நடக்குமா என்ன? ஜெய்க்கு உடனே வேலை கிடைக்காம போயிட்டா? அப்புறமும் ஃபாரின்ல உடனே வேலை கிடைக்கும்னு எப்படி தெரியும்? இன்னைக்கு வேலைன்றது புளியங் கொம்பா தானே இருக்கு?”
“அதெல்லாம் ஜெய் எப்படியாவது வாங்கிடுவான் அத்தை. அவனுக்கு அவன் மேல பயங்கர நம்பிக்கை.”
“எனக்கென்னவோ இது கண்மூடித்தனமான நம்பிக்கையா தோணுது.”
“இல்லை அத்தை அவன் அப்படி இல்லை. சொன்னதை செய்வான்!” புவனேஸ்வரியின் குரலில் சேர்ந்திருந்த திடம் சித்ராவை யோசிக்க வைத்தது. அதனால் பேச்சின் திசையை மாற்றினாள்.
“நீ சொல்றது நடக்குதுன்னு வச்சுக்கிட்டாலும், அப்படி ஒரு கம்பெனில வேலை செய்றவன் உன்னை கல்யாண செய்துக்க ஆசைப் படுறேன்னு உன் அப்பா கிட்ட கேட்டா என்ன நடக்கும்னு நினைக்குற? உன் அப்பாவை பத்தி உனக்கே தெரியும். எல்லாத்திலேயும் அலட்டல் செய்றவர்!”
புவனேஸ்வரி அதைப் பற்றி எதுவும் யோசித்திராததால் திகைத்து விழித்தாள். சித்ராவால் அதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. கனவு உலகில் இருக்கும் புவனேஸ்வரி நிஜ வாழ்க்கையை புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை சித்ரா உணர்ந்துக் கொண்டாள்.
“உனக்குத் தெரியலைனா நானே சொல்றேன். உயிரே போனாலும் உன் அப்பா அந்த கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டார். அவருக்கு அவருடைய பேரும் புகழும் ரொம்ப முக்கியம். நீ, உன் அக்கா, நான் எல்லோருமே அடுத்தது தான்!”
“அப்போ என்ன அத்தை செய்றது?”