(Reading time: 25 - 50 minutes)

27. என் இனியவளே - பாலா 

En Iniyavale

ளவரசனை திடீரென்று அங்கு எதிர்பார்க்காததால் எல்லோருக்குமே அதிர்ச்சி தான்

அதிலும் உச்சக்கட்ட அதிர்ச்சி இருவருக்கு தான். ஒருவர் இனியா. மற்றொருவர் ஸ்வேதா.

இனியாவிற்கு ஒரே உதறல் தான். முதலில் இங்கு எல்லோரிடமும் பேசி முடித்து பின்பு அவனிடம் எப்படியாவது பேசி, கெஞ்சி அவனை சமாதானப்படுத்தலாம் என்று அவள் எண்ணி இருக்க, அவனோ அவளின் என்ன ஓட்டத்திற்கு மாறாக சரியாக அங்கு வந்து நிற்கவும் என்ன செய்வதென்று புரியாமல் அவள் உடல் உதறல் எடுத்தது.

ஸ்வேதாவிற்கோ அவன் இல்லாத இந்த நேரம் தான் சரி என்று எண்ணி எதையாவது செய்து எல்லோரையும் சரி கட்டி விட்டால் பின்பு அவன் வரும் போது அந்த அளவுக்கு அவனால் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது, அப்படியே செய்தாலும் இனியா அவனை சரி கட்டி விடுவாள் என்று எண்ணியிருக்க, அவனோ யாரும் எந்த முடிவும் கூறாத நிலையிலே வந்து நிற்கிறான் எனவும் அவளுக்கு பயம் வந்து விட்டது.

அவன் வாயாலே சம்மதம் என்ற வார்த்தையை கேட்டும் அவளால் நம்பவே இயலவில்லை. அவன் இப்படி சாதாரணமாக எல்லாம் சரி என்று கூறி விட மாட்டான் என்று அவளுக்கு நன்றாகவே தெரியும். எனவே கையை பிசைந்துக் கொண்டு நின்றாள்.

முதல் கட்ட அதிர்ச்சி மறைந்து இன்னும் என்ன நடக்குமோ என்று இனியா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

“என்னப்பா சொல்ற” என்று கடைசியாக அந்த மௌனத்தை உடைத்தவர் ராஜலக்ஷ்மி தான்.

“ஆமாம்மா. உங்க எல்லாருக்கும் இஷ்டம்ன்னா எனக்கும் ஓகே தான். இதுல நான் என்னோட விருப்பத்தை யார் மேலயும் திணிக்க விரும்பல” என்றான்.

“என்னப்பா இப்படி சொல்ற” என்று கேட்டவருக்கு ஒரே குழப்பம் தான்.

‘ராஜலக்ஷ்மிக்கு இந்த திருமணத்தை நடத்துவதில் எந்த தடையும் கிடையாது தான். ஏற்கனவே சந்துரு படும் கஷ்டத்தை பார்த்து, அந்த பொண்ணையே கட்டி வச்சிடலாமேப்பா என்று அவர் இளவரசனிடம் கேட்டு தான் இருந்தார். ஆனால் அப்போது அவன் தான் அந்த பெண் சரியில்லை என்று கூறி வேண்டாம் என்று மறுத்தான். ஆனால் இப்போதோ அவனே சரி என்று சொல்கிறானே என்று தான் அவருக்கு குழப்பம்.

“கல்யாணம் பண்ணிக்க போறது அவன். இதுல அவன் விருப்பம் தான் முக்கியம். என்ன தான் அண்ணனா இருந்தாலும், அவன் வாழ்க்கைல நான் தலையிட கூடாதும்மா. அவன் வாழ்க்கையை அவன் தான் டிசைடு பண்ணணும்” என்றான் இனியாவை பார்த்துக் கொண்டே.

இதில் தலை சுற்றி போனதென்னவோ சந்துரு தான்.

அவனுக்கு அவன் அண்ணனை பற்றி நன்றாக தெரியும். அவனுக்கு ஒன்று வேண்டாமென்றால் வேண்டாம் தான். அவன் இப்படி சீக்கிரமாக எல்லாம் விட்டுக் கொடுத்து விட மாட்டான்.

‘இப்போது அதை எல்லாம் விட தான் என்ன செய்ய வேண்டும் என்பது தான் அவனுக்கு குழப்பமாக இருந்தது. அவனுக்கு ஸ்வேதாவை பிடிக்கும் தான். ஆனால் அவன் முதலில் பார்த்த ஸ்வேதாவிற்கும் இப்போது பார்க்கும் ஸ்வேதாவிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக தோன்றியது அவனுக்கு.

அதிலும் அண்ணன் தான் இப்படி கூறினார். கொஞ்ச நாள் ஸ்வேதா கிட்ட இருந்து விலகி இரு. அந்த கொஞ்சம் டைம்க்கு அப்புறமும் உனக்கு அவ மேல இப்ப இருக்கிற அன்புல எந்த மாற்றமும் இல்லாம அதே அளவு அன்பு இருந்தா கண்டிப்பா நான் உனக்கு உன் காதலை நிறைவேற்றி வைக்கிறேன் என்று.

அப்படி சொல்லிட்டு இப்ப ஏன் இந்த முடிவு திடீர்ன்னு எடுத்தார். என் கிட்ட ஏன் ஏதும் கேட்கலை. என் கிட்ட கேட்டிருந்தா நான் எனக்கு இருக்கிற குழப்பத்தை சொல்லிருப்பேன் இல்ல’ என்று எண்ணிக் கொண்டான்.

ராஜலக்ஷ்மிக்கும் என்ன கூறுவது என்று தெரியாததால் அமைதியாகவே இருந்தார்.

