புவனேஸ்வரி டேட்டா என்ட்ரியில் மட்டுமல்லாமல் கணக்கிலும் கெட்டியாக இருந்தாள். அதனால் அவர்களின் அன்றாட வேலையளவை கணக்கிடும் வேலையையும் ஆருத்ரா புவனேஸ்வரியிடம் கொடுத்திருந்தாள். சுணுங்காமல் மகிழ்ச்சியோடு புவனேஸ்வரி கூடுதல் வேலையை ஏற்று செய்தது ஆருத்ராவிற்கு ரொம்பவும் பிடித்திருந்தது.
அதுவும் தான் உண்டு தன் வேலை உண்டு என்று அமைதியாக இருக்கும் புவனேஸ்வரி ஆருத்ரா கண்களுக்கு அதிசயப் பொருளாக தெரிந்தாள்.
“புவனேஸ்வரி, எனக்கு ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா?” மீண்டும் ஆருத்ரா புவனேஸ்வரியிடம் கேட்டாள்.
“என்ன ஹெல்ப் ஆருத்ரா?” என்றாள் புவனேஸ்வரி ஆர்வத்துடன்!
“என் பொண்ணுக்கு அடுத்த வாரம் எக்ஸாம் ஸ்டார்ட் ஆகுது. மேத்ஸ் செய்ய ரொம்ப கஷ்டப்படுறா. அவளும் என்னை மாதிரியேன்னு வச்சுக்கோயேன். இதுல நான் எப்படி அவளுக்கு சொல்லிக் கொடுக்குறது? எனக்கு மேத்ஸ்ன்னு பேரை கேட்டாலே வேப்பங்காய் போல கசக்குது. நீ மேத்ஸ் புலியா இருக்கீயே! உனக்கு செகன்ட் ஸ்டான்டர்ட் மேத்ஸ் எல்லாம் ஒண்ணுமே இருக்காதுன்னு நினைக்கிறேன். நீ அவளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா? இரண்டே நாள்! இன்னைக்கும் நாளைக்கும் சொல்லிக் கொடு போதும்.”
“நான்... எப்படி...“ புவனேஸ்வரி முடியாது என்று சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
“சுரேஷ் சார் கிட்ட தானே நீ பர்மிஷன் கேட்கனும்? நானே அவர் கிட்ட பேசி பர்மிஷன் வாங்கிடுறேன். ப்ளீஸ் ப்பா. எனக்காக செய்யேன்.”