(Reading time: 39 - 77 minutes)

ப்ரைஸ் டேக் பாக்காத! பிடிச்சிருக்கா? சக்திக்கு அழகா இருக்கும்ல” கேட்டாள் மது. தோழிக்கு வாங்கி கொடுக்கும் ஆசை இருந்தாலும் பாதி காசு கொடுக்கணுமே! அதற்கு எங்கே போவாள்? திரு திரு வென விழித்தவள்,

“எங்கிட்ட  ATM கார்ட் இல்லை. கேஷ்ஷா கைல இல்லை. நாம அடுத்த வாரம் வந்து வாங்குவோமா?”, நழுவப் பார்த்தாள்.

“என்கிட்ட கிரெடிட் கார்ட் இருக்கு. உனக்கு பிடிச்சிருகான்னு மட்டும் சொல்லு”, கேட்டாள் மது.

“பிடிச்சிருக்கு. இருந்தாலும்” என்று சந்தியா இழுக்க,

“இப்போதைக்கு நான் பில் போட்டுடுறேன்...ஒரு வேளை உனக்கு பிடிக்காட்டி மாத்திக்கிடலாம். தெரிஞ்சவங்க தான்” சொல்லி விட்டு பறந்தாள்.

பணத்திற்கு என்ன செய்வதென்று தெரியாமல் கையை பிசைந்த படி, “இந்த ஜொலிப்புக்கு இத்தனை விலையா? பத்து மாச சேலரி அட்வான்ஸ் கேக்க வேண்டியது தான் கார்த்திக்கிட்ட….” நினைத்துக் கொண்டாள்.

நகைகளை வாங்கி முடிந்ததும் எம். எஸ்க்கு கடமை அழைக்க அவர்களுக்கு ஒரு லேடி கான்ஸ்டபிள் ஏற்பாடு செய்து விட்டு கிளம்பிவிட்டார். “வந்த வேலை முடிந்தது. அடுத்து கோவிலுக்கு. “ என்று சந்தியா சொல்ல, பட்டு மாமி சிரித்தார்.

“எந்த கோவிலுக்கு சக்தி”, ஆர்வமாக கேட்டாள் மது.

“எந்த கோவில்ல நாமம் போடுவாங்களோ அந்த   கோவில்”, என்றாள் சக்தி.

“அப்போ பெருமாள் கோவில் தான?”, அவள் கேட்டவுடன் சிரித்தனர் அனைவரும். புரியாமல் விழித்த மதுவிடம்,

“அங்க தரிசனம் கிடைத்தா தான் எங்க சிரிப்பின் காரணம் புரியும் உனக்கு”, என்று சொல்லி சிரித்தாள் சந்தியா.

அவர்கள் சொன்ன கோவில் வர  மது சுற்றும் முற்றும் பார்த்து, இது கோவில் மாதிரி தெரியலையே! ஏதாவது பஜனை கூட்டம் நடக்கும் இடமா?”, கேட்டாள் மது.

“ஆமா...உனக்கு தெரிஞ்ச பஜனையை உச்சரித்து கிட்டே வா”, என்றாள் சக்தி.

“பஜ கோவிந்தம் சொல்லட்டா”, ஆர்வமாய் கேட்டாள் மது.

“ம்ம்...சொல்லு சொல்லு”, தூண்டினாள் சந்தியா.

“இப்போ சொல்லக் கூடாது. பஜனை அப்போ சொல்லணும்” என்ற மது,  அங்கே அனைவரும் வரிசையில் நிற்பதை, “பஜனைக்கு எதுக்கு க்யூல நிக்கிறாங்க” என்று கேட்டாள்.

“அவ்வளவு கூட்டமாம்”, சொன்னாள் சக்தி.

அவர்கள் டிக்கெட் வாங்கி உள்ளே செல்லும் போது மது கண்டு பிடித்து விட்டாள். “ஏய்...இது பஜனை கூட்டம் இல்லை… “

“ஆமா...இது தான் தியேட்டர்...இதில் படம் ஓட்டிவார்கள். அதை நாம் கண்டு கழிக்க போகிறோம்”, விளக்கினாள் சந்தியா.

