(Reading time: 32 - 64 minutes)

நேற்று எந்தன் மூச்சினில்

உன் காதல் அல்லால் காற்று இல்லையே
நேற்று எந்தன் ஏட்டில்
சோகம் என்னும் சொல்லும் இல்லையே இல்லையே
நேற்று எந்தன் கை வளையல்
இசைத்ததெல்லாம் உன் இசையே
வானே நீ இன்று அந்த நேற்றுகளை கொண்டு வா

இருவரும் முந்தைய இரவை அசைப் போட்டு மனதிற்குள் அழுத படி வர, இயந்திரமாய் அவன் விரல்கள் அதே பாட்டை மீண்டும் ப்ளே செய்து கொண்டு வந்தது...

கண் மூடிக்கிடந்தவள் பாடலின் சத்தம் தேய்ந்தது கண்டு கண் விழித்த போது வீட்டின் முன் கார் நிறுத்தப் பட்டிருந்தது.

“ஒரு நிமிஷம் கார்த்திக். வந்துடுறேன்.” அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் பரபரப்பாக சொல்லி விட்டு வீட்டிற்குள்  ஓடினாள்.

சில நொடிகளில் சில கோப்புகளை எடுத்துக் கொண்டு காரை நோக்கி வருபவளை கவனித்து அவன் கண்ணாடியை இறக்க,  சற்று குனிந்து கோப்புகளை அவனிடம் நீட்டியவள்,

“எனக்கும் எங்க சேரிட்டிக்கும் நீங்க கொடுத்த ஷேர்ஸ்....சக மனுஷன் கஷ்டத்தை பார்த்து மனமுவந்து கொடுக்கிறது தான் தானம். இதை செய்தா நமக்கு என்ன லாபம்ன்னு கணக்கு போட்டு கொடுத்தா அது வியாபாரம்...இது வேண்டாம் கார்த்திக்”, வருத்தத்துடன் சொன்னவளின் விழிகள்  வேதனையில் உழண்டது!

பதிலேதும் கூறாமல் விழி அகலாது அவளைப் பார்த்தவண்ணம் இருந்தான். அந்த பார்வையின் தேடலுக்கு விடை தெரியாதவளாய்,

“கார்த்திக்”, மெல்லிய குரலில் அவள் அழைக்க, பார்வையை அவள் நீட்டிய கோப்புகளில் செலுத்தினான். “உனக்கு வேண்டாதது எனக்கும்  வேண்டாம்” மனதிற்குள் தீர்மானித்தவனாய்,

கவனமாக உணர்ச்சியை துடைத்த முகத்துடன் தொண்டையை செருமி, “ம்ம்ம்”, என்று  சொல்லிக் கொண்டே வாங்கியவன் அதோடு நிற்காமல், மறு கையால் அவள் கரத்தைப் பற்றினான். அவள் கரம் அவன் கன்னத்தை நோக்கி இழுக்கப் பட்டு  அழுத்தப்படுவதை திடுக்கிட்டு பார்த்தாள்....

தன் உள்ளங்கை ஷேவ் செய்யப்பட்ட அவன் கன்னத்தில் பட்டதும்  சந்தியாவிற்கு உடல் சிலிர்த்தது!

மென்மையான அவள் கரத்தை காலம் முழுமைக்கும் தன் கைக்குள்ளே வைத்துக் கொள்ள தவித்தான்...

“யாராவது பார்த்தா என்ன ஆவது?” என அவள் மனம் பதறினாலும் அவன் கை “ப்ளீஸ் போகாதே!” என்பது போல இதமாக அவள் கரத்தை கன்னத்தில் வைத்து அழுத்த அசையாமல் அவனைப்  பார்த்த படி நின்றாள்! அவன் ஸ்பரிசத் தீண்டல் வெளிப்படுத்திய தவிப்பும், பார்வையில் தேங்கி நின்ற ஏக்கமும் அவளை ஏதோ செய்ய, ரகசியக்குரலில்,

“கா....ர்.....த்....திக்”, என உதடுகள் உச்சரித்தது.

அவளின் அந்த அழைப்பு ஆழ்மனதின் பதிவை தன்னையறியாமல் நடுங்கும் குரலுடன் சொன்னான் “பயமாயிருக்கு...”, அவள் கரத்தை மேலும் அழுத்தியவாறு...

“கோழையாக்கி விட்டேனா இவனை” என அவள் விழிகள் ஈரமாக, அதைப் பார்த்த பின் தான் சொன்னதை உணர்ந்தவன், ஏன் அவ்வாறு சொன்னோம் என்று தன்னையே வியந்த படி, அவள் கரத்தை விடுவித்தான்.

