்டுல உன் அக்காவும் நீயும் பேசுவீங்களா இல்லையா?”
ராஜேஸ்வரி பேசாமல் என்ன? புவனேஸ்வரியை குறை சொல்வதும், மட்டம் தட்டுவதும் தான் அவளின் முழு நேர வேலையே!
ஆருத்ராவிற்கு பதிலாக ஆம் என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டினாள் புவனேஸ்வரி!
சுரேஷின் சிபாரிசில் புவனேஸ்வரி அந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் வேலை. காகித வடிவில் இருக்கும் டாகுமென்ட்களை கணினி வடிவாக மாற்ற வேண்டும். புவனேஸ்வரிக்கு டைப்பிங், கம்ப்யூட்டர் இரண்டும் நன்றாக தெரியும். அதனால் அந்த வேலை செய்வது அவளுக்கு கஷ்டமாக இல்லை.
ஆருத்ரா அங்கே சூப்பர்வைசராக இருந்தாள். புவனேஸ்வரியை போலவே இன்னும் பதினைந்து பெண்கள் இருந்தார்கள். அவர்கள் அனைவரது வேலையையும் நிர்வகிக்கும் வேலை ஆருத்ராவுடையது.
ஈசியாக பேசி பழகும் ஆருத்ராவை அவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோருமே அவளுக்கு தோழிகள் தான்.