(Reading time: 25 - 50 minutes)

சிலை போல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த மோகன் சென்று தன் அக்காவின் காலை பிடித்து “ஐயோ அக்கா என்னை மன்னிச்சிடுக்கா. நிஜமாவே அப்ப எனக்கு புத்தி இல்லாம போயிடுச்சிக்கா. வீட்டு கௌரவம் போயிடும்ன்னு உனக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிடணும்ன்னு எல்லாரும் சொன்னது தான் எனக்கு சரியா பட்டுதே தவிர உனக்கு பிடிச்ச மாப்பிள்ளையை கல்யாணம் பண்ணி வைக்கணும்ன்னு எனக்கு தோணலைக்கா. இந்த பாவிக்கு இப்ப என் பொண்ணு கல்யாண வயசுல நிக்கும் போது தான் நம்ம பொண்ணுக்கு மட்டும் பிடிச்ச கல்யாணமா பண்ணி வைக்கணும்ன்னு தோணும் போது தான், அப்ப அக்காக்கு பண்ணது தப்பாச்சேன்னு தோணுதுக்கா. திரும்ப உன்னை பார்க்கும் போது நீ முழுகாம இருந்தது கூட எனக்கு தெரியலைக்கா. ஆத்திரம் என் கண்ணை மறைச்சிடுச்சிக்கா. தயவு செஞ்சி என்னை மன்னிச்சிடுக்கா” என்றவரை அவரின் காலை பிடித்துக் கொண்டே கண்ணீர் சிந்தினார்.

“என்னடா இது காலை எல்லாம் பிடிச்சிக்கிட்டு, விடு” என்றாள் ராஜலக்ஷ்மி மெதுவாக.

“அக்கா” என்று அவரின் முகத்தை பார்த்தார் மோகன்.

“முதல்ல எந்திரிச்சி சேர்ல உட்கார். என்ன பண்ணிட்டிருக்க”

மோகன் எந்திரிக்கவும், இளவரசன் எழுந்து இடம் கொடுத்தான்.

அங்கிருந்த அனைவருமே நெகிழ்ந்த நிலையில் இருந்தனர். அனைவரின்  கண்களும் கலங்கி இருந்தது.

பவித்ராவை “இங்கே வாம்மா” என்று அழைத்து வாத்சல்யத்துடன் அனைத்துக் கொண்டார் ராஜலக்ஷ்மி.

பவித்ராவும் அவரின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.

ஜோதியின் கண் சந்துருவை தான் பார்த்தது. “பார்த்தாயா” என்பதை போல் பார்த்து வைத்தாள். சந்துருவோ தலை குனிந்துக் கொண்டான்.

பின்பு மோகனும் ராஜலக்ஷ்மியும் நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தனர். அனைவரும் அதை கேட்டபடி அமர்ந்துக் கொண்டிருந்தனர்.

கடைசியாக லக்ஷ்மி ரொம்ப நேரம் ஆகிடுச்சி சாப்பிடலாம் என்று வற்புறுத்திய பிறகு தான் எல்லோரும் சாப்பிட சென்றனர்.

சாப்பிட்ட பிறகு ராஜலக்ஷ்மி மோகனையும், பவித்ராவையும் அவர்களுடனே கிளம்ப சொன்னார்.

பவித்ராவிற்கு தான் கிளம்பவே மனமில்லை. “இல்லை அத்தை, நான் இங்கேயே இருக்கேன்” என்று கூறினாள்.

“ஏன். இந்த அத்தை வீட்டுக்கு வர மாட்டியா”

“அப்படி எல்லாம் இல்லை அத்தை” என்றவளால் எதை சொல்லி அங்கு போகாமல் இருப்பது என்று தெரியாததால் பலமாக ஆட்சேபிக்க முடியாமல் அவர்களுடனே கிளம்பி சென்றாள்.

வீடு வந்த சேர்ந்த பின்னும் நெடுநேரம் மோகனும், ராஜலக்ஷ்மியும் பேசிக் கொண்டே இருந்தனர். மற்ற மூவரும் அமைதியாக அதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தனர். பவித்ராவால் தான் அங்கு இருக்கவே முடியவில்லை.

சிறிது நேரம் கழித்து பவித்ராவை பார்வையிட்ட ராஜலக்ஷ்மி “என்னம்மா” என்றார்.

“ஒன்னும் இல்லை அத்தை”

“தூக்கம் வருதா”

“இல்லை கொஞ்சம் டையர்டா இருக்கு. அவ்வளவு தான்” என்றாள் பவித்ரா.

“சந்துரு பவித்ராவுக்கு மாடில அந்த ரெண்டாவது ரூம் காண்பிச்சிடு. மாமாக்கு இங்கே கீழவே நான் ரூம் கொடுத்துடறேன்” என்றவர் “பவித்ரா அவன் கூட போம்மா” என்றார்.