“ஊருக்கு உழைக்கிறேன்னு என் உயிரை காயப்போட்டு விடாத! இந்த கன்னம் வெயிட் லாஸ் ஆகாம பார்த்துக்கோ”, செயற்கை புன்னகையுடன் அவள் கன்னத்தை கிள்ளி விட்டு, பார்வையை ஸ்டீயரிங்கில் செலுத்தி காரை  இயக்கினான்...

அவன் கிளம்பியதும் மெதுவாக நிமிர்ந்தவளின் விழிகள் மேலும் நனைய, கால்கள் தானாக பின்னோக்கி நடக்க, “பாப்பா” என்ற லக்ஷ்மியின் குரல் அருகில் கேட்க திடுக்கிட்டு  திரும்பினாள் சந்தியா.

தன் அறைக்கு வந்த கார்த்திக் கட்டிலில் இருந்த குழந்தை படம் போட்ட “சர்ப்ரைஸ்” குறிப்பை பார்த்து அவன் படுக்கை விரிப்பை எடுத்துப் பார்த்தான்... அதன் அடியில் “பேப்ரிக் பெயின்ட்” செய்யப்பட்ட படுக்கை விரிப்பும் அருகிலே ரோஜா பூங்கொத்துடன் “யு ஆர் மை எவ்ரிதிங்....” வாசக அட்டையுடன் ஒரு கடிதம்!

துணிக்கு தூரிகையால் மிக நேர்த்தியாய் உயிரூட்டப்பட்டு  இருந்ததை பார்த்து மலைத்து போய் நின்றான்...  அதிலிருந்த ஓவியம்... அவன் அவளை முதன் முதலில் எடுத்த புகைப்படத்தின் நகல்....! அசல் போல!

அதன் அருகில் உடலை சாய்த்தவாறு அவள் எழுதிய கடிதத்தை பிரித்தான்..

“உன்னை நேரில் பார்த்தா வெட்கம் வெட்கமா வருது பழுத்த பழனியப்பா...அதான் லவ் லெட்டரா எழுதிட்டேன்... எனக்கு லவ் லெட்டர் கொடுத்த பசங்க மாதிரி இல்லாம என்னோட லவ் லெட்டர் தனித்துவமா இருக்கணும்னு ‘ங்க’ போடாம கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன்... நீயா நடுவில் மானே தேனேன்னு போட்டுக்கோ...

உலகத்திலே எனக்கு பிடித்த மனிதர் என் அப்பா....அப்பா ஒரு முன்கோபி. அவரைப் போலவே  நீயும் பாசத்தை கோபத்தில தான் வெளிபடுத்தின! உன்கிட்ட நான் ரசித்த முதல் விஷயமே அந்த கோபம் தான்.... யு ஆர் மை ஆசம் ஆங்கிரி பர்ட்...

நீ அறைந்தப்போ கூட உன் கோபம் பிடித்தது....ஆனா ரொம்ப வலித்ததுடா! எருமை மாட்டாட்டம் உடம்பை வைத்துட்டு சின்ன பொண்ணை அடித்தா எப்படி தாங்குவா சொல்லு? அதான் உன்னை அந்நியனாக்கி சீண்டினேன். ஆனா நீ ரெமோவா விரட்டி வந்து சவால் விட்டியே! பாஸ்ன்னு அலப்பறை பண்ணாம ஸ்போர்டிவா எடுத்து பதிலுக்கு டீஸ் பண்ணியே அது தான் உன்கிட்ட நான் ரசித்த அடுத்த விஷயம்! உன்கிட்ட தோற்கப் பிடித்தது! ரெமோ, யு ஆர் சோ ரொமாண்டிக்!

இப்போ கொஞ்சம் சீரியஸ் ஆன விஷயம் சொல்லப் போறேன்... இதயத்தை ஸ்ட்ராங்கா வைத்துக்கோ. அதுக்காக எனக்கு ப்ளட் கேன்சர்..கொஞ்ச நாள்ல போயிடுவேன்னு எல்லாம் ஆசைப் படாத!  இது வேற! இந்த வருஷம் பர்த்டேக்கு என் முருகன்கிட்ட என்ன ரிக்வெஸ்ட் போட்டு இருந்தேன் தெரியுமா? முருகா ஒரு அக்ஷய பாத்திரம் அனுப்பி வைன்னு....ஏன் தெரியுமா.?

டொய்ங்...கொசுவர்த்தி சுருள்......நோட்ஸ் எடுத்துக்கோ...அப்படியே கொஞ்சம் கர்சீப் எடுத்துக்கோ...

ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ப்ராஜெக்ட் வேலையை முடித்து விட்டு ஊருக்கு போக பஸ்ஸுக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன். கொஞ்ச தூரத்தில ஒருத்தர் எதையோ அரக்க பரக்க சாப்பிட்டு இருந்தார்...பாவம் பசி போலன்னு நினைச்சுட்டே நோட்டம் விட்டப்போ தான் தெரிஞ்சது அவர் சாப்பிட்டது.... அருவருப்பானது...எந்த ஜீவராசியாது தன் கழிவை சாப்பிடுமா? அந்த கொடுமை அங்கு நடந்துகிட்டு இருந்தது! நெஞ்சே வெடிச்சிடும் போல இருந்தது! வேகமா அவர்கிட்ட நான் வைச்சிருந்த சிப்ஸ்சையும், பிஸ்கெட்டையும் கொடுத்தேன்...அதை ஒன்னு விடாம சாப்பிட்டு முடித்தவருக்கு என்ன நிறைவோ...கண்ல இருந்து பொல பொலன்னு கண்ணீர் வந்தது.... உணவுன்னு ஒன்னை உண்ட மயக்கமா?  தெரியலை... என்னை நிமிர்ந்து கூட பார்க்காம கூச்ச சுபாவமா  போய் ஓரத்தில் கண்ணை மூடி தூங்கிட்டார்... அவர்கிட்ட உணர்வுகளை பகிரும் திறன் இல்லை...பசியைக் கூட...! பாவம்!

அப்போ தான் இதே மாதிரி ஆதரவில்லாம விடப்பட்டவங்களை  தேடிப் போய் ஒரு வேளையாவது சாப்பாடு போடலாம்ன்னு எங்க சேரிட்டில முடிவு பண்ணோம்...கணக்கு பண்ணி பார்த்தா எத்தனை ஆயிரம் பேருக்கு ஒரு வேளை உணவு தேவை இருக்கு? மலைத்து போயிட்டோம்...அக்ஷய பாத்திரம் இருந்தா இந்த கஷ்டம் இல்லை தானே? அதான் முருகன்கிட்ட கேட்டேன்...ஆனா, என் முருகன் ஒரளவுக்கு உன் ஷேர்ஸ் மூலமா சமாளிக்க வழி காட்டிட்டான்! எவ்வளவு காசு இருந்தும் கொடுக்க மனசு வரணுமே! நீயா எங்க சேரிட்டி பற்றி தெரிஞ்சிகிட்டு முன் வந்து கொடுத்தியே...உன்னோட அந்த மனசை ரசித்தேன் கார்த்திக்...யு ஹேவ் எ கைன்ட் ஹார்ட்!

இந்த மூணு விஷயம் தவிர, இன்னும் நிறைய இருக்கு! (அதெல்லாம் தெரிந்தா உன் சேட்டை தாங்க முடியாது) ஒன்னு மட்டும் சொல்றேன்,  You are always full of surprises!

இப்படி எல்லாம் ஓகே. ஆனா, ”ஐ வில் டேக் கேர் ஆப் ஹெர்” ன்னு சொல்லிட்டு  அமெரிக்கா ஓடினியே அது எனக்கு  சுத்தமா பிடிக்கலை....என்னை விட வேலை தான் முக்கியமா? யு ஆர் எ ஒர்க்கஹாலிக்! அதுக்கு தண்டனையா தினமும் எனக்கு லஞ்ச்க்கு புது புது ரெசிபி  செய்து ஆபிஸ்க்கு கொண்டு வரணும்!

ருசியா சமைக்க தெரியுது! பாட்டு பாட தெரியுது! என்னை கல்யாணம் பண்ண உனக்கு எல்லா தகுதியும் இருக்கு! ஒன்னு தான் உன்கிட்ட மிஸ்ஸிங்...அது மீசை! சீக்கிரமா வளத்துக்கோ! அப்போ தான் ஓகே சொல்லுவா இந்த வள்ளிக்கண்ணு!

நீ வச்ச பேரிலே எனக்கு பிடிச்சது வள்ளிக்கண்ணு! சரி... இப்போ கண்ணை மூடிக்கோ... உன் வள்ளிக்கண்ணு  லவ் யு சொல்லி ஸ்ட்ரா பெர்ரி பிலேவர்ல கிஸ் பண்ணப் போறா! ”  

செந்நிற சாயம் பூசிய இதழ்களின் ஒத்தடம் கையொப்பமாகி இருந்தது! கண் கலங்க “லவ் யு டூ வள்ளிக்கண்ணு” என்று அதன் மீது உதடுகளை பதித்தான்.  

ஆட்டம் தொடரும் ...

Go to Episode 25

Go to Episode 27

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.