(Reading time: 25 - 50 minutes)

திரும்ப அக்காவிடம் திரும்பி “ஆயிரம் தான் இருந்தாலும் நான் உன் தம்பி இல்லையாக்கா” என்று கேட்டான்.

“அது எத்தனை வருசத்துக்கு அப்புறம் உனக்கு தெரிஞ்சிருக்குப்பா. எனக்கு கல்யாணம் ஆனதுல இருந்து உனக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லாம போயிடுச்சி. சரி அந்த டைம்ல தான் உனக்கு என் மேல கோபம் அதிகமா இருந்துச்சின்னாலும் அதுக்கப்புறம் இவ்வளவு வருஷம் என்னாச்சி. எனக்கும் பசங்க பொறந்து இதோ அவங்களுக்கே கல்யாணம் பேசற டைம்ல வந்து நான் தான் உங்க மாமான்னு நிக்கறவனை என்ன பண்றதுன்னு எனக்கு தெரியலை”

“அக்கா நான் அப்ப இருந்த கோபத்துல தப்பா நடந்துகிட்டேன். சாரிக்கா. தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுங்க.”

“கோபமா. நான் ஒன்னும் உங்க யாருக்கும் தெரியாம ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலை. என் காதலை பத்தி நானே தான் வீட்ல சொன்னேன். நீங்க ஒத்துக்கலை. நான் அவரை தான் பண்ணிப்பேன்னு கல்யாணம் செஞ்சிக்கிட்டேன். அதுவும் என் மாமனாரே எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாரு. இதுல உனக்கு கோபப்பட என்ன நியாயம் இருக்கு. சரி அதையும் விடு. ஆரம்பத்துல தான் உனக்கு கோபம் இருந்துச்சினா ஒரு வருஷம் கழிச்சி என்னை பார்த்தப்ப கூட நீ எப்படி டா பேசின. அதுவரைக்கும் உங்களை எல்லாம் நினைச்சி வருத்தப்பட்ட மனசு வெறுத்து போச்சி. அந்த ஊரே வேண்டாம்ன்னு வந்துட்டோம்.” என்றவரின் கண்களில் இருந்து கண்ணீர் வந்துக் கொண்டிருந்தது.

அதைக் கண்ட ராஜகோபலோ ராஜி என்று கூறிக்கொண்டு அவர் அருகில் அமர்ந்து அவருக்கு ஆறுதல் கூற, மோகனோ அவர் அமர்ந்திருந்த சோபாவின் கீழ் அமர்ந்தவன் “அக்கா” என்று கூறிக் கொண்டு கண்ணீர் சிந்தினான்.

ராஜகோபாலுக்கு தான் யாரை சமாதானப் படுத்துவது என்று தெரியாமல் குழம்பி போனார்.

“என்ன டா மோகன் நீயும் ஏன் டா இப்படி பண்ற. ரெண்டு பேரும் கண்ணை துடைங்க. என்ன இது. சின்ன பசங்க மாதிரி” என்று அதட்டினார்.

ஆனால் இருவரும் அது காதிலேயே விழாதது போல் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர்.

“அத்தை” என்று கூறிக் கொண்டு இனியா சென்று ராஜலக்ஷ்மியை சமாதானப் படுத்த, இளவரசன் “மாமா எந்திரிங்க, என்ன இதெல்லாம்” என்று அவரை வெளியில் அழைத்து சென்றான்.

வெளியில் அழைத்து சென்ற இளவரசன் “என்ன மாமா. ஏன் இப்படி. எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை. ரொம்ப எமோசனல் ஆகாதீங்க” என்றான்.

அவரோ ஏதும் பேசாமல் அவரை கட்டுப்படுத்திக் கொள்ள முயன்றார்.

பின்பு ஏதேதோ பேசி அவரை ஓரளவு சமாதானப் படுத்தி விட்டான்.

அவரே பின்பு “ஏன்ப்பா. அம்மா கிட்ட நீ எனக்காக ஒரு வார்த்தை பேசி இருக்கலாமில்ல.” என்றார்.