“அய்யோ தியேட்டரா? அத்தை அவ்வளவு தான்”, பயந்து மிரண்டாள் மது.

“இங்க பாரு எத்தனை காலேஜ் பொண்ணுங்க வாராங்க. ப்ரண்ட்ஸ்ஸோட பாக்கிறப்போ  ஜாலியா இருக்கும். உன் வயசுல அவ அவ என்னன்வோ செய்றா உன்னால ஒரு சினிமா பார்க்க முடியாதா?  இன்னும் குழந்தையாவே இருக்க. பயப்படாம வா. நானே ஆண்ட்டிகிட்ட பேசிக்கிறேன்.”, சொன்னாள் சந்தியா.

“ஆண்ட்டி தனியா அனுப்ப தான் பயப்படுவாங்க.  அதான் நம்ம கூட போலீஸ் வாராங்களே  சேப்டிக்கு. காதி,சூர்யா எல்லாம்  இந்த வயசுல ப்ளைட்லே போவாங்க. நான் தியேட்டர்க்கு வர்றதுக்கு ஏன் பயப்படணும்? நீ ஒன்னும் எனக்கு சிபாரிசு பண்ண வேண்டாம். நானே அத்தைகிட்ட பேசிடுவேன். “, உறுதியாக சொன்னவளை அதிசயமாக பார்த்தனர் சந்தியாவும், சக்தியும்.

அந்த நேரம் அவர்களை சுற்றி வளைத்தது கல்லாரி மாணவர் கும்பல்..

“மச்சி,  அசின், சமந்தா, ஹன்சிகா எல்லாம் படம் பார்க்க வந்தா...படத்தை யார் பார்ப்பா?”

அவர்களை சட்டை செய்யாமல் நடந்தனர் தோழிகள் கூட்டம்.

பின்னாடி பட்டு மாமியிடன் மப்டியில் வந்த பெண் காவலர் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தார்.

“இன்னைக்கு எவன் சிக்கப் போறானோ” நினைத்துக் கொண்டே தோழிகள் ஒருவரை ஒருவர் பார்த்து ரகசியமாக சிரித்தனர்.

“அசின் உங்க நிஜ பேர் என்ன?”, கேட்டான் கல்லூரி மாணவன் ஒருவன் சந்தியாவின் அருகில் வந்து.

“அதை சொல்ல முடியாது...ஆனா வயசுல உங்களை விட அதிகம்… அசின் அக்கான்னு வேணா கூப்பிட்டுக்கோங்க”, நாசூக்காக பதிலளித்தாள் சந்தியா.

“நாங்க டெண்டுல்கர் பேன் ஆச்சே..அக்கான்னு எல்லாம் சொல்ல மாட்டோம்...அவருக்கு ஒரு அஞ்சலி…. எனக்கு ஒரு அசின்? எப்படி?”, காலரை தூக்கி விட்டு கேட்டான் அவன்.

“தம்பி! எனக்கு நீங்க தம்பி தான்! பின்னாடி ஒரு அக்கா வர்றாங்க அவங்ககிட்ட கேட்டுப் பாருங்க”, என்று உடன் வந்த காவலரை கை காட்டினாள்.

அவர்கள் பின்னாடி பார்க்க,

“என்னடா ஈவ் டீசிங்ல உள்ள தள்ளவா?”, மிரட்டினார் அவர்.

“அது மப்டி போலீஸ்”, என்று அந்த இளைஞர்களிடம் சொல்லி சிரித்தாள் சந்தியா.

போலீஸ் என்றதும் மிரண்டு விட்டனர் அவர்கள். “சாரிக்கா….சாரிக்கா...டேய் அக்காங்களுக்கு ஓ போட்டு ஒதுங்குங்கடா…”

கல்லாரி மாணவர்கள் ஓ போடும் பொழுது அவர்களை கடந்த சென்ற காரில் மதுவை முறைத்த படி சென்றது  அந்த திரையரங்கின் உரிமையாளர்கள் ...மதுவின் தந்தை வழி அத்தையும் அவள் கணவனும்.

