(Reading time: 32 - 64 minutes)

டபடப்பு  அடங்கியதும், பெருமூச்சு விட்டவன், “ஓடுற கார்ல கதவை திறந்தா என்ன ஆவ?” கண்களில் சினம் பொங்க கேட்டான்.

“எனக்கு பதில் சொல்லாட்டி அப்படி தான் செய்வேன்”, என்றாள் திமிராக.

“நான் கேட்டதுக்கு நீ பதில் சொன்னியா?”, கோபம் குறையாமல் கேட்டான் கார்த்திக்.

“அதை சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. “, அலட்சியமாகச் சொன்னாள்.

“அதைக் கேட்க வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கு”, என்றான் அக்கறையும், உரிமையுமாய், கார்த்திக்.

“தெரியும்! உங்க ப்ராடக்ட்காக தான கேக்குறீங்க. கவலைபடாதீங்க. உலகத்துக்கு எந்த மூலைக்கு போனாலும் அந்த வேலையை முடிச்சு கொடுத்துடுவேன். எனக்கு பழி வாங்கத் தெரியாது!”, என்றாள் குத்தலாக.

அவள் சொன்னதை கேட்டு முகம் இறுக, காரை இயக்கினான்.

“எங்க போறோம்?”, மீண்டும் கேட்டாள்.

“சொல்ல மாட்டேன். அதுக்கு டோரை திறப்பேன்னு மிரட்டாத! என் பக்கமும் டோர் இருக்கு! எனக்கும் கீழ விழுந்து சாகத் தெரியும்!”, என்றான் மிரட்டலாக.

சாகத் தெரியும்” என்ற வார்த்தை அவளை மறுபேச்சில்லாமல் ஊமையாக்கி விட்டது. அடுத்த சில நொடிகளில் ஊருக்கு ஒதுக்குபுறமான அம்மன் கோவில் முன் காரை நிறுத்தினான்.

“இங்க எதுக்கு?” அவள் பார்வையே கேள்வியாக,

“வா சொல்றேன்”, என்று கார்த்திக் காரை விட்டு இறங்க அவளும் இறங்கினாள்.

மக்கள் கூட்டம் அதிகமில்லை என்றாலும், ஒன்றிரண்டு பேர் வருவதும் போவதுமாக ஆள் நடமாட்டம் இருக்கத் தான் செய்தது அந்த கோவிலில்.

“என்ன விஷயம்?” என்றவளின் கரத்தைப் பற்றி கோவிலுக்கு அருகிலிருந்த கடையை நோக்கி  செல்ல,

“விடுங்க கார்த்திக். யாராவது பார்த்துட போறாங்க”, அவனிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்ற படி.

“இந்த கோவிலுக்கு பாதை சரியிருக்காதுன்னு நைட் நேரம் அவ்வளவா யாரும் வர மாட்டாங்க. பயப்படாத” சொல்லிக் கொண்டே அவன் கடையை அடைந்து அர்ச்சனை தட்டும் மஞ்சள் கயிறும் வாங்கினான்.

“மஞ்சக் கயிறு எதுக்கு?”  பயந்து போய் அவள் கேட்க,

‘தாலி கட்டப் போறேன். மயிலே மயிலேன்னா இறகு போட மாட்ட. அதான்” சாவகாசமாக சொல்லிக் கொண்டே அவள் கையை இன்னும் அழுத்தமாகப் பற்றி கோவிலுக்கு உள்ளே கூட்டிச் செல்ல, கண்களில் மிரட்சியுடன், கால்கள் தரையோடு ஊன்றிக் கொண்டு,

“அப்படி தாலி கட்டினா அடுத்த நிமிஷமே அதை தூக்கி எரிஞ்சிடுவேன்” பதிலுக்கு அவளும் மிரட்ட,

“அப்போ தைரியமா வா....ஏன் பயப்படுற?”, என அவன் நக்கலாக கேட்க,

“நான் ஒன்னும் பயப்படலை. முதல்ல கையை விடுங்க. வலிக்குது... ஸ்..ஆ...” என்றாள் எரிச்சலும் வலியும் கலந்து.

“ஹே....அழுத்தி பிடிச்சிட்டேனா”, என்று வருத்தமாய் கேட்டுக் கொண்டே அவளை விடுவித்தான். சிவந்த போயிருந்த கையைத் தொட வந்தவனிடம் இருந்து விலகி, அவன் மறுகையில் பிடித்திருந்த  அர்ச்சனை தட்டிலிருந்த மஞ்சள் கயிற்றை வெடுக்கென்று எடுத்துக் கொண்டு கோயிலுக்குள்ளே ஓடினாள். அதை ரசனையுடன் பார்த்தவாறு பின் தொடர்ந்தான்.

கற்பக்கிரஹத்தில் அவன் ஆண் பகுதியிலும், இவள் பெண்கள் பகுதியிலும் எதிர் எதிர் நின்றவர்கள், அர்ஜூனின் பெயரில் அர்ச்சனை செய்ய அவன் சொன்னதும் இவள் முகம் மலர்ந்தாள்.

அம்மனை வணங்கி முடித்த பின்னர், மற்ற விக்கிரகங்களை வணங்கினர். அவள் இஷ்ட தெய்வம் முருகனிடம் வந்து கண் மூடி வேண்டிக் கொண்டிருக்கும் தருணம் நெற்றியில் அவன் விரல் படிய திடுக்கிட்டு முழித்தாள்.

“நமக்கு கல்யாணம் முடிந்தது” என்றான் சிரித்து கொண்டே.