பவித்ரா சிறிது தயங்கவும் மோகன் “போம்மா. நைட் ட்ராவல் பண்ணது டயர்டா இருக்கும். நீ போய் தூங்கு. நான் எவ்வளவு நாள் கழிச்சி அக்காவை பார்த்திருக்கேன். அதனால எனக்கு இப்போதைக்கு தூக்கம் வராது. நீ போய் தூங்கு” என்றார்.

“சரிப்பா” என்றவாறே அவள் எந்திரிக்கவும், சந்துரு அவளருகில் சென்று அவள் பேகை எடுக்க சென்றான்.

அவள் “வேண்டாம். நானே எடுத்துக்கறேன்” எனவும்,

ராஜலக்ஷ்மி “அவன் எடுத்துக்கட்டும். நீ போம்மா” என்றார்.

சந்துரு அவள் பேகை எடுத்துக் கொண்டு முன்னே நடக்க அவளோ பின்னே சென்றாள்.

அவன் சென்று ரூமை திறந்து காட்டி விட்டு, “ரெஸ்ட் எடுத்துக்கோங்க. ஏதாச்சும் வேணும்ன்னா என்னையோ இல்ல அம்மாவையோ கேளுங்க” என்றான்.

அவள் சரி என்றவாறு தலை அசைத்தாலே தவிர நிமிர்ந்துக் கூட பார்க்கவில்லை.

சந்துருவிற்கு கஷ்டமாக இருந்தது. முதலில் பார்த்த போது யாரென்றே தெரியாத நிலையில் இவள் எப்படி பேசினாள், ஆனால் இப்போது?

அவளை தான் கஷ்டப்படுத்தி விட்டோமோ, ஜோதி அண்ணி கிண்டல் செய்தவுடன் தான் அதை ஆட்சேபித்திருக்க வேண்டும். அதுவும் செய்யாமல் அவளை பார்த்து வேறு வைத்து விட்டேன். இப்போது அவள் மனது என்ன பாடு படுகிறதோ என்று அவளுக்காக அவன் வருந்தினான்.

ஏதும் பேசாமல் அந்த அறையிலிருந்து வெளியேறி விட்டான்.

இளவரசனிடம் இருந்து திட்டுவதற்காகவாவது போன் வரும் என்று இனியா எண்ணியிருக்க அவனோ அழைக்கவே இல்லை. தானே அழைத்து பேசலாம் என்று எண்ணி மொபைல் எடுத்து அவனின் எண்ணை பார்த்து விட்டு கால் மட்டும் செய்யாமல் விடுத்தாள்.

அவன் என்ன சொல்வானோ என்று அவளுக்கு பயமாக இருந்தது. அவனே அழைத்தாலாவது பரவாயில்லை. திட்டுவதற்காகவாவது பேசுகிறானே என்று எண்ணி மனதை தேற்றிக் கொள்ளலாம் என்று அவள் எண்ண அவன் அவளை அழைக்கவே இல்லை.

டுத்த நாள் கலையில் எழுந்து வந்த பவித்ராவினால் அந்த வீட்டில் நார்மலாக இருக்கவே இயலவில்லை.

மாடியில் இருந்து இறங்கி வந்தவளை எதிர் கொண்ட ராஜலக்ஷ்மி “வாம்மா. காபி சாப்பிடறியா, இல்லை டீயா” என்றார்.

“இல்லை. ஏதும் வேண்டாம் அத்தை. நான் அங்கே பெரியப்பா வீட்டுக்கு போகணும்” என்றாள்.

“என்னம்மா. காலையிலேயே அங்க போகணும்ன்னு சொல்ற.”

“இல்லத்தை. எனக்கு ப்ராஜெக்ட் பண்ணணும். அதுக்கு ஒரு கம்பெனிக்கு கூட்டிட்டு போறேன்னு பெரியப்பா சொன்னார். அதான்”

“ஓ. அப்படியா. சரி. ஆனா இவ்வளவு சீக்கிரம் அங்கே போய் என்ன பண்ண போற. சாப்டிட்டு அப்புறம் போ”

“பரவால்ல அத்தை. இப்ப பசிக்கல”

“அதெல்லாம் இல்லை. கொஞ்சமாச்சும் சாபிட்டுட்டு போ”

“ஆமாம்மா. சாப்டுட்டு போலாம்மா” என்று அவள் தந்தையும் வற்புறுத்தவே அவளால் ஏதும் சொல்ல இயலாமல் சாப்பிட அமர்ந்தாள்.

எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ராஜலக்ஷ்மி “நீ எங்கே மோகன் அங்கே போக போற” என்றார்.

“இல்லைக்கா. பவித்ராவை அங்கே கூட்டிட்டு போய் விட்டுட்டு வந்துடுவேன்”

“அதுக்கு எதுக்கு நீ போகணும். எனக்கு உன் கிட்ட பேச வேண்டியது நிறைய இருக்கு. இளவரசா நீ பவித்ராவை கூட்டிட்டு போய் விட்டுடுப்பா”

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.