(Reading time: 25 - 50 minutes)

த்தை” என்று இனியா ஆரம்பிக்கும் போதே அவளை நிறுத்திய ராஜலக்ஷ்மி,

“பொறு இனியா. அவன் அவனோட முடிவை சொல்லிட்டான் தான், அதுக்காக எல்லாத்தையும் நான் இப்பவே முடிவு பண்ணிட முடியுமா என்ன. எனக்கு நிறைய யோசிக்கணும். இது ஒன்னும் விளையாட்டு விஷயம் இல்லை. என் பையனோட வாழ்க்கை. இந்த பொண்ண நான் இது வரைக்கும் ரெண்டு முறை தான் பார்த்திருக்கேன். என் பையனுக்கு பிடிச்சிருக்கு சரி தான். ஆனா அதுக்காக பசங்க சொல்றதை கண்ணை மூடிட்டு ஒத்துக்க சொல்றியா” என்று நிதானமாக வினவினார்.

“இல்லை அத்தை. நான் அப்படி சொல்லலை. நீங்க யோசிச்சே சொல்லுங்க” என்றவளின் குரலில் குழப்பம் தான் தெரிந்தது.

“அதை விட இப்ப சந்துரு கல்யாணத்துக்கு என்ன அவசரம். அவனுக்கு மூத்தவன் இருக்கும் போது இவன் கல்யாண விஷயத்தை பத்தி இப்ப ஏன் பேசணும். என்னை பொறுத்த வரைக்கும் என் பெரிய பையனுக்கு கல்யாணம் பண்ணிட்டு அப்புறம் தான் இவன் கல்யாணத்தை பத்தி யோசிக்கணும். இப்ப ஏன் வீணா இதை பத்தி பேசணும்” என்றார்.

“அம்மா இப்ப என் கல்யாணத்தை பத்தி ஏதும் பேச வேண்டாம். ப்ளீஸ்” என்றான் இளவரசன்.

“நீ சும்மா இருடா. உனக்கு ஏதும் தெரியாது.”

ராஜகோபாலிடம் திரும்பியவர் “நான் சொல்றது சரி தானே அண்ணா. ஏதோ திடீர்ன்னு இதை பத்தி பேசனதுல எனக்கு கொஞ்சம் குழப்பமாவே இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க அண்ணி” என்று லக்ஷ்மியையும் கேட்டார்.

“சரி தான்மா. பெரிய பையன் இருக்கும் போது சின்ன பையன் கல்யாணத்துக்கு என்ன அவசரம். நீ சொல்றது சரி தான்” என்றார் ராஜகோபால்.

லக்ஷ்மியும் “அவர் சொல்றது சரி தான் அண்ணி” என்றார்.

இப்போது எல்லோரும் ராஜலக்ஷ்மியின் பேச்சே சரி என்று கூறி விட ஸ்வேதாவிற்கு தான் எரிச்சலாக வந்தது.

‘என்னடா இது. இப்ப தான் ஏதோ இத்தனை நாள் பிரச்சனை பண்ணவன் சரி வந்திருக்கான்னா இப்ப போய் இதுங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து கிட்டு இப்படி பேசுதுங்களே’

ஆனால் எதையும் முகத்தில் காட்டாமல் அமைதியாக நின்றாள்.

“அப்ப சரி நான் கிளம்பறேன்” என்றார் ராஜலக்ஷ்மி.

“என்னமா கிளம்பறேன்ற. இரு. இங்கேயே சாப்டுட்டு போலாம். எல்லாரும் வந்திருக்கீங்க. உன் கிட்ட வேற கொஞ்சம் பேசணும். இரும்மா”

சிறிது தயங்கினாலும் ராஜலக்ஷ்மி அங்கேயே இருந்தார்.

ல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் அமைதியாகி விட ஜோதி மட்டும் அமைதியாகி விட வில்லை. அவளால் தன் கணவன் தன்னிடம் சொல்லாமல் செய்த இந்த வேலையை பொறுத்துக் கொள்ள இயலவில்லை. அவளுக்கு ஸ்வேதாவை பிடிக்காது என்று தெரிந்தும் கணவன் செய்த இச்செயல் அவளை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றது.

ரௌத்திரமாக கணவனை முறைத்தாள்.

அவள் பார்வையை கண்ட பாலுவிற்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. அவளுக்கு கோபமாக இருந்தாலும் அதை இப்படி வெளிப்படையாக காட்ட மாட்டாள். இப்போது அப்படி எல்லோர் முன்னிலையிலும் முறைக்கிறாள் என்றால் அவள் எவ்வளவு கோபமாக இருப்பாள் என்று அவனால் உணர முடிந்தது. ஆனால் அதை எவ்வாறு குறைப்பது என்று தான் அவனுக்கு தெரியவில்லை.

சாப்பிடலாம் என்று கூறியதற்கு இன்னும் நேரமாகவில்லையே என்று ராஜலக்ஷ்மி கூறிவிட அதற்கு முன்னால் பேசி விடலாம் என்று ராஜகோபால் எண்ணினார். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தார். மோகனோ அவன் அக்காவை ஏக்கமாக பார்த்து விட்டு தன்னிடம் கெஞ்சலாக பார்த்த பார்வை அவருக்கு என்ன பேச வேண்டும் என்பதை நினைவூட்டியது போல் இருந்தது.

