ரொம்பவே முக்கியமான கேள்வி தான்!!!!
தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் ரோஹினி...
ஆனால் மனதை வேறு பக்கம் திசை திருப்ப முடியாமல் தடுமாறினாள்...
தூங்கவும் முடியாமல், விழித்திருக்கவும் முடியாமல் தடுமாறியவள்... ஐந்து மணிக்கு அலாரம் அடித்து சாரதா கண் விழிக்கவும், அவளும் கூடவே எழுந்தாள்.
ஆனால் சாரதா அவளை தடுத்தாள்.
“நீ என்னடா செய்யப் போற, இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கு!”
ரோஹினிக்கு படுக்கையில் படுத்துப் புரள மனம் வரவில்லை... எனவே,
“இல்லம்மா, தூக்கம் வரலை,” என்றாள்...
சரி அதற்கு மேல் அவளை கட்டாயப் படுத்த வேண்டாம் என்று சாரதாவும் விட்டு விட்டாள்...
ரோஹினியுடன் பேசிய படி சாரதா சமையல் செய்துக் கொண்டிருக்க, அஜய் ஆஃபிஸிற்கு செல்ல கிளம்பி வந்தான்.
அவனைப் பார்த்த உடன் மீண்டும் சத்தமாக ஓசை எழுப்பியது ரோஹினியின் இதயம்!
அஜயை நேராக பார்க்காமல் இருக்க கேஸ் ஸ்டவ் பக்கம் திரும்பி நின்று அடுப்பில் இருந்த காய்கறியை ‘தேமே’ என்று வெறித்துப் பார்த்தாள்.
“டைமாச்சும்மா,” என்ற அஜயின் பார்வை அவனையும் அறியாமல் ரோஹினி பக்கம் சென்று வந்தது.