(Reading time: 39 - 77 minutes)

மே 26, சனிக்கிழமை

திகாலை ஐந்தரை மணிக்கு,

“சந்தியா உங்கப்பா உன்னை உடனே பார்க்கணும் கீழ வெயிட் பண்றாங்க. சீக்கிரம் போய் பாரு” என தூங்கிக் கொண்டிருந்தவளை மது தட்டி எழுப்பினாள். சோம்பல் முறித்த சந்தியா, “என்ன மது….” எரிச்சலாய் சோம்பல் முறித்துக் கொண்டே கேட்க,

கொட்டாவி விட்ட படி, “போய் உங்கப்பாவை பாரு சந்தியா “ சொல்லி விட்டு  மீண்டும் நித்திரைக்கு தயாரானாள் மது...

“அப்பாவா? இந்த நேரம் எதுக்கு?” கேட்ட சந்தியாவிடம்,

“காதி சொன்னான்” என்று தூக்க கலக்கத்திலே சொல்லி விட்டு உறங்கிப் போனாள் மது.

அப்பா என்றதும் பயந்தாலும், நேற்று போலவே இதுவும் கார்த்திக்கோட  விளையாட்டாக இருக்குமோ என்று யோசித்துக் கொண்டே, பல் துலக்கி, நைட்டியில் இருந்து சுடிதாருக்கு மாறி  வரவேற்பரைக்கு வந்தாள். அங்கே வீடை சுத்தம் செய்து கொண்டிருந்த பணிப்பெண் சந்தியாவை பார்த்ததும்,

“சின்ன அய்யா தோட்டத்திற்கு வரச் சொன்னாங்க” என்று செய்தி சொன்னாள் அவள்.

விறு விறுவென வீட்டிற்கு பின்புறம் இருந்த தோட்டத்திற்கு நடந்தாள். தூரத்தில் இருந்தே அவன் அங்கே நின்று கொண்டிருந்ததை பார்த்து விட்டாள். கருமையான கேசத்திற்குள் அடைகாக்கும் கோழி போல இருந்த அவன் குளிர் கண்ணாடி, ஏறு நெற்றி, அடர்த்தியான  புருவங்கள், கூர்மையான மூக்கு, அழகான முகவெட்டு, கம்பீரமான தோற்றம்    என அவனை அணு அணுவாக ரசித்துக் கொண்டே வந்தவளை, “குட் மார்னிங்” புன்னகையோடு எதிர்ப்பட்டு வரவேற்றான் கார்த்திக்.

“ஏய் லூசு அவன் பாத்து வழியாம நல்லா கோபமா கேக்கணும்” மனதிற்குள் சொல்லிக் கொண்டே,

“அப்பா எங்க?” , கோபத்துடன் கேட்டாள்.

“அதான அப்பா எங்க?” என்று அவளை போன்றே சொல்லிக் காண்பித்து சிரித்தான். அவன் கிண்டலில் இப்போது நிஜமாகவே கோபம் வர சந்தியா முறைத்தாள்.

“சூடா இருக்கிறவளுக்கு சூடா ஒரு காபி…” என்று சமாதானமாய் கையில் இருந்த காபியை நீட்டினான்.

“எனக்கு ஒன்னும் வேண்டாம்”, சிலிர்த்துக் கொண்டு சொன்னாள்.

“நான் டாடி கூட தோப்புக்கு போறேன். பந்தா பண்ணாத  குடித்து விட்டு எப்படி இருக்குன்னு சொல்லு. சீக்கிரம்” என காபி கோப்பையை அவள் கையில் திணித்து அவசரப்படுத்தினான்.

வேண்டா வெறுப்பாக ஒரு மடக்கு பருகி  விட்டு, “ஹ்ம்ம்...ஏதோ சுமாரா இருக்கு” என்றாள்  அலட்சியமாக.

“தேங்க்ஸ்“ என்று வெடுக்கென காபி கோப்பையை அவளிடம் இருந்து பிடுங்கியவன்,

“வந்த வேலை முடிந்தது. போய்  உன் உறக்கத்தை கண்டினியூ பண்ணு”  செய்தியாக சொல்லி விட்டு வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.