அவள் ஒரு நொடி பயந்து போய் குனிந்து கழுத்தைப் பார்க்க, “இப்போதைக்கு அது முடியாதே! அதான் இந்த ஸ்டாம்ப் பேப்பர்ல” என அவள் நெற்றியை காண்பித்து,

“ரெட் கலர் ரேகை பதித்து,  என் உயிரை உன்கிட்ட கொடுத்துட்டேன். லார்ட் முருகன் தான் விட்னஸ்! லேசுபட்ட விஷயம் இல்ல! என் உயிர்ம்மா! பத்திரமா பாத்துக்கோ!” உதட்டில் சிறு புன்னகையுடன் சொன்னவனின்  பார்வை தீர்க்கமாய் வேண்டுகோள் விடுத்தது...... அதைக் கண்டவளுக்கோ கண் கலங்கியது.

“அடடா, அழுகை அஞ்சலி தேவி! என்ன நம்ப மாட்டியா? எண்ணமும் செயலும் ஒன்னு கிடையாதுடா. சரி, உன் வழிக்கே வர்றேன்...நான் கெட்டவனா இருக்கலாம், கெட்டதே நினைத்திருக்கலாம். ஆனால், என் காதல் உண்மை, அந்த காதல் உனக்கு நல்லதை மட்டுமே செய்ய விட்டது! நல்லதை மட்டும் தான் செய்யும்”

அவனது பேச்சை சட்டை செய்யாமல் நடந்தவளின் பின்னே சென்றவன், “ஹே...நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்க... கெட்டவன்னா அதுக்காக வில்லன் எல்லாம் இல்லடா....”

முருகனின் திரு உருவம் கண்ணில் தெரியும் படி, தூண் ஒன்றின் அருகில் சென்று அமர்ந்தாள்...மோன நிலையில் தூணில் தலைசாய்த்த படி முருகனைப் பார்த்த வண்ணம் அவள் அமர்ந்திருக்க, அவளிடம் பேசிக் கொண்டே அவள் அருகில் ஆனால், சற்று முன்னே தணிந்த தளத்தில் கால்களை சுருக்கி உட்கார்ந்தவன்,

“மத்தவங்களுக்காக உன்னைப் போல யோசிக்க மாட்டேன். நான் கொஞ்சம் செல்பிஷ் தான் ஒத்துக்கிறேன்.....ஆனா, என்னை விட அதிகமா உன்னை தான் நேசிக்கிறேன்டா...”

“கொஞ்சம் ஸ்டேட்ஸ்ன்னு பார்த்தவன் தான் ஒத்துக்கிறேன், ஆனா, நீ இல்லாட்டி நான் ஒண்ணுமே இல்லாதவனாகிடுவேனே!“

“கொஞ்சம் கோபக்காரன் தான் ஒத்துக்கிறேன். கோபத்தில் உன் மேல அளவுக்கு மீறி உரிமை எடுத்துடுறேன்! ஆனா, என் தியாக்குட்டி லேசா வருத்தப்பட்டா கூட என்னால முடியாதுடா..”, தேய்ந்த குரலில் சொல்லிவிட்டு அவன் கைக்கு எட்டும் தூரத்தில் இருந்த அவள் கரத்தை தன் கரத்தோடு கோர்த்து பதிலை வேண்டி சற்று திரும்பி ஏக்கத்துடன்  பார்க்க,

மரத்து போனவள் போல மோன நிலையில் அமர்ந்திருந்தவள் அவன் கரம் பட்டதும், தன்னிலைக்கு வந்து வேகமாக கையை அகற்றி தன் முடியை கோதியவாறு, “கிளம்பலாமா? பஸ்ஸுக்கு லேட் ஆகிடும்”, என்றாள், அவன் பேசியதற்கும் அவளுக்கும் சம்மந்தமில்லை என்பது போல.

சமாதனப்படுத்த வழி தெரியாமல் வருந்திய கார்த்திக், அவள் அருகில் அமர்ந்து  முகவாயை இரு கைகளால் ஏந்தி, “உன்னைப் பார்க்க ஆசை ஆசையா இந்தியா வந்தா என்னை விட்டு எங்கடா போகப் போற? எனக்கு நீ வேணும்! கார்த்திக், உன் பக்கத்திலே இருப்பேன்னு சொல்ல நீ வேணும்! புரிஞ்சுக்கோடா!“, கரகரத்த குரலில் கெஞ்சலாக கேட்க,

முகத்தில் படர்ந்த அவன் கரங்களை விலக்கி வெடுக்கென எழுந்தவள், கீழே அமர்ந்திருந்தவனை  முறைத்த படி, “கோவில்னு கூட பார்க்காம ரொமான்ஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறீங்க. இப்படி உட்கார்ந்திருக்கிறது எங்க அம்மாவுக்கு  தெரிந்தா அவங்க உடம்பு இன்னும் மோசமாகும். எங்க போனாலும் துரத்துறீங்கன்னு தான் ஊரை விட்டே ஓடுறேன்.... நிம்மதியாவே இருக்க விடமாட்டீங்களா?......சை”, எரிந்து விழுந்தவள்  வேகமாக  வெளியேறினாள்.

அவளின் வார்த்தை வதைப்பில் உறைந்து போனான் கார்த்திக். சிறிது நொடிகளில் நெடிய மூச்சுடன் தன்னிலைக்கு வந்தவன் எதிரில் தெரிந்த முருகனைப் பார்க்க அவனோ மாறாத புன்னகையுடன் நின்றிருந்தான்! 

வீட்டை அடையும் வரை எதுவும் பேசாமல் மவுனமாய் கரைக்க, காரில் இருந்த ப்ளேயரும்....”நேற்று அவள் இருந்தாள்...அவளோடு நானும் இருந்தேன்” என ஏக்கமாய் ஒலித்தது!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.