“எங்க அண்ணன் வாழ்க்கையை கெடுத்துட்டு என்ன கும்மாளம் போடுறா” என்று கருவியவாறு, சௌபர்ணிகாவை அழைத்தார்.

மாந்தோப்பில் இருந்த  கிணற்றில் குளியலைப் போட்டு  மரத்தடி நிழலில் அமர்ந்து மகன்களுடன் பழைய கதைகளை பேசிக் கொண்டிருந்தார் சதாசிவம். “அந்த காலத்தில ஸ்கூட்டர்ன்னா அவ்வளவு பைத்தியமா இருப்பேன். எப்படியாவது அந்த வெஸ்பா ஸ்கூட்டரை ஓட்டி பார்க்க ஆசையாய் இருக்கு. இப்போ இந்தியால விண்டேஜ் மாடல் கிடைக்குமான்னு கேட்டுப் பாரு காதி”

அவர் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அருகில் அமர்ந்திருந்த சௌபர்ணிகாவின் போனில் அழைப்பு வர, வந்த அழைப்பு எண்ணை பார்த்ததும் கேள்வியுடன் சௌபர்ணிகா சற்று தள்ளி சென்று அழைப்பை எடுத்தார். சதாசிவம் ஆர்வத்தில் தனது பேச்சை தொடர, கார்த்திக் தனது அன்னையை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். 

மறுமுனையில் கிட்டதட்ட கத்தினாள் மதுவின் தந்தை வழி அத்தை.

“என்ன பிள்ளை வளர்த்திருக்க…தாயைப் போலப் பிள்ளை நூலைப் போல சேலைன்னு சும்மாவா சொல்லியிருக்காங்க...அவளை எங்ககிட்ட கொடுத்திருந்த ஒழுக்கம்ன்னா என்னன்னு தெரிஞ்சிருக்கும். இப்படி தராதரம் கெட்டு  ஆம்பிளை பசங்க கூட கூத்தும் கும்மாளுமா சுத்தியிருக்க மாட்டா என் அண்ணன் மகள்! “

அவள் கடுஞ்சொற்கள் கேட்டு சினந்தார் சௌபர்ணிகா. “நாக்கை அடக்கு! யார்கிட்ட பேசுறோம் தெரிஞ்சி தான் பேசுறியா?”, கோபத்தில் வார்த்தைகள் தெரித்தன.

“கஞ்சா அடிக்கிறவளை எங்க அண்ணன் தலையில கட்டி அவன் வாழ்க்கையை கெடுத்தவகிட்ட பேசுறேன் ...பெத்தவன்கிட்ட மகளை குடுக்காம நாசமாக்கினவ கிட்ட தான் பேசிகிட்டு இருக்கேன்… “ என்றாள் குத்தலாக.

“நாங்க நல்லா தான் பிள்ளை வளர்த்திருக்கோம். உனக்கு வம்பு வளக்க வேற ஆளைப் பார்“ இறுகிய முகத்துடன் எரிச்சலாக சொல்லி விட்டு இணைப்பை துண்டிக்க போனவரிடம்,

“இப்படி சொல்லி என் வாயை அடைப்ப. ஊர் வாயை அடைக்க முடியுமா? எத்தனை நாள் தான் பணத்தை வைத்து மறைக்க முடியும்? எங்க தியேட்டர்ல அவ போடுற கும்மாளத்தை கண் கூடா பார்த்தேனே! தாய் எட்டடி பாய்ந்தா குட்டி பதினாறு அடி பாயுமாம்..அம்மா பொட்டச்சிங்களோட கூத்தடிச்சா… பொண்ணு இன்னும் விவரம்...ஆம்பளை பொம்பளை வித்தியாசம் தெரியாம அத்தனை பேரு கூடவும் கூத்தடிக்கிறா... உங்க வீட்டு வளர்ப்பு நல்லா தெரியுதும்மா! நான் எதுக்கு வேற ஆள் பார்க்கணும்? தலையில் மிளகாய் அரைக்க  நீ தான் வேற ஆளைப் பாரு”, பதிலுக்கு எகிறி விட்டு இணைப்பைத் துண்டித்தாள்.

