(Reading time: 26 - 52 minutes)

ரு பாதி விழா இப்படி நகர, இரவு நேர திருவிழா இன்னும் கலைகட்டும். முக்கியமாக இளம் காளையர் கன்னியர்களுக்கு.. மாலை மயங்கி வானம் இருள் சூழ்ந்துகொள்ள இளம் காளையர்கள் எல்லாம் தங்கள் காளைகளில்(பைக்குகளில்) பறந்து வருவர், கன்னியர்களோ பலரை மயக்க போவது அறிந்தோ அறியாமலோ வண்ணமயமாக அலங்கரித்து வருவார்கள். கோவிலை சுற்றி இருந்த கடைகள் எல்லாம் கல்லாகட்ட துவங்கும் நேரம் அது. விளையாட்டு பொருட்கள், விதவிதமான பலூன்கள், அலங்கார பொருட்கள், சிறு சிறு பெட்டி கடைகள் எல்லாம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் கூட்டத்தால் கூடி இருந்தது. மஞ்சள் நிற ஒளி வெளிச்சத்தில் மிளிர்ந்த கண்ணாடி வளையல்கள், அவற்றை சுற்றி வளம் வரும் தாவணி அணிந்த கன்னி பெண்களை கவர்ந்து இழுக்கும். கடைகளோ அவர்களை சுண்டி இழுக்க அவர்களோ அங்குள்ள வீர தீர காளையர் மனங்களை சுண்டி இழுப்பர். எப்பேர்பட்ட ஆடவனாக இருந்தாலும் கன்னி பெண்ணின் கடைக்கண் பார்வையில் விழுந்துவிடுவான். அப்படி பல வீர தீர ஆடவர்களை கடைக்கண் பார்வையில் மயக்கிய பெருமைக்குரிய இடம் தான் கோவில் திருவிழா... 

பல நாள் குடும்ப பிரச்சனையால் பார்க்க முடியாத தன் அத்தை பெண், மாமன் பெண்களை எல்லாம் பார்த்து தன் காதல் பார்வையை வீசி விடுவதும், பலனால் காதல் பார்வைக்கு, விடை தருவதுமாக அமைவதுதான் இந்த திருவிழாக்கள். அத்தை பெண், மாமன் பெண் இருப்பவர்கள் ஒருபுறம் என்றால் அந்த கொடுப்பனை இல்லாத ஆடவர்கள் எல்லாம் ஊரில் உள்ள அத்தனை கன்னி பெண்களையும் தங்கள் மாமன் பெண்களாகவே எண்ணி காதல் பார்வை வீசுவர்... இதில் பலருக்கு அதிர்ஷ்டம் வருவதும் உண்டு, சிலருக்கு பலத்த அடிகள் வருவதும் உண்டு அது அவரவர் கொடுப்பனையை பொருத்தது.... இப்படி கன்னி பெண்களின் கூட்டம் ஒருபுறம் இளம் காளையர்கள் மறுபுறம் என்று கோவில் கலைகட்டும் மாலை நேரத்தில்....   

மாலை பொழுதும் தொடங்கி இருந்தது, “அஹல்யா இந்த விளக்கை போய் விநாயகற்கு ஏத்திட்டுவாம்மா, அஸ்வத் நீயும் கூட போயிட்டு வாப்பா” என்று துளசி கூற இருவரும் சென்றனர்.

“அம்மா எல்லாருக்கும் விளக்கு ஏத்தியாச்சுல? நான் போய் என் ப்ரிண்டுக்கு ஏத்திட்டு வரேன்” என்று கூறி அனுவும் விநாயகர் சன்னதிக்கு சென்றாள்.

“அக்கா நீ இங்கேயே இரு ஒரு 5 நிமிஷத்துல வந்திடுறேன்” என்று அவன் அனுவை தேட நகர, “என்னடா சைட்டா? நடத்து நடத்து” என்று அவள் தன் வேலையில் குறியாக இருந்தாள். அஸ்வத் வேறுபுறம் செல்வதற்கும் அனன்யா அங்கு வருவதற்கும் சரியாக இருந்தது.

“அச்சச்சோ தீப்பெட்டி வாங்காமல் வந்திட்டோமே” என்று தனக்கு தானே புலம்பியவாறு விளக்கை இன்னொரு விளக்கின் மூலம் ஏத்த சென்றாள்.

