(Reading time: 5 - 10 minutes)

02. மனதிலே ஒரு பாட்டு - வத்ஸலா 

மனதிலே ஒரு பாட்டு

டாக்ஸி வந்துவிட்டிருந்தது. மொட்டை மாடியில் நின்று கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்த மனோ அதை பார்த்ததும் பேசியபடியே கீழேயிறங்கினான்.

பெட்டிகளெல்லாம் ஹாலில் இருந்தன.

"ம்", "சரி", "அப்புறம் கூப்பிடறேன்" கைப்பேசியில் பேசியபடியே நாற்காலியின் மேலிருந்த அர்ச்சனாவின் பெட்டியை எடுத்தான் மனோ. அந்த பெட்டி மூடப்பட்டிருக்கவில்லை. அவன் அதை தூக்கியபோது அந்த பெட்டியில் இருந்தவை எல்லாம் அப்படியே கீழே சரிந்து...........

"என்ன மனோ கிளம்பற நேரத்துல........... " என்றபடியே அருகில் வந்தார் அர்ச்சனாவின் அப்பா .

மூவருமாக சேர்ந்து எல்லாவற்றையும் அள்ளி உள்ளே போட்டுக்கொண்டிருந்த போதுதான் அப்பா அதை கையில் எடுத்தார். அதை எடுத்து பார்த்..............

அப்பாவின் உடல் அதிர்ச்சியில் குலுங்கியது. நெஞ்சமெங்கும் பூகம்பம்.

"என்ன திட்டத்துடன் என் மகளை அழைத்துச்செல்கிறான் மனோ?"

என்ன செய்வதென்றே புரியாதவராய் நின்றிருந்தார் அப்பா. சில நிமிடங்கள் மூளை செயலற்றுப்போனது போலே இருந்தது. அவர் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை கவனிக்கவில்லை மனோ.

அவர் நிதானத்துக்கு வந்தபோது "உடம்பை பார்த்துக்கோங்க சித்தப்பா" என்றபடியே அர்ச்சனாவை அழைத்துக்கொண்டு பறந்துவிட்டிருந்தான் மனோ. மகள் கண்ணீருடன் கையசைத்துவிட்டு செல்வதைக்கூட கவனிக்காதவராய் நின்றிருந்தார் அப்பா. அவர் மனதில் விழுந்திருந்தது அழுத்தமானதொரு சந்தேகக்கீறல்.

யில் கிளம்பியதும் அப்பாவை அழைத்தாள் அர்ச்சனா. 

"ட்ரெயின் கிளம்பிடிச்சுப்பா"

"ம் சரிம்மா. அப்பாவை ஞாபகம் வெச்சுக்கோ. தூங்கணும். வெச்சிடறேன்"

குழம்பிப்போனாள் அர்ச்சனா. "என்னவாயிற்று அப்பாவுக்கு? இப்படி சட்டென துண்டிக்க மாட்டாரே?"

தூங்கப்போகிறேன் என்றவரை திரும்ப அழைத்து தொந்தரவு செய்ய மனமில்லை.

ன்னலின் மீது தலையை சாய்த்துக்கொண்டாள் அர்ச்சனா. அப்பா கல்லூரி பேராசிரியர். எவ்வளவோ கேட்டாகிவிட்டது. அவள் திருமணம் முடியும் வரை அப்பா வேலையை விடுவதாகவும் இல்லை. அவளுடன் வருவதாகவும் இல்லை.

அப்பா அவளுடனே வந்துவிடவேண்டும் என்பதற்காகவேதான் மனோ அத்தனை மறுத்தும் அவன் வீட்டு மாடியில் தனியே தங்கி, சமைத்து சாப்பிடும், முடிவை எடுத்திருந்தாள். ஓரிரு நாட்களே அப்பா வந்தாலும் சரி, அவருக்கு எந்த சங்கோஜமும், சிரமமும் இருக்கக்கூடாது.

"அப்பாவை ஞாபகம் வெச்சுக்கோமா..........." இரவு முழுதும் அந்த வார்த்தைகள் படுத்திக்கொண்டே இருந்தன.

பெங்களூரின் காலைப்பொழுது சில்லென விடிந்திருந்தது. அழகான புன்னகையுடன் மலர்ந்து வரவேற்றாள் ஸ்வேதா.

காலை ஆறரை மணிக்கே ஷூவை மாட்டிக்கொண்டு எங்கோ கிளம்பிக்கொண்டிருந்த ஸ்வேதாவை பார்த்துக்கேட்டான் மனோ " எங்கே டென்னிஸா?"

"வாரத்துல மூணு நாள் டென்னிஸ், ரெண்டு நாள் யோகா, ரெண்டு நாள் ஷட்டில். மீதி நேரம் ஆபீஸ். புருஷனுக்கு எதுவுமே கிடையாது. இன்னும் ரெண்டு நாள்லே உனக்கு டைவோர்ஸ் பேப்பர்ஸ் வரும் பாரு" என்றபடியே தன் அறைக்குள் நுழைந்தான் மனோ.