ஏதோ சரியில்லை என புரிந்து, பேசிக் கொண்டிருக்கும் பொழுதே அன்னையின் அருகில் வந்து நின்ற கார்த்திக், அதிர்ச்சியும் கவலையும் அப்பிய முகத்துடன் நின்றவரை  பார்த்து, “மம்மி, என்ன ப்ராப்ளம்?” கூர்மையான பார்வையுடன் கேட்டான்.

“மதுவுக்கு போன் பண்ணி அவ எங்க இருக்கான்னு  கேளு காதி”, சோர்ந்த குரலில் சொல்லி போனை குடுத்தவரின் கரங்கள் நடுங்கிற்று.

“என்ன மம்மி...மதுக்கு என்ன?” கேட்டுக் கொண்டே அவரது செல்போனை வாங்கி மதுவிற்கு அழைத்தான் கார்த்திக்.

திரையரங்கில் பிரபல நடிகர் படம் போட்டதும் திரையரங்கமே அல்லோகலப்பட்டது. அந்த திரையரங்கின் அருகில் இருந்த கல்லாரி சனிக்கிழமைகளில் அரை நாள் மட்டுமே செயல்படும். கல்லாரி முடிந்த பின், மதிய காட்சி பார்க்க வந்த மாணவர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தியேட்டர் முழுதும் விசில் பறக்க, சந்தியாவும், சக்தியும் ஜோதியில் இணைந்து விசிலடித்து கத்தினர். அருகில் உட்கார்ந்திருந்த மது இவர்களை விநோதமாக பார்க்க, பட்டு மாமியோ முறைத்தார். பதிலுக்கு அவரிடம் வழிந்தாள் சக்தி. “போதும் விசிலடித்தது. உட்கார்ந்து படத்தை பாரு” அவர் கட்டளையிட்டார். அப்போது பெண் காவலரும் அவரை முறைத்து பார்க்க, சக்தி சந்தியாவிடம் “மப்டி மாமி நம்மளை ஒரு மாதிரி பார்க்கிறது. அடக்கி வாசிப்போம்” அறிவுறுத்த சம்மதமாய் தலையாட்டினாள் சந்தியா.

அப்போது மதுவின் போனிற்கு அழைப்பு வர, கைப்பைக்குள் ஊமையாய் துடித்த போனை அறிந்து பார்த்த மது,  “ஏய் அத்தை கால் பண்றாங்க. நான் என்னவென்று கேட்டு வர்றேன். “ சொல்லி விட்டு கிளம்ப, அவளுக்கு துணைக்கு வர கிளம்பிய பெண் காவலரை அமர்த்தி விட்டு சந்தியா சென்றாள்.

“நீ இங்க நின்னு பேசு. எதிரில் உள்ள கடையில் பாப்கார்ன் வாங்கிட்டு வாரேன்”, சொல்லி விட்டு சென்றாள்.

போனை எடுத்தவுடன், “மது எங்க இருக்க?”, வேகமாக கேட்டான்.

“தியேட்டர்ல காதி”, அவன் பதட்டத்தின் காரணம் புரியாமல் பதிலளித்தாள்.

“யாரை கேட்டு தியேட்டர் போன?”, கர்ஜித்தான் கார்த்திக்.

“சந்தியா தான் கூப்பிட்டு வந்தா. அத்தைகிட்ட வந்தவுடனே சொல்லிடலாம்ன்னு பார்த்தேன்”, நிதானமாக பதிலளித்தாள்

பாப்கார்ன் வாங்க சில்லரையாக தேவைப்பட்டது. திரும்பி பார்த்தாள் சந்தியா. மது கையில் கைப்பையை வைத்திருப்பதை பார்த்து அவளை நோக்கி நடந்தாள்  சந்தியா.