அவரின் பார்வை எல்லோரையும் சுற்றிவிட்டு ஸ்வேதாவிடம் நிலைத்தது. இப்போது அவர் பேச போவது அவரின் குடும்ப விஷயம், மற்றவர்கள் எல்லோரும் அவரின் குடும்ப நபராக இருக்க, அவரால் ஏனோ ஸ்வேதாவை அதில் சேர்த்துக் கொள்ள இயலவில்லை. அதை விட இப்போது பேச போவது மோகனை பற்றி, அவன் அந்த பேச்சில் சங்கடமடையலாம். அப்போது போய் இந்த பெண் இருந்தால் சரி வராது என்று எண்ணி அவர் பார்வையை தன் மருமகனிடம் செலுத்தினார்.

பாலுவும் புரிந்துக் கொண்டதை போல் “சரி வா ஸ்வேதா. கிளம்பு. நான் உன்னை வீட்டுல கொண்டு போய் விடறேன்” என்றான்.

ஸ்வேதாவிற்கு ஏனோ அவளை பற்றி தான் அங்கு பேசப் போவதாக தோன்ற, அங்கிருந்து கிளம்ப மனமே இல்லை. யாரவது அவளை போக விடாமல் தடுப்பார்களா என்று பார்த்தாள். ஆனால் எல்லோரும் ஏனோ அவரவர் வேலையில் மூழ்கியதை போல அதை கண்டு கொள்ளாமல் இருந்தனர்.

கொஞ்சம் தயங்கி பார்த்தாள். ஆனால் பாலுவோ “கிளம்புன்னு சொல்றேன் இல்ல” என்று குரலை உயர்த்தவும், அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாமல் எல்லோரிடமும் கிளம்புகிறேன் என்று கூறிவிட்டு, இனியாவிடம் தனியாக வந்து “தேங்க்ஸ் அக்கா. போய்விட்டு வருகிறேன்” என்று விடை பெற்று சென்றாள்.

அதை பார்த்த இளவரசனுக்கு தான் எரிச்சலாக வந்தது. கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டான்.

சென்று கொண்டிருக்கும் வழியில் ஸ்வேதா கொஞ்சம் கோபத்துடன் “இப்ப எதுக்கு மாமா உடனே கிளம்ப சொன்னீங்க” என்றாள்.

பாலுவுக்கு ஏற்கனவே மனைவி தன்னை முறைக்கிறாள் என்ற கோபமிருக்க, “இப்ப அவங்க ஏதோ பர்சனலா பேச போறாங்க. அதுல நீ எதுக்கு” என்றான்.

“என்னை பத்தி பேசும் போது நான் இருக்க வேண்டாமா” என்றாள் ஆத்திரத்துடன்.

பாலுவும் கோபத்துடன் “லூசா நீ. உன்னை பத்தின பேச்சை ஒன்னும் அவங்க பேச போறதில்லை. அதை பத்தி ஏற்கனவே பேசி முடிச்சாச்சி. மாமாவோட தம்பி வந்திருக்காரு. அவங்க ஏதோ பேசுவாங்க. நான் இருந்தா கூட அவங்களுக்கு சங்கடமா இருக்கலாம்ன்ற நினைப்புல நானே கிளம்பி வந்துட்டேன். நீ என்னடான்னா” என்றான்.

ஸ்வேதவிற்கும் இவன் இந்த அளவிற்கு இறங்கி வந்தது பெரிது என்று தோன்றிவிட அடங்கி போய் விட்டாள்.

ன்னம்மா மோகன் வந்திருக்கான். அவன் கிட்ட பேசலையா” என்று மெதுவாக தங்கையிடம் கேட்டார் ராஜகோபால்.

அவரை நிமிர்ந்து பார்த்த ராஜலக்ஷ்மியின் முகத்தில் அளவில்லா துக்கம் தெரிந்தது.

“என்னை பிடிக்காதவங்க கிட்ட எனக்கு என்னண்ணே பேச்சு இருக்கு”

மோகனுக்கோ எப்படி தன் அக்காவின் கோபத்தை குறைப்பது என்று தெரியவில்லை. தான் செய்ததும் கொஞ்சமா என்று அவன் மனசாட்சி அவனையே கேள்விக் கேட்டுக் கொண்டிருந்தது.

“அக்கா ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க” என்றான் மோகன்.

“நான் யாருப்பா உன்னை மன்னிக்கறதுக்கு” என்று திரும்ப கோபத்துடன் கேட்டார் ராஜலக்ஷ்மி.

யாராவது உதவிற்கு வருவார்களா என்று அவனோ அண்ணனை பார்க்க அவரோ நீ தான் சரி செய்ய வேண்டும் என்பதை போல் பார்த்தார். அவர் திரும்பி இளவரசன் உதவிக்கு வருவானா என்று பார்த்தார்.

அவனும் எந்த உதவிக்கு வருவதற்கு தயாராக இல்லை என்பது அவன் முகத்தில் நன்றாக தெரிந்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.