"நல்லது. இன்னும் ஏரோபிக்ஸ், ஜிம்னாஸ்டிக்ஸ் எல்லாம் பண்ணுவேன் உங்க தொல்லை இல்லாமல்" என்று சத்தமாக சொல்லியபடியே அர்ச்சனாவின் அருகில் வந்த ஸ்வேதா ரகசியமாக சொன்னாள்,

"உங்க அண்ணன் இப்பவே 76 கிலோ. நான் ஸ்லிம்மா இருக்கேன்னில்ல அதான் பொறாமை"

 மலர்ந்து சிரித்தாள் அர்ச்சனா.  மனோவும் ஸ்வேதாவும் எப்போதுமே இப்படித்தான்.

அர்ச்சனாவின் சொந்த மாமன் மகள் ஸ்வேதா. இந்தத்திருமணத்திற்கு ஏற்பாடு செய்தது அர்ச்சனாவின் அப்பா. அந்த திருமணத்தில் அத்தனை சந்தோஷம் அர்ச்சனாவுக்கு. அவன் திருமணத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பல திட்டங்கள் வைத்திருந்தாள் அர்ச்சனா. ஆனால் அவன் திருமணத்தன்று..........

தலையை குலுக்கிக்கொண்டாள் அர்ச்சனா. பழைய நினைவுகள் அழுத்தினால் மூளை செயலிழந்து போகும்.

குளித்து, சாப்பிட்டு தயாராகிவிட்டிருந்தாள் அர்ச்சனா. அந்த கரும்பச்சை புடவையில் தோளில் கைப்பையுடன் அவன் முன்னால் வந்து அவள் நின்ற போது சில நொடிகள் இமைக்க மறந்துதான் போனான் மனோ.

பின்னர் உதடுகளில் புன்னகை ஓட " கிளம்..ப...லாமா? " குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவன் கேட்க, புன்னகையுடன் தலையசைத்தாள் அர்ச்சனா.

"கம்" என்றபடி படியிறங்கியவன், "இங்கே பக்கத்துக்கு வீட்டிலே ஒரு friend இருக்கார். அவரும் உங்க ஆபீஸ் தான். அவர்கிட்டே உன்னை அறிமுகப்படுத்தி வைக்கிறேன் வா" என்றபடி நடந்தான்

பக்கத்துக்கு வீட்டுக்குள் அழைத்து சென்றான் மனோ. கேட்டை திறந்து உள்ளே நுழைந்த நொடியில் அப்படியே நின்றுவிட்டாள் அர்ச்சனா.

அந்த வீட்டு வாசலில் அழகாய் ஒரு தோட்டம். அந்த தோட்டம் முழுவதும் பூக்கள்.

"அந்தப்பூக்கள்!" " கொத்து கொத்தாய், சிகப்பும், ஆரஞ்சும்,வெள்ளையுமாய் அந்தப்பூக்கள்!"

மறக்கமுடியுமா? எத்தனை ரசித்திருக்கிறாள் அந்தப்பூக்களை? அவன் வீட்டு வாசலில் நின்றுக்கொண்டு அவைகளை ரசித்தப்படியே சொல்லியிருக்கிறாள்.

" இந்த பூவுக்காகவே உன் வீட்டுக்கு வாழ வரணும்பா"

"ஏன்?  என் முகத்தை பார்த்தா என் கூட வாழணும்னு தோணலியா உனக்கு?"

"அதை எப்படிப்பா நேரடியா சொல்றது?" சிரித்தாள்

"வேணும்டி எனக்கு. உன் பின்னாடியே பைத்தியக்காரன் மாதிரி சுத்தறேன் இல்ல. எனக்கு வேணும்" அன்று விளையாட்டாய் அலுத்துக்கொண்டான்.

அவனை பிரிந்த பின்னால் பல முறை, பல முறை அவள் வீட்டில் அந்த செடியை வளர்த்துப்பார்த்திருக்கிறாள். ஏதேதோ செய்தும் ஒரு பூ கூட பூத்ததில்லை. எல்லா பூக்களும் ஒன்று கூடி முடிவெடுத்திருக்கவேண்டுமோ? இவள் வீட்டில் மலர்ந்து விடாதே இவளுக்கு அந்த தகுதி இல்லையென்று!

இரண்டடி முன்னால் எடுத்து வைத்தவளின் மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் சுருக்கென்றது.

"யார் வீடு இது?!"

அங்கேயே, அப்படியே நின்று விட்டாள் அர்ச்சனா.

வீட்டின் கதவு திறந்தே இருந்தது. அழைப்பு மணியை அழுத்திவிட்டு அவள் அருகில் வந்த மனோ, பின்னாலிருந்து அவள் கண்களை அப்படியே பொத்திக்கொண்டான்.

"ஏய். என்னாச்சு ?"

"ஒரு சின்ன சர்ப்ரைஸ். அப்படியே உள்ளே வா"

நடந்தாள் அர்ச்சனா. லேசாய் புரிய துவங்கியது. அவள் இதயம் துடிப்பது அவளுக்கே கேட்பது போலிருந்தது. சுவாசம் அழுத்தமானது போலிருந்தது.

வீட்டுக்குள் நுழைந்ததும் " என்னடா ரெடியா?" என்றான் மனோ.   

தொடரும்

Manathile oru paattu episode # 01

Manathile oru paattu episode # 03

{kunena_discuss:683}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.