சிறிது மௌனம் சாதித்த இளவரசன் “இல்ல மாமா. எனக்கும் உங்க மேல கோபம் தான். ஆனா அன்னைக்கு நீங்க ஊர்ல சுதா பெரியம்மா, செல்வி பெரியம்மா கிட்ட எல்லாரும் நிறைஞ்ச சபைல எங்களை சப்போர்ட் பண்ணி பேசினீங்கல்ல, அதுல என் மனசு சமாதானம் ஆகிடுச்சி. என் கண்ணுக்கு தெரிஞ்சி நீங்க எங்களுக்கு எந்த கொடுமையும் செய்யலை மாமா. அதனால் நான் ஈஸியா சமாதானம் ஆகிட்டேன். சொந்தம்ன்னு யாரும் இல்லாத எங்களுக்கு புதுசா மாமான்னு வந்தா சந்தோசமா தான் இருக்கும். நாங்களும் ஏத்துப்போம்.

ஆனா அம்மாவோட நிலைமை அப்படி இல்லையே. அக்கா, அண்ணன், தம்பின்னு எல்லாரும் சொந்தமா இருந்துட்டு, அம்மாவுக்கு பிடிச்சவரை கல்யாணம் பண்ணதுக்காக நீங்க எல்லாரும் என் அம்மாவை வேண்டாம்ன்னு சொல்லிட்டீங்க. என் அம்மாவும் திடீர்ன்னு ஒரே நாள்ல உங்க எல்லாரையும் இழந்துட்டாங்க. அவங்க மனசு இத்தனை வருசமா எப்படி தவிச்சி இருக்கும் மாமா.

உங்களை பார்க்கறதுக்கு முன்னால வரைக்கும் எனக்கும் கோபம் தான். அம்மா அவ்வளவா உங்களை எல்லாம் மிஸ் பண்ற மாதிரி காண்பிச்சிக்க மாட்டாங்க. ஆனா அவங்க பீல் பண்றது எங்களுக்கு தெரியும். எதாச்சும் ஒரு நாள் திடீர்ன்னு வந்து இன்னைக்கு என் அக்கா கல்யாண நாள், இன்னைக்கு என் தம்பி பிறந்த நாள் அப்படின்னு சொல்லி கண்ணீர் விடுவாங்க. எங்களுக்கு எப்படி இருக்கும் மாமா. இதுக்காக அம்மா என் கிட்ட எத்தனை நாள் திட்டு வாங்கி இருப்பாங்க தெரியுமா.

அதனால அந்த அளவுக்கு எங்க கிட்ட காண்பிச்சிக்க மாட்டாங்க. ஆனா அவங்களையும் மீறி அவங்க பீலிங்கை எப்பவாவது வெளிப்படுத்திடுவாங்க. அழுதுட்டே இப்படி எதாச்சும் சொல்லிட்டு, இப்படி எந்த விசயமும் எனக்கு மறக்க மாட்டுதே, ஆனா அவங்க எல்லாரும் எப்படி என்னை முழுசா மறந்துட்டாங்கன்னு அழுவாங்க. இப்படி இத்தனை வருசமா உங்களை எல்லாம் நினைச்சி வருத்தப்பட்டுட்டு இருந்த என் அம்மாக்கு உங்களை எதாச்சும் சொல்ல உரிமை இல்லையா மாமா. நான் எப்படி அவங்க கிட்ட போய் உங்களுக்காக பேச முடியும். உங்க அக்கா கிட்ட நீங்க தான் பேசணும்”

மோகன் திகைத்து போய் விட்டார். அவருக்கு அவரின் அக்காக்களில் ராஜியை தான் மிகவும் பிடிக்கும். ஆனால் அந்த காலத்தில் காதல் திருமணம் என்பது மிக பெரிய விஷயம். வீட்டுல ஒரு பையன் காதல் திருமணம் செஞ்சாலே ஊரே அதை பத்தி தான் பேசும். அந்த காலத்துல போய் அக்கா இப்படி செஞ்சது அவருக்கு மிக பெரிய வருத்தம். அப்பாவும், மற்ற அக்காக்களும் பேசியது தான் சரி என்று அவரும் அப்போது எண்ணினார். சில வருடங்களுக்கு அந்த எண்ணம் மாறவே இல்லை. ஆனால் எப்போது அந்த எண்ணம் மறைந்து தனக்கு பிடித்த அக்காவை திரும்ப பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது என்று அவருக்கே தெரியவில்லை. சில காலமாகவே அக்காவை பார்க்க வேண்டும். பார்க்காமலே இறந்து விடுவேனோ, அக்காவிடம் மன்னிப்பு கேட்காமலே போய் விடுவேனோ என்றெல்லாம் எண்ணி எண்ணி மாய்ந்து போனார். அவருக்கும் இப்படி வருத்தம் இருந்தது தான்.