“கார்த்திக், இதுக்கு தான் தூங்கிக் கொண்டிருந்தவளை எழுப்பி விட்டீங்களா?”, கடுப்பாக அவளைக் கடந்து சென்றவனின் முதுகைப் பார்த்து கேட்டாள். அவள் கேட்டதும் திரும்பி குறும்பு புன்னகையுடன் அருகில் வந்தவன்,

“அதுக்கு மட்டுமா? “ என்று சிரித்துக் கொண்டே, “இதுக்கும் தான்”   என்று கன்னத்தை லேசாக கிள்ள,

“ஸ்..ஆஆ…”  வலியில் கத்தினாள்.

“லைட்டா அயர்ன் பண்ணி விடவா?”, என்று அவள் கன்னத்தை வருட வர, அவன் கையை தட்டி விட்டு, “இன்னொரு தடவை கிள்ளுநீங்க என் அண்டாகசப் பெட்டியை எடுக்க வேண்டிய நிலைமை  வந்துடும்”  ஆள்காட்டி விரலை ஆட்டி மிரட்டினாள்.

“அப்படியா...”, அதிசயிப்பது போல பாவனை செய்து, “அப்போ கிள்ளிடுவோம்” என்று சவால் விட்டுக் கொண்டே மறுகன்னத்தை வலிக்காமல் கிள்ளினான்.

“யு வில் பே பார் திஸ் கார்த்திக்”, என்று கன்னத்தை தேய்த்துக் கொண்டே முகத்தை சுழித்து கங்கணம் கட்ட, அதை காதில் வாங்காமல்,

“வெயிட்ங் டு சீ யு இன் ஆக்ஷன் மை நாட்டி பேய், பை பை”  என்று சற்று சத்தமாக சொல்லி  முடிக்கும் பொழுது வீட்டை நோக்கி பாதி தூரம் கடந்திருந்தான். “போடா பழுத்த பழனியப்பா...அவன் அவன் கிஸ் அடிப்பான்...இவன் கிள்ளி வைக்கிறான்...உன் ரூமை இன்னைக்கு பாடாகதி ஆக்கி வைக்கிறேன் பாரு.” அவனைப் பார்த்த வண்ணம் தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தாள். அதிகாலை பொழுதில் தோட்டத்தின் ரம்யம் அவளை கட்டிப் போட அதிலே நேரத்தை கழித்தாள்.

காலை உணவின் பொழுது கார்த்திக்கும் சூர்யாவும் பெற்றோர்களுடன் அவர்களுக்கு சொந்தமான மாந்தோப்பிற்கு சென்றுள்ளான் என்று மீரா சொல்ல,

“சூர்யா உங்களை கூட்டிகிட்டு போகலையா ?”, கேட்டாள் சந்தியா.

“எங்களைத் தான் எப்போதும் பார்க்கிறார். சூர்யாக்கும் ஒரு ப்ரேக் வேணும்ல.....ஒரு நாளாவது அவங்க பேரெண்ட்ஸ் கூட பொழுதை கழிக்கட்டும். நாளைக்கு நாம எல்லாரும் தோப்புக்கு போகலாம்.“ என்றாள் மீரா.

“நாளைக்கு எல்லாரும் எங்க வீட்டுக்கு வாங்க. வீட்டை அப்டேட் பண்ணி பால் காய்ச்சுறோம்”, என்ற  சக்தி அழைக்க,

“அத்தை ஓகேன்னா கண்டிப்பா வருவோம்” என்று மது உறுதியளிக்க ஆமோதித்தாள் மீரா.

காலை சிற்றுண்டியை முடித்து விட்டு சக்திக்கு நகை வாங்க மதுவை அழைத்துக் கொண்டு  கிளம்பினர் சந்தியாவும் சக்தியும். பட்டு மாமி அவர்களுக்கு துணையாக வர, காரை பேருந்து நிலையத்தில் நிற்க சொல்லிவிட்டு அனைவரும் பஸ்ஸில் செல்வோம் என்றாள் சந்தியா.

பேருந்து நிலையத்திற்குள் வந்தவுடன்,

“ஏன் பஸ்ல போகணும்னு அடம்பிடிக்கிற?”, கேட்டாள் மது.

“இன்னைக்கு நாங்க சைட் அடிக்க கத்து கொடுக்க போறோம். பஸ்ல போனா தான் நாலு பேரை பார்க்க முடியும்” என்றாள் சந்தியா.