“இருங்க, இன்னொருத்தவங்க ஏத்தின விளக்கு மூலமா ஏத்த கூடாதுன்னு சொல்லுவாங்க” என்று அனுவை தடுத்து தன்னிடம் இருக்கும் தீப்பெட்டியை புன்முறுவலுடன் தந்தாள். முன்பின் தெரியாதவள்தான் ஆனால் அந்த விளக்கொளியில் அழகாய் மிளிர்ந்தாள், இப்படி ஒரு அழகான அண்ணி வந்தால் நல்லாத்தான் இருக்கும் என்று காரணம் புரியாமல் ஏக்கம் தழுவ வெறும் புன்முறுவலுடன் வாங்கி ஏற்றிவிட்டு மீண்டும் அஹல்யாவிடம் தந்தாள். சிறிது நேரம் மௌனமாக வேண்டுதலில் கரைய எவ்வளவுதான் தடுத்தாலும் வாய்மூட முயன்று தோற்று மனதில்பட்டதை கூறினாள் அனு.

“நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க..” என்று அவள் உண்மையாகவே கூற, முதலில் ஆச்சர்யமாக தோன்றினாலும் பெண்களுக்கே உரிய பெருமிதத்தில் கொஞ்சம் மனம் கூத்தாடியது, அஹல்யாவும் கஷ்ட்டப்பட்டு மனதை கயிர் கட்டி கிழே இறக்கி பதிலுக்கு “நீங்களும் தான்” என்று கூற, “பத்திங்களா பத்திங்களா பொய் சொல்றிங்களே நான் சொன்னதுக்காக சொல்லனும்னு இல்லை ஆனாலும் ஏதோ சொல்றிங்கலேன்னு ஒத்துக்குறேன்” என்று சிரிப்புடன் வழக்கம் போல் தன் குறும்பு பேச்சுடன் நிறுத்தினாள்.  

அவள் பேச்சில் சிரிப்புவர, “அதுசரி... நானும் நிஜமாத்தான் சொல்றேன்” என்று பேச்சு மெது மெதுவாக துவங்கியது. சிறிது நேரம் பேசியவர்கள் நன்றாக ஒட்டிக்கொண்டனர். உப்புசப்பான பேச்சு என்றாலும் அனுவின் குறும்புதனம் அதையும் ரசிக்க வைத்தது. வெகுநேரம் இப்படியே கழிய, “வாங்களேன் நானும் முன்னாடிதான் போகணும் நடந்துட்டே பேசலாம்” என்று அனு அழைத்தாள்.

“இல்லை என் தம்பி இந்த பக்கம் தான் போனான் அவன் வந்ததும் சேர்ந்து போய்க்குறேன் நீ கிளம்புறதுனா....” என்று பேசிக்கொண்டிருக்க அனுவின் பார்வை அஹல்யாவையும் தாண்டி பின்னால் சென்றது. சென்ற கண்கள் தன்னையே நம்ப இயலாமல் நிலைகுத்தி இருக்க, இதழின் ஓரம் லேசாக புன்முறுவல் எட்டிப்பார்த்தது, ஒரு மன்மத சிரிப்புடனே அவளை நோக்கி வந்தான் அஸ்வத். அனு உறைந்து இருப்பதை பார்த்து அஹல் முழிக்க, “யாராக இருக்கும்” என்று பின்னால் பார்த்தால் அஷ்வத் வந்துக்கொண்டிருந்தான்.

“ஆஹா நம்ம தம்பி தேடின பொண்ணு இவள் தானோ” என்று புரிந்துபோக ரகசிய சிரிப்புடன் விழி விலக்கிகொண்டாள்.

அனு சுதாரித்து விழி அகற்றிக்கொள்ள, சில நிமிடம் என்ன பேசுவது என்றே புரியவில்லை, “அக்கா எங்க போன? நான் தேடிட்டு இருந்தேன்”

“யாரு என்னை நீ தேடுனியா?” என்று குரலில் ஒரு நக்கல் இருந்தது. அவள் பேச்சு புரிய மெல்லியதாக இருவரும் சிரித்துக்கொண்டனர். அவளுக்கும் புரிந்துபோனது என்று அஸ்வத் அறிந்துக்கொண்டான் எனவே அவனே பேச்சை துவங்கினான்.

“இது அனு, என்னோட...” என்று அவன் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே இடையிட்டு, “ம்ம்ம்ம் புரியுது” என்று நடுவில் பேசியவளின் குரலில் மீண்டும் நக்கல் இருந்தது.