ஆனால் அக்காவோ ஒவ்வொரு நாளும் தங்களை நினைத்து வருந்தி இருக்கிறார் என்று அவருக்கு இப்போது தெளிவாக புரிந்தது. எல்லோரும் கூறுவதை போல் அக்கா அவளின் மனதுக்கு பிடித்தவனோடு போய் விட்ட பின் தங்களை மறக்கவில்லை என்பதே அவருக்கு மிகப் பெரிய சந்தோசத்தையும், அப்படி இருந்தவரை எல்லோருடன் சேர்ந்து தானும் வருத்தி விட்டேனே என்று வருத்தமும் ஒரு சேர வந்தது.

திரும்ப மோகனும், இளவரசனும் உள்ளே நுழைந்த போது ராஜலக்ஷ்மி “முடியலைண்ணே. உங்க எல்லாரையும் பார்க்க முடியாம எத்தனை நாள் வருத்தப்பட்டிருப்பேன் தெரியுமா, நான் அப்படி என்னண்ணே பண்ணிட்டேன்.  எனக்கு அவரை தானே பிடிச்சிருந்தது.  அதை நான் ஒழுங்கா வீட்ல தானேண்ணே சொன்னேன். சரி அப்ப நடந்தது நடந்து போச்சி. அப்பா அம்மா தான் வயசானவங்க. அவங்களுக்கு தான் என் மேல கோபம். விடுங்க. ஆனா இவனும் சேர்ந்திட்டு தானேண்ணே என்னை ஒதுக்கி வச்சிட்டான்.”

“என் வீட்டுக்காரர் சொல்லுவாரு. விடு ராஜி, நமக்கு ஒரு குழந்தை பிறந்தா எல்லாரும் எல்லாத்தையும் மறந்துட்டு நம்மளை சேர்த்துப்பாங்கன்னு, அதுக்காகவே குழந்தை வேணும்ன்னு ஆசைப்பட்டேன். நான் அம்மா ஆக போறேன்னு தெரிஞ்ச உடனே எனக்கு ஒரு குழந்தை வர போகுதுன்றதை விட, இந்த குழந்தையால எல்லாரும் திரும்ப எனக்கு கிடைச்சிடுவாங்கன்னு நினைச்சி சந்தோசப் பட்டேனே, ஆனா என்ன நடந்தது தெரியுமாண்ணே, மோகன் என்னை ஒரு வருஷம் கழிச்சி பார்க்கும் போது நான் முழுகாம இருந்தேன் அண்ணே. அவனை முதல்ல பார்த்த உடனே நான் பட்ட  சந்தோஷம், அவன் என்னை பார்த்துட்டு அவன் முகத்துல காண்பிச்ச வெறுப்பு, வயித்துல ஒரு புள்ளைய சுமந்துக்கிட்டு இருக்கேன் அதுக்காக கூட பார்க்காம ரோடுல வச்சி சண்டை போட்டுட்டு போனான்ண்ணே. எனக்கு  எப்படி இருந்திருக்கும்ன்னு நினைச்சி பாருண்ணே. என் வீட்ல இருக்கறவங்க என்னை ஏத்துக்கணும்ன்றதுக்காகவே குழந்தை வேணும்ன்னு நினைச்ச எனக்கு எப்படி பட்ட அடி பார்த்தியா. தாங்க முடியலைண்ணே தாங்க முடியலை” என்று கதறியவாறு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.

இளவரசன் இரண்டு எட்டாய் நடந்து ராஜலக்ஷ்மியின் அருகில் செல்லவும், அவர் அருகில் அமர்ந்திருந்த இனியா எந்திரித்து இடம் தந்தாள். அவன் தாயின் அருகில் அமர்ந்து “என்னம்மா இது, சின்ன குழந்தையாட்டம் அழுதுக்கிட்டு. விடுங்கம்மா” என்றவாறு சமாதானப் படுத்த முயன்றான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.