“அய்யோ. சைட்டா?.சை...தப்பு. தப்பு. பாட்டிக்கு இதெல்லாம் பிடிக்காது. பொண்ணுன்னா அடக்க ஒடுக்கமா இருக்கணும்ன்னு சொல்லுவாங்க. ஆடுகாளி பொண்ணுங்க தான் இந்த வேலை எல்லாம் பார்ப்பாங்க. ”, பதறிக் கொண்டே சொன்னாள் மது.

“அந்த காலத்திலே சுயம் வரம் வைத்து, நாலுல ஒன்னை செலக்ட் பண்ண சொல்லி பொண்ணுங்களை தான் முடிவெடுக்க வைத்து இருக்காங்க. அப்போ அவங்க எல்லாம் ஆடுகாளி பொண்ணுங்களா?” கேட்டாள் சந்தியா.

“அது கல்யாணம் பண்றதுக்கு சந்தியா”, அலுத்துக் கொண்டு சொன்னாள் மது.

“இதுவும் அதுக்கு தான்…சக்தி அந்த பழமொழியை அவுத்து விடு”

“practise makes the woman perfect”, என்றாள் சக்தி.

“இப்போவே ட்ரையினிங் எடுத்தா தான் கல்யாணம் பண்றப்போ ஈஸியா இருக்கும் … வா”, என்று அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் செல்லும் ஊருக்கான பேருந்து கிளம்ப தயாராக நின்று கொண்டிருந்ததை கவனித்தாள். அதில் அவர்கள் ஒவ்வொருவராக ஏற, மது ஏற யத்தனிக்கும் பொழுது  அவளை இடிப்பது போல ஒருவன் அருகில் வர, திடுக்கிட்டு விழித்த மதுவை பின்னாடி இருந்து இழுத்தாள் சந்தியா. அவன் ஏறிய பின் பேருந்தில் ஏறி சக்தியும் பட்டு மாமியும் அமர்ந்திருந்த இருக்கையின் பின் இருக்கையில் இடம் பிடித்து வைத்திருந்தாள்.

“கண்ணை திறந்து பார்க்கணும்  மது. அவன் உன்னை இடிக்கிற நோக்கத்தில் தான் வந்தான். உன்னோட சைட் விஷன்ல அவன் அப்ரோச் பண்ண வர்றது முன்னாடியே தெரிந்திருக்கும். அலெர்ட்டா கவனித்து விலக பழகு. ” என்று மதுவிடம் சொல்லிக் கொண்டே அமர்ந்தாள் சந்தியா. ஏற்கனவே அவன் இடிக்க வந்ததில் மிரண்டு போனவள், சந்தியா சொன்னதும் திகிலுற்றாள்.

“இது ஒன்னும் பயம் இல்லை மது. இந்தியாலே பத்து பெர்சென்ட் தான் கார் வைத்திருக்காங்க. மத்தவங்க எல்லாரும் இந்த மாதிரி பப்ளிக் ட்ரான்ஸ்போர்ட்டை தான் நம்பியிருக்காங்க. அவங்க உன்னை மாதிரி பயந்தாங்கன்னா ஒன்னுமே செய்ய முடியாது” என்றாள் சந்தியா.

“நான் பயப்படலையே! பிக் கேர்ள்”, கழுத்தை வெட்டிக்கொண்டு சொன்னாள் மது.

“இந்த பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. நீ உடனடியா தற்காப்புக் கலை ஏதாவது ஒன்னை தீவிரமா படிக்க ஆரம்பிக்கணும். எங்க இல்லத்தில் கேர்ள்ஸ்க்குன்னே ஒரு லேடி மாஸ்டர் வந்து கராத்தே சொல்லிக் குடுப்பாங்க. அவங்களை தினமும் உங்க வீட்டுக்கு வந்து சொல்லி கொடுக்க ஏற்பாடு பண்றேன். பீஸ் மட்டும் நீ கொடுத்துடு” என்று சந்தியா சொல்ல மது ஆர்வமாக தலையசைத்தாள்.

பின் அந்த பேருந்தில் பயணிக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயங்களை பற்றி அவளுக்கு பாடம் எடுத்தாள்.

“சரி, அங்க பார்..அந்த ஜோல்னாக்காரனை பார்த்தா உனக்கு என்ன தோணுது?”, கேட்டாள் சந்தியா.

“குளிக்காம வந்திருக்கான்”, என்றாள் மது.