ருகில் சோர்ந்து போய் அன்னை நிற்க மதுவின் நிதானமான பதில் கார்த்திக்கை இன்னும் கோபத்தின் உச்சாணிக்கு கொண்டு நிறுத்தியது. “கண்ட கண்ட தியேட்டர்ல உட்கார்ந்து படம் பார்க்கிறது அவளுக்கு வேணா சாதாரணமா இருக்கலாம். உனக்கு  அப்படி இல்லை. நம்ம குடும்பத்துக்குன்னு சில வேல்யூஸ் இருக்கு.  அவ எங்க கூப்பிட்டாலும் கண்ணை மூடிக்கிட்டு போயிடுவியா? யோசிக்க வேண்டாமா?”, ஆத்திரம் பொங்க கேட்டான் கார்த்திக். அதைக் கண்டு சதாசிவமும் சூர்யாவும் பதறி அவனருகில் வந்தனர்.

“சோ, இப்ப கூட சந்தியா மிடில் கிளாஸ் பொண்ணா மட்டும் தான் தெரியுறா? உன்னை மாதிரி ப்ராடக்ட்காகவோ பழி வாங்குறதுக்காகவோ   சந்தியா கூட பழகலை காதி. ஷி இஸ் மை பிரண்ட்.  அவ என்னை விட, ஏன் உன்னை விட யோசித்து தான் பாதுகாப்புக்கு போலீஸ் கூட ஏற்பாடு செய்து இங்க கூப்பிட்டு வந்துருக்கா. “, அவன் கேள்விகளுக்கு பதிலடி கொடுத்தாள்.

“அப்படி எல்லாம் தெரிஞ்சவளா இருந்தா சாரு அத்தை தியேட்டர்க்கு கூட்டிகிட்டு போயிருக்க மாட்டா. அவங்களை பத்தி உனக்கு தெரியும் தான? காசு பறிக்க எண்ண வேணாலும் செய்ற பிராடு கும்பல். ஒரு போலீஸை அடிச்சு போட்டு நாலு ரவடிங்களை வச்சு உன்னை கடத்திட்டு போனா என்ன செய்ய முடியும்? வாய் பேசாம இன்னும் ஐந்து நிமிசத்தில் நம்ம கார் வரும். உடனே  கிளம்பி வீட்டுக்கு வர்ற வழியைப் பாரு” பட படவென வெடித்த கார்த்திக் பட்டென போனை அணைத்தான். 

அவன் பேசுவதை கேட்ட சௌபர்ணிகா, “மது தியேட்டர்க்கா போயிருக்கா? என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை”, அதிர்ச்சியும் கோபமுமாய் கொதித்தார்.

“ப்ச்...” என்று நெற்றியில் கை வைத்து ஒரு நெடிய பெருமூச்சை விட்ட கார்த்திக், “மம்மி சந்தியா கூட தான போயிருக்கா. அவ பத்திரமா பார்த்துப்பா. நீங்க வருத்தப் படாம இருங்க”, தாயின் நிலையறிந்து தைரியம் சொன்னான்.

“சந்தியாவை ஒழுக்கமான பொண்ணுன்னு நினைத்தேன். இப்படி ஒரு வார்த்தை கூட கேக்காம சினிமாக்கு கூட்டிகிட்டு போறா? அவங்க வீட்டில் இப்படி செய்தா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா?”,சௌபர்ணிகாவின் கோபம் சந்தியா மீது திசை திரும்பியது.

திரையரங்கில், மது போனை வைத்து விட்டு திரும்பி பார்க்க அவளருகில் நின்ற சந்தியாவைப் பார்த்து தயங்கிய படி, “சந்தியா காதி“, என்று இழுத்த மதுவிடம்,

வெறும் தலையாட்டலில் தனக்கு எல்லாம் புரிகிறது என்பதை தெரிவித்து கிளம்ப ஆயத்தமானாள். சில நொடி காத்திருப்பு பின் வந்த காரில் எல்லாரையும்  அனுப்பி விட்டு தனக்கு வேறு வேலை இருக்கிறது என சாக்கு சொல்லி வீட்டிற்கு பேருந்தில் பயணம்   செய்த சந்தியாவின் மனதில் மது கார்த்திக்கிடம் பேசியது ஒலித்துக் கொண்டேயிருந்தது. காலையில் காதலில் குதித்த உள்ளம் இப்போது இறுகிப் போனது.  

ஆட்டம் தொடரும் ...

Go to Episode 24

Go to Episode 26

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.