ஆனால் எல்லோரை விட குழப்பத்திலும், உச்சக்கட்ட கோபத்திலும் இருந்தது ஜோதி தான். இளவரசனை விடவே அவளுக்கு கோபம் இருந்தது.

அத்தை ஏதாவது கூறுவார்கள் என்று அவள் எதிர்ப்பார்த்திருக்க அவரும் ஏதும் கூறாமல் அமைதியாக இருந்தார். அதை விட சந்துரு ஏதாவது மறுத்து கூறுவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால் அவனுமே மௌனம் சாதித்தானே தவிர ஒரு வார்த்தையும் பேசினானில்லை.

சந்துருவை ஒரு பார்வை பார்த்தாள் ஜோதி. அவனோ அவளின் பார்வையை கண்டு தலை குனிந்துக் கொண்டான்.

ஜோதிக்கு இவனா இப்படி என்று ஆயாசமாக இருந்தது. அவனுக்கு போயும் போயும் ஸ்வேதா தான் கிடைத்தாளா என்று இருந்தது. அவள் மனதால் இதை ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

இத்தனை நாள் இவன் இதை கூறவில்லையே என்று கோபமாக வந்தது.

அவன் யாரையோ விரும்புகிறான் என்று அவளுக்கு தெரியும் தான். அது இளவரசனுக்கு பிடிக்கவில்லை என்று கூட இனியா கூறியிருக்கிறாள். ஆனால் அவளுமே அது ஸ்வேதா தான் என்று கூறியதில்லை.

அவளுக்கு இப்போது எல்லாம் புரிந்தது. தனக்கு ஸ்வேதாவை பிடிக்காது என்பதால் தான் அவள் தன்னிடம் ஏதும் அதை பற்றி சொல்லவில்லை என்பது.

தங்கையை முறைத்து விட்டு அமைதியாக இருந்தாள்.

வீட்டினுள் நுழைந்த ராஜகோபால் அனைவரையும் பார்த்து வியந்தார். இளவரசன், சந்துரு, ராஜலக்ஷ்மி, மோகன், பவித்ரா என எல்லோரும் ஒன்றாக இருப்பதை பார்த்தவருக்கு இப்போது என்ன பிரச்சனையோ என்ற எண்ணம் தான் தோன்றியது.

ஆனால் எதையும் வெளியில் காட்டாமல் “எப்ப வந்த ராஜி” என அவரிடம் விசாரித்து விட்டு, மோகனையும் விசாரித்தார்.

“ஒரு நிமிஷம். பேசிட்டிருங்க. டிரஸ் சேன்ஜ் மட்டும் பண்ணிட்டு வந்துடறேன்” என்று விட்டு உள்ளே நுழைந்தவருடன் லக்ஷ்மியும் சென்றார்.

உள்ளே சென்று மனைவியிடம் எல்லாவற்றையும் கேட்டு தெரிந்துக் கொண்டவருக்கு ‘ஏன் தான் தன் மகள் இந்த விசயத்தில் தலையிடுகிறாளோ’ என்ற எண்ணம் தான் தோன்றியது.

‘அவள் வாழ்க்கையே அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்க, தேவை இல்லாமல் ஏன் இவள் இப்படி நடந்துக் கொள்கிறாள்’ என்று எண்ணியவர் ரிப்ரெஸ் செய்து கொண்டு திரும்ப வெளியே சென்றார்.

அவர்கள் திரும்ப வெளியே செல்லும் போதும் அங்கு அமைதி மட்டுமே நிலவிக் கொண்டிருந்தது.

அந்த அமைதியை தாங்கிக் கொள்ள இயலாமல் ராஜலக்ஷ்மியிடம் திரும்பிய ஜோதி “ஏன் அத்தை, தெரியாம தான் கேட்கறேன், இப்ப எதுக்கு இப்படி திடீர்னு ஒரு கல்யாணத்தையே பேசி முடிக்கறீங்க. அப்படி என்ன அவசரம் இப்ப” என்றாள்.

“எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை ஜோதி. எனக்கும் அப்படி தான் தோணுது. இப்ப திடீர்ன்னு ஏன் இப்படி பேசணும்ன்னு” என்று கூறி மகன்கள் இருவரையும் பார்த்தார்.

சந்துருவோ தலை குனிந்தப் படி இருக்க, இளவரசன் தான் பேச ஆரம்பித்தேன்.

“எனக்கும் ஒன்னும் இதை உடனே இப்படி பேசணும்ன்னு இல்லைம்மா. ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி இதுல நான் சொல்றதுக்கு எதுவும் இல்லை. எனக்கு எந்த அப்ஜெச்சனும் இல்லை, அதை தான் நான் சொல்ல வந்தேன். என்னவோ நான் தான் இதுக்கு தடையா இருக்கற மாதிரி எல்லாரும் நினைக்கறாங்க. நான் வேண்டாம்ன்னு தான் சொன்னேன். ஆனா அது சந்துருவோட வாழ்க்கை, அவனுக்கு பிடிச்ச லைப் தான் அவன் சூஸ் பண்ணணும். சோ நீங்க எந்த முடிவு எடுத்தாலும் எனக்கு ஓகே. அதை தவிர இப்பவே இதை நீங்க கன்பார்ம் பண்ணணும்ன்னு எல்லாம் நான் சொல்லலை. மத்தபடி எல்லாம் உங்க முடிவு. அவ்வளவு தான்”

இப்போது எல்லோரும் ராஜலக்ஷ்மி என்ன கூற போகிறார் என்று அவர் முகத்தையே பார்த்தார்கள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.