“ஃப்ரண்டு அக்கா...” என்று அவன் அந்த ப்ரண்டில் அழுத்தம் கொடுக்கலாமா வேண்டாமா என்று ரகமாக யோசித்து சொல்ல, “ம்ம்ம் அதைதான்பா நானும் சொன்னேன்” என்று அவளும் ரகமாக சொல்லி முடித்தாள்.

என்னடா நம்மை வைத்துக்கொண்டே இப்படி பேசிக்கொள்கிறார்களே என்று கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும் அவளையும் மீறி வெட்கம் தொற்றிக்கொண்டது. அவளும் கவனிக்காதது போல் வேறுபுறம் முகத்தை திருப்பிக்கொள்ள, அவளது தடுமாற்றம் புரிந்து போக “வா போகலாம்” என்று மூவரும் சேர்ந்து நகர்ந்தனர். அனு அவர்களிடம் விடைபெற்று வேறுதிசை சென்றாள். செல்லும் போது ஒரு நொடி அவளது பார்வை அவனிடம் படிந்துபோனது.

அமைதியாய் இதை ரசித்த அஹல்யாவிற்கு சிரிப்பாக இருந்தது. அவள் சென்றவுடன் அவன் தோள்மேல் கைபோட்டு “அந்த பொண்ணை என்னடா பண்ண? நீ வர வரைக்கும் லொடலொடனு பேசிட்டு இருந்தாள் இப்படி உன்னை பார்த்ததும் வார்த்தையெல்லாம் தந்தி அடிக்குது” என்று கிண்டல் செய்ய, என்னதான் அவள் கூறுவது கர்வமாக இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாமல் “சும்மா இரு அக்கா, ப்ரிண்ட்ஸ் தான்” என்று கூறி முன்னே நழுவி சென்றான்.

திரும்பி சென்றவளுக்கு அப்போது தான் நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது, இத்தனை நேரம் ஏதோ ஒரு உணர்வில் தன்வசம் இருக்க இயலாமல் தவித்தாள், அந்த பார்வை என்றும் பார்ப்பவன்தான் என்றாலும் இன்று அவன் பார்வையில் என்ன இருந்தது, ஏன் சுத்தமாக பேச முடியவில்லை? ஏன் இவ்வளவு தடுமாற்றம்? இவ்வளவு படபடப்பு? அப்படியே ஆளை முழுங்கும் பார்வை அப்பப்பா என்று மனதில் நினைத்து சிரித்துக்கொண்டாள், அப்போது தான் உணர்ந்தாள் முதல் முறையாக அவன் தன்னை தாவணியில் பார்க்கிறான் என்று நினைத்தவளுக்கு மேலும் முகம் சிவக்க, கட்டுபடுத்தி தன்னை திசை திருப்பிக்கொண்டாள்.     

மீண்டும் கடைகளில் குடும்பத்தோடு சேர்ந்துக்கொண்டு, “அண்ணா என்கூட வரியா? போய் ஒரு பலூன் ஒரு குச்சிமிட்டாய் வாங்கலாம்?” என்று அவள் வினவ, “ஏன்டி இது உனக்கே கொஞ்சம் ஓவராய் இல்லை, நீ என்ன சின்ன குழந்தையா? இல்லை ஜெனிலியாவா?” என்று கிண்டலாக கேட்டான் அர்ஜுன்.

“ஏன் ஜெனிலியா தான் இப்படி கேட்கனுமா? எனக்கு ரெண்டுமே புடிக்கும் ரெண்டுமே வேணும்” என்று அடம் பிடித்தாள்.

கடவுளே என்று நொந்துக்கொண்டு இருவரும் அதை வாங்க சென்றனர். வாங்கிக்கொண்டு திரும்பி வருகையில், “பலூன் கூட பரவாயில்லை வாலு எல்லா பொண்ணுங்களுக்கும் புடிக்கும்...”என்று அவன் பேச்சை முடிபதற்குள் அனு தொடர்ந்தாள், “எல்லா பொண்ணுங்களுக்கும் புடிக்கும்னு உனக்கு எப்படி தெரியும் அண்ணா?” என்று அவனை பார்த்து ரகசியமாய் சிரித்தவாறு கேட்டாள்..

அவனது லியா ஒருமுறை ஆசையாக அவனை வாங்கி அனுப்ப சொன்ன பொழுது உணர்ந்தது தானே அதை எப்படி சொல்லுவது என்று வேகமாக யோசித்து “அது... எல்லாம் ஒருபோது அறிவுதான்” என்று சிரிப்பினூடனே கூறினான்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.