“அது மட்டும் தான் தெரியுதா? அவன் குடிச்சிட்டு வந்திருக்கான்னு தெரியலையா? அவன் கண்ணையும் வீங்கிய முகம், தள்ளாடும் நடையும் பார்த்தா தெரியலையா? அந்த மாதிரி ஆளுங்க பக்கத்தில் போறதை கூட அவாய்ட் பண்ணனும்”, சந்தியா சொல்லும் பொழுதே மது முகம் சோர்ந்தது...

“ஹ்ம்ம்… மம்மி கூட இப்படி தான் இருப்பாங்க சந்தியா”, சோர்ந்த குரலில் சொன்னாள்.

“உங்க அம்மாவை விட கொடுமையான அம்மாக்களுக்கு பிறந்தாலும்  உன்னை விட தைரியமாய்  எத்தனை பேர் வாழுறாங்க தெரியுமா?”, அவள் மீது பரிதாபம் காட்டாமல் கேட்டாள் சந்தியா.

“நானும் தைரியமானவ தான்.“, ரோஷமாக சொன்னாள் மது.

சிரித்தாள் சந்தியா. அடுத்த நிறுத்தத்தில் கல்லாரி மாணவர்கள் ஏற அவர்கள் பார்வை முழுதும் அவர்கள் இருவர் மீதும்...இவர்கள் அருகில் வந்து ஒரு சில இரட்டை அர்த்த கமெண்ட்களை சொல்லிக் கொண்டிருந்தனர். மது வழக்கம் போல எதுவும் புரியாமல் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள். எதிர் சீட்டில் அமர்ந்திருந்த சக்தியை நோக்கி, “என்னடி சக்கு? நமக்கு காவலுக்கு மப்டி மாமியை  அனுப்பலையா உங்க எம். எஸ்?”

“நேரா கடைக்கு அனுப்பி விடுறேன்னு சொன்னாருடி. நீ பஸ்ல போவோம்னு சொல்லலையே..தெரிஞ்ச்சிருந்தா சொல்லியிருப்பேன். எதுவும் ப்ராப்ளமா?”, கேட்டாள் சக்தி.

“இல்ல….இந்த பசங்க அசிங்கமா கமென்ட் பண்றாங்க. பணக்கார பிள்ளைக்கு நம்மளால சிக்கல் வரக் கூடாதே! சேப் சைட்ல இருக்கத் தான்!” ரகசியமாக சக்திக்கு மட்டும் கேட்கும் வண்ணம் சொன்னாள் சந்தியா.

“அவளுக்கு அவனுங்க சொல்றது எதுவும் புரியப் போறது கிடையாது. அப்புறம் என்ன? விடு. இந்த காலேஜ் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். பசங்க சும்மா வாய் தான்! வால்த்தனம் பண்ண மாட்டாங்க“ ரகசியக்குரலில் பதில் அளித்தாள் சக்தி.

ஒரு வழியாக இவர்களது நிறுத்தம் வந்ததும், கூட்டம் இல்லாததால் இடி படாமல் இறங்கினர். மது முன்பை விட முன்னெச்சரிக்கையாய் இறங்குவதை கவனித்த சந்தியா அவளை மெச்சினாள்.

ந்த நகைக்கடைக்குள்  நுழைந்ததும் எதிர்ப்பட்டது எம். எஸ். சக்திக்கு இன்ப அதிர்ச்சி. மருமகனை பார்த்து புன்முறுவலித்தார் பட்டு மாமி. மதுவின் அறிமுகப் படலம் முடிந்த பின், எம். எஸ்ஸும், சக்தியும் கம்மலை தேர்ந்தெடுக்க மது உதவினாள். மதுவின் பின்புலம் அறிந்த கடைக்காரர்களின் கவனிப்பு பலமாக இருந்தது. எம். எஸ்.ஸின் உத்தியோகம் இன்னும் அவர்களை அதிக சிரத்தை எடுத்து உபசரிக்க வைத்தது. சந்தியா, இதை போன்று நகைகளில் நாட்டம் இல்லாமல் கடையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். சக்திக்கு கம்மலை தேர்ந்தெடுத்ததும், மது ரகசியமாக சந்தியாவிடம், “இந்த ரிங் சக்திக்கு பிடிச்சிருக்கு. அவ கம்மலுக்கு மேட்ச்  ஆகும். நாம அவளுக்கு பிரசென்ட் பண்ணலாம் “ என்று காண்பிக்க, பெரிதாக தலையாட்டி விட்டு விலையைப் பார்க்க சந்தியாவிற்கு மயக்